கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது ஒளவையின் சொல். அழியாத செல்வம் கல்வி என்பது வள்ளுவன் வகுத்த நெறி. வாழ்வின் வெற்றிக்காண ஏணிப்படி கல்விதான். எப்படிப்பட்ட கல்வி? எந்தச் சபையிலும் நிமிர்ந்து நிற்கச் செய்கிற தரமான கல்வி. உலகின் எந்தக் குடிமகனோடும் ஒப்புநோக்க ஒரு மாற்று குறைவாத கல்வி. அப்படிப்பட்ட கல்வி இங்கு அனைவருக்கும் கிடைப்பதில்லை. வளர்ச்சியின் ஏதோ ஒரு புள்ளியில் கல்வி என்பதே பணம் கொழிக்கும் ஒரு துறையாகிப் போனதன் துர்விளைவு.
தரமான கல்வி அனைவருக்கும் கிடைப்பதில்லை. சரி பள்ளியில் புரியாததை வெளியே டியூஷன் வைத்துப் புரிந்து கொள்ளலாம் என்று நினைத்தாலும் பெரும்பான்மை இந்தியச் சமூகத்திற்குப் பண வசதியும் இல்லை. பணம் கொடுத்துப் போனாலும் டியூஷன் செண்டரில் செண்டம் எடுக்க எவற்றை மனனம் செய்யவேண்டுமோ அவைதான் கற்றுக்கொடுக்கப்படுகிறது. வெறும் மதிப்பெண்களுக்கு மட்டும் உதவக்கூடிய ஒரு தற்காலிக ஊட்டச்சத்து போல.
எந்தப் பாடத்திலும் அடிப்படைகளை ஐயம் திரிபற கற்று முழுமையாக விளங்கிக்கொண்டு படிப்பதே சிறந்த கல்வி என்கின்றனர் கல்வியாளர்கள். எளிய உதாரணங்களுடன் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்தி கற்றுக்கொண்டால் அக்கல்வியின் பலன் வாழ்நாள் முழுக்க வந்து உதவும். நமது கற்றுக்கொடுக்கும் முறையில் நவீன காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்பங்களும் முறைமைகளும் மாணவர்களைச் சென்றடையவில்லை என்றே சொல்லலாம்.
நம் சமூகத்தில் மேல் தட்டு வர்க்க குடும்பத்தின் குழந்தைகளுக்கு கிடைக்கும் தரமான கல்வி நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர குடும்பப் பின்னணியில் உள்ள மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்த இடைவெளியை போக்க வேண்டும் என்று நினைத்தார் பள்ளி மாணவரான ஆதித்யா. இவர் அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு மாணவர். கொரானா விடுமுறை துவக்கத்தில் பள்ளிகள் விடுமுறையில் இருந்தது. இதைப் பயனுள்ளதாக்க அமெரிக்காவில் உள்ள சில ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக டியூஷன் எடுத்துள்ளார் ஆதித்யா. அதில் உற்சாகத்துடன் செயல்பட்டு வந்த ஆதித்யாவுக்கு அவரது அம்மா காயத்ரி இந்தியாவில் இது போன்று மாணவர்களுக்குப் புரியும் வரையில் தொழில்நுட்ப உதவியுடன் கல்வி கிடைப்பதில்லை. நமது நாட்டுக்கும் இது போன்ற சேவை கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அன்னையின் சொற்களை வேதமென எடுத்துக் கொண்ட ஆதித்யா தன் நண்பர்கள் நிகில் தேவராஜ் மற்றும் அனிருத்துடன் இணைந்து எஜூகேஷனிஸ்ட் டியூடரிங் சர்வீஸைக் கடந்த மே மாதத்தில் துவங்கியுள்ளார். இந்த சேவையை ஒரு அரசு சாரா லாப நோக்கற்ற அமைப்பாக உருவாக்கி இலவசமாக ஆன்லைன் வழியாக டியூஷன் சேவை வழங்கி வருகிறார்கள். தற்போது இந்தியாவில் 6 முதல் 13 வயது உள்ள மாணவர்களுக்குப் (ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயில்பவர்கள்) பாடங்களை எடுக்கிறார்கள். வகுப்புகள் அமெரிக்கக் கல்விமுறையின் உயர்தரத்தில் அடிப்படைகளைத் துல்லியமாக விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆரம்பத்தில் ஆதித்யா, நிகில், அனிருத் ஆகியோர் மட்டும் பாடங்களை எடுத்துள்ளார்கள். இவர்களால் ஊக்கம் பெற்ற பல மாணவர்களும் பிற்பாடு இந்த அரும்பணியில் இணைந்தனர். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்களும் தன்னார்வலர்களாக இவர்களுடன் இணைந்து ஆன்லைனில் இந்திய மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கின்றனர். அமெரிக்காவில் இருந்து மட்டுமல்லாமல் தற்போது மும்பை மற்றும் தமிழகத்தில் இருந்தும் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். ஆதித்யா துவங்கியது இப்போது பெரும் இயக்கமாக மாறிவிட்டது.
ஆங்கிலம், அறிவியல், கணிதம், அடிப்படை கம்ப்யூட்டர் கோடிங், செஸ் விளையாட்டு ஆகியவற்றுக்குப் பாடம் சொல்லித்தரப்படுகிறது. மாணவர்களுக்குப் புரியும் வரையில் ஒவ்வொரு கான்செப்ட்டும் பொறுமையாகவும், உற்சாகத்துடனும் எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பும் 35 நிமிடங்கள் வரை இருக்கும். வீடடங்கில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் முடங்கிக் கிடக்கும் எண்ணற்ற ஏழை எளிய மாணவர்கள் தங்கள் அமெரிக்க நண்பர்களின் உதவியால் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் தங்கள் கல்வியைத் தொடர்கிறார்கள்.
இந்தச் சேவை குறித்து ஆதித்யா கூறுகையில் அடிப்படைக் கல்விக்கான அஸ்திவாரம் ஆழமாகப் போடப்பட்டால் படிப்பில் மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பார்கள். எனக்கு கிடைத்த தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனே இந்தச் சேவையைத் துவங்கினேன். எங்களுடன் இணைந்து தன்னார்வலர்களாகப் பங்காற்ற ஆர்வமுடையவர்களை வரவேற்கிறோம். அதற்கு எங்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்று கூறினார். தொடர்புக்குhttpseducationisttutoring.org, educationisttutoring@gmail.com
எத்தனையோ அப்ளிக்கேஷன்களின் விளம்பரங்கள் அன்றாடம் டிவியில் வருகிறது. அவற்றின் விலை பல பத்தாயிரங்களில். ஏழை மாணவர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அப்படியே வாங்கினாலும் கூட ஒருவர் கற்றுக்கொடுக்கும் அனுபவம் இந்த செயலிகள் வழி கற்றலில் நிச்சயம் கிடைக்காது. மாணவர்கள் உணர்ச்சிகரமானவர்கள். அவர்களின் மனநிலைகள் குழப்பங்கள் சந்தேகங்களை டிவைஸ்கள் புரிந்துகொள்ளாது.
கொரானாவினால் கல்வி கற்பதில் பெரும் இடைவெளி உருவாகி உள்ளது. முற்றிலும் இலவசமான இது போன்ற சேவைகளை இந்திய மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.