கொரோனாவினால் பின்னடைவை சந்தித்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பாமல் அரசாங்கம் தான்தோன்றிதனமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (03) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,
“கிளிநொச்சியில் கடற்றொழிலை நம்பி வாழ்பவர்களாக பெரும்பாலானோர் இருக்கின்றார்கள். அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே தங்களது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றனர். எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்ந்த நிலைமைக்கு கொண்டு செல்லும் வகையில் சிறந்த திட்டங்களை நிச்சயம் நான் முன்னெடுப்பேன்.
என்னை வெற்றியடைய செய்தால் எதிர்வரும் காலங்களிலும் காணி மற்றும் வீடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வை வழங்க செயற்றிட்டங்களை நிச்சயம் முன்னெடுப்பேன்.
கிளிநொச்சி – யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு எமது கட்சியை சார்ந்தவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, அதனூடாக தீர்வை பெற்றுக்கொடுப்பேன்.
கிளிநொச்சியில் 95 கிராம சேவகர் பிரிவில் 397 கிராமங்கள் உள்ளன. இவைகளுக்கு சிறந்த அபிவிருத்திகளை முன்னெடுப்பேன். தொழிலற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை வறுமைக்கோட்டிலுள்ள அனைத்து மக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் வழங்குவேன்.
2011ம் ஆண்டு உலகக்கிண்ண ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக இலங்கையின் சிறந்த வீரர்களான மஹேல ஜெயவர்தன, குமார் சங்ககார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் தற்போதைய அரசாங்கத்தினால் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள்.
இந்த வீரர்கள், நாட்டை ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும். ஆனால் தற்போதைய அரசாங்கம் அவர்களின் கௌரவத்தை பாதிக்கும் வகையில் செயற்படுகின்றது. ஆகவே நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் கௌரவத்தை பாதுகாப்போம்.
அத்துடன் அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது தொடர்பாக சிந்திக்காமல் வீணாக இந்த விவகாரத்தில் நேரத்தை செலவிடுகிறது.” – என்றார்.