ஜூலை 15, 1945 ம் ஆண்டு எங்கள் ஊரின் வாசிகசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று 75 ஆண்டுகள் கடந்தும் இயக்கத்தில் உள்ளது.
வாசிப்பு பழக்கம் என்பது இன்று வேறு வடிவம் பெற்றுள்ளது. முன்னோர்கள் காலத்தில் அதன் வடிவமும் தேவவையும் எவ்வாறு இருந்து பின்னைய காலங்களில் எவ்வாறான மாற்றம் கொண்டு வந்துள்ளது என்பதனையும் அறிவோம்.
குறிப்பாக இன்று நிலவும் இந்த உலகடங்கு நிலையில் பொது இடத்தில் சென்று வாசிப்பது என்பதோ அல்லது நூல்கள், புதினங்கள் வாசிப்பது என்பதோ உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது.
அன்றொருநாள் எங்கள் ஊரில் ஒருவருக்கு தந்தி வந்ததாம். அதனை வாங்கிப் பார்த்து தகவலை அறியமுடியாமல் அந்த தந்தி கொண்டுவந்த அஞ்சலக ஊழியரிடமே திருப்பிக் கொடுத்து அனுப்பி விட்டனராம் வந்த தந்திக்கு சொந்தமானவர். இந்த சம்பவம்தான் ஊரவரை வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களாக உருவாக்க வேண்டும் என்ற பொறி உருவானதாக தந்தையார் சொல்லுவார். அடுத்த சந்ததியினை வாசித்து கையெழுத்து போடும் சந்ததியாகவேனும் மாற்றவேண்டும் என ஊரவர், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து இந்த வாசிகசாலையை உருவாக்கியதாக கூறுவார்.
திரு. ஆசைப்பிள்ளை என்னும் முதியவர் வாசிகசாலைக்கான காணியை வழங்க ஊரவர்களின் ஒத்தாசையுடன் நாவற்குழியூர் நடராசன், பண்டிதர் சு வேலுப்பிள்ளை (சு.வே), க.வ. தியாகராஜா ஆசிரியர் போன்றோர் தூணாக நிற்க ‘பாரதி வாசிகசாலை’ உருவானது.
தொடர்ந்து பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் திரு. பூபாலசிங்கம் அவர்கள், திரு. மு.கார்த்திகேசன் ஆசிரியர், தொழிற்சங்க சம்மேளன பொதுக் காரியதரிசி ஆசிரியர் திரு. அ. வைத்திலிங்கம் அவர்கள், முன்னாள் நியமன பாராளுமன்ற உறுப்பினர் திரு. மு. க. சுப்பிரமணியம் அவர்கள், திரு. டொமினிக் ஜீவா அவர்கள், முன்னாள் கொழும்பு மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. பீற்றர் கெனமன் அவர்களை விருந்தினர்களாக அழைத்து ஆண்டு விழாக்களும் சிறப்பு கூட்டங்களும் நடைபெற்றது. 1948ம் ஆண்டு நடைபெற்ற ஆண்டு விழாவின் பொழுது தமிழ்நாட்டின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் வருகைதந்து ‘தமிழரின் வருங்காலம்’ எனும் சொற்பொழிவும் இடம்பெற்றது.
தலைமுறைகள் கடந்தும் இன்று வரைக்கும் இயக்கத்தில் இருந்து வருகின்றது என்பது மகிழ்ச்சியே.
இந்த முறை 75வது ஆண்டு நிறைவை கொண்டாட வேண்டும் என விரும்பியிருந்தும் அதற்கான பூர்வாங்க வேலைகைளை ஆரம்பித்து இருந்தாலும் – உலகம் இருக்கிற இக்கட்டில் அது சாத்தியப்படவில்லை என்பதும் வேதனையே.
-சேகர் தம்பிராஜா