ஏப்ரல் 19ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் இருக்காது என தான் கூறவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
தான் அவ்வாறு கூறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தினாலும் அது பொய் பிரச்சாரம் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் சுகாதார துறையினர் வழங்கும் ஆலோசனைகளை பின்பற்றினால், இரண்டு மாதங்கள் செல்லும் முன்னர் கொரோனா வைரஸ் பரவிச் செல்வதை தடுக்க முடியும் என்பதால் 50 வீதமான பொறுப்பு மக்களுக்கே இருப்பதாகவே தான் கூறியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் தமது கடமையை செய்தால், நாட்டில் கொரோனா நோயை ஒழிக்க முடியும். அதேவேளை கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை மறைக்கும் எந்த தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை.
எனினும் மக்களில் எவருக்காவது கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டால், மாவட்டத்தில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுமாறும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.