மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் “பகிடிவதை – எம் பல்கலைக்கழகங்கள் அடக்குமுறையின் அடிப்படை பயிற்சிக்கான நிலையங்களா?” எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு கிழக்கு பல்கலைக்கழக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி திருமதி. மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், சட்டத்தரணி விஜயகுமார் சிறப்பு வளவாளராக கலந்துகொண்டு, சட்டத்தின் பார்வையில் பகிடிவதை எவ்வாறு நோக்கப்படுகின்றது என்பதை முன்னிறுத்தி சமகாலத்தில் பிரச்சினையாக பேசப்படும் பகிடிவதை தொடர்பாக சமூக மக்கள் மத்தியிலும், இவ்வாறான சட்ட விழிப்புணர்வுகள் மாணவர்கள் மத்தியில் செய்யப்படுவது தொடர்பான அறிவு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் விரிவுரையாற்றினார்.
இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி. கென்னடி, தொழில் வழிகாட்டல் பிரிவு பணிப்பாளர் கலாநிதி. இளங்கோ உட்பட வலையமைப்பின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
அருவி பெண்கள் வலையமைப்பானது, மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி இம்மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி பெண்களின் பாதுகாப்பு விடயத்தில் அக்கறை செலுத்துதல் மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் முன்னணி அமைப்பாக ஏழு வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகின்றது.
இவ்வமைப்பு தமது 2020, 2021ம் ஆண்டுக்கான செயற்திட்டத்தில் இளவயதுப் பெண்களை மையப்படுத்தி பல்வேறு செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.