மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் கண்டறியப்பட்டால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இதுவரை நடைமுறைப்படுத்திய வேலைத்திட்டங்களை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மதுபான விற்பனை நிலையங்களுக்கு அருகில் அதிகளவில் மக்கள் கூடுவதை காணமுடிந்தது.
இப்படி மக்கள் கூடும் இடங்களில் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டால், அந்த நோயாளி ஊடாக நோய் பரவும் விதம் மற்றும் குழுக்களாக நோய் தொற்றியவர்கள் இருக்கும் இடங்களை அடையாளம் காண்பது சிரமமானதாக இருக்கும்.
மதுபான விற்பனை நிலையங்களின் சூழலில் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டால் நாம் மீண்டும் ஆரம்ப இடத்திற்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.
கூடும் மக்களுக்கு மத்தியில் வைரஸ் சிலருக்கு பரவி, அவர்கள் தமது வீடுகளில் இருக்கும் நபர்களுடன் பழகும் போது இறுதியில் கொத்துக் கொத்தாக நோயாளிகளை அடையாளம் காண நேரிடும்.
ஊரடங்குச் சட்டம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இதற்கு முன்னர் நாம் செயற்பட்டோம். இப்படியான நிலைமைகளில் மக்கள் கூட்டமாக கூடுவது குறைவு.
எனினும் தற்போதைய நிலைமை தொடர்ந்தால், நிலைமை கைமீறி செல்லலாம் எனவும் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோயாளியுடன் சம்பந்தப்பட்டவர்களை பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மத்தியில் கண்டறிய நேரிடும். இந்த நபர்கள் பல இடங்களுக்கு பரவிச் சென்றால் நிலைமை மிக மோசமாக மாறும்.