கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான விசேட கூட்டம் ஒன்று வரும் திங்கள் கிழமை(03-02-2020) காலை பத்து மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமாரின் பணிப்பின் பேரில் அவரது தலைமையில் இக் கூட்டம் இடம்பெறவுள்ளது என மாவட்டச் செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் பொது அமைப்புக்கள், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, மரம் கடத்தல், கஞ்சா கசிப்பு நடவடிக்கைகள், ரவுடிகளின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அக் கூட்டத்தி்ல் ஆராயப்பட்டு அவற்றைக் கட்டுப்படுத்தும் நடிவடிக்கைகள் மேற்கொள்ளும் தீர்மானங்களும் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விசேட கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், வட மாகாண சிரோஸ் பிரதி காவல்துறை அத்தியட்சர், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை அத்தியட்சர், கிளிநொச்சி படைகளின் தளபதி, கிளிநொச்சி சிரேஸ்ட காவல்துறை அதிகாரி, கிளிநொச்சியில் உள்ள அனைத்து காவல்துறை நிலையங்களின பொறுப்பதிகாரிகள், கணியவளத் திணைக்களம், வனவளத்திணைக்களம், பிரதேச செயலாளர்கள், நீர்ப்பாசனத்திணைக்களம், சுகாதார திணைக்களம், பொது அமைப்புக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்