உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான (ஈபி.ஆர்.எல்.எப்)இன் வவுனியா மாவட்ட செயலாளர் அருந்தவராஜா மேழிக்குமரன் அவர்கள் தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகெங்கும் பாரிய பேரிடராக மாறி மக்களைப் பலி எடுத்து வருகின்றது. சுமார் ஒன்றரை இலட்சம் பேரை காவு கொண்ட கொரோனா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனாவின் கோரத் தாண்டவம் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது.
கொரோனா வைரசின் அச்சுறுத்தல் இலங்கையிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் முன்னூறு பேருக்கு மேற்பட்டோர் இவ்வைரசால் பீடிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் இதுவரையில் மரணமடைந்துள்ளனர். அதே வேளை நூற்றுக்கு மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுயபொருளாதாரத் தேவையின் அவசியத்தையும், வீட்டுத் தோட்டங்கள் எங்கும் பெருக வேண்டும் என்ற நன்நோக்கத்தையும் வைரஸ் தந்த பாடங்களில் ஒன்றாகப் பார்க்க முடிகின்றது.
ஒரு புறம் கொரோனா வைரசின் தாக்கங்களும், அழிவுகளும் பெருகிவரும் வேளையில் மறுபுறம் பட்டினிச் சாவை எதிர்நோக்கும் மக்களின் வாழ்வியல் கொடுமைகளும் அரங்கேறி வருகின்றன. தினசரி கூலி வேலைகளுக்காக செல்பவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், கர்பினித் தாய்மார்கள் ,விசேட தேவைக்குட்பட்டோர் போன்றோரின் பசிக்கொடுமை இலங்கையில் அதிகமாகவே காணப்படுகின்றது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் வன்னிப்பிராந்தியக் குழுவினர் இம்மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டனர். கட்சியின் தோழர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், நண்பர்கள் என மிகப்பெரிய குழுவினர் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் என ஆங்காங்கு நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். அதுபோல பல கிராம மட்டங்களில் பல இளைஞர்கள், யுவதிகள் தாமாகவே முன்வந்து எங்களுக்கு தோள் கொடுத்தமை பாராட்டுக்குரியது.
எமது இந்த நிவாரணப் பணிகளுக்காக பலர் நிதிஉதவி வழங்க முன்வந்தனர். அதுவும் புலம்பெயர் தேசத்து உறவுகளின் பங்களிப்பு அளப்பரியது. அதுபோல பல அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் வழங்கிய உதவிகள் என்றும் நன்றிக்குரியவை.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற வாசகத்திற்கிணங்க நிவாரணப் பணிகள் ஆங்காங்கு மேற்கொள்ளப்பட்டன. நாம் மட்டுமல்லாது ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பல கோயில்களின் நிர்வாகத்தினர், ஊடகவியலாளர்கள், மன்றங்கள், சங்கங்கள், ஒருசில அரசசார்பற்ற நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், புலம்பெயர் அமைப்புகள், புலம்பெயர் தனிநபர்கள், தனவந்தர்கள் என பல்வேறு நிறுவனங்களும், பொதுமக்களும்; வன்னியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டமை பாராட்டுக்குரியது.
கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடும் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள்,அரசஊழியர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். அதே வேளை கொரோனாத் தொற்றால் பட்டினிச்சாவை எதிர்நோக்கியவர்களை நோக்கி நிவாரணக் கரங்களை நீட்டிய அனைவரும் கூட போற்றப்பட வேண்டியவர்களே!
நிவாரணப்பணிகள் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. நிதித் தேவைகளை பூர்த்தி செய்தல், பொருட்களை கொள்வனவு செய்தல், பொதியிடுதல், வாகனங்களுக்கும், நிவாரணப்பணிகளில் ஈடுபடுபவர்களுக்குமாக அனுமதிப்பத்திரங்களை (பாஸ்) எடுத்தல், நிவாரணத் தேவையுடையோரை இனங்கண்டு அவர்களுக்கு நிவாரணத்தை சரியாக கிடைக்கச் செய்தல் என நீண்ட சங்கிலித் தொடர்போன்ற வேலைத் திட்டங்களை மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் கொரோனா அச்சுறுத்தலைப் பாராது முழு அர்ப்பணிப்புடன் கடந்த ஒரு மாதகாலமாக தமது பங்களிப்பை செய்தமையும் பாராட்டப்படவேண்டிய விடயமாகும்.
ஒரு சில இடங்களில் மக்கள் பட்டினியால் இராணுவ முகாம்களில் தங்களுக்கு உணவு வழங்குமாறு தஞ்சமடைந்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. உலக அனர்த்தமாக மாறிப்போயுள்ள கொரோனாவின் தாக்கத்தினால் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் கூட மக்கள் உணவுக்காக நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. இவற்றை நோக்கும்போது மிகப் பலம் பொருந்திய பட்டினிச்சாவை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்துள்ளோம். எம்மாலானவரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்துள்ளது. ஆனாலும் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலையை நாம் புரிந்து கொண்டோம். அரசு செய்ய வேண்டிய மிகப்பெரிய வேலைத்திட்டத்தினை நாம் ஒரு சிலர் ஒன்றிணைந்து எம்மாலானவற்றை செய்து முடித்துள்ளோம்.
ஊரடங்கு சட்டத்தினால் மரக்கறிகளை விற்க முடியாது கஷ்டப்பட்டனர். எம்மால் முடிந்தவரை விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் மரக்கறிகளை வாங்கி மக்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளோம். மக்களுக்கு திணைத்துணையாக நாம் செய்த நிவாரண உதவிகளை அவர்கள் பனைத்துணையாக கொண்டமையை அவர்களின் முகங்களில் கண்டு இன்புற்றோம்.
பங்குனி மாதம் 25ம் திகதி முதல் சித்திரை 20ம் திகதிவரை வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பிரதேசங்களில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் 9323 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் மேலும் 55 குடும்பங்களுக்கு 5000ரூபா வீதம் ரூபா 270000 பகிர்ந்தளிக்கப்பட்டது. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் எம்மால் இலவச மருத்துவ முகாமும் நடாத்தப்பட்டுவருகின்றது என்பதுடன் தொடர்ந்தும் எமது பணி யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.