நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள மத்திய நிலையத்தில் இடம்பெற்று வருகிறது.
ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிகளின் தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியதோடு, அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்குப் பின்னர் ஏனைய வாக்குகள் எண்ணும் பணியும் ஆரம்பாகி இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் 73 சாதாரண வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் 16 தபால் மூல வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் வாக்குகள் எண்ணும் பணி இடம்பெற்று வருகிறது.
யாழ்ப்பாணத்தில் அதிகாரபூர்வமான முதலாவது முடிவு முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், வவனியாவிலும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அந்தவகையில் வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த 141 வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நேற்றுமாலை வாக்கெண்ணும் நிலையங்களிற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வாக்கெண்ணும் பணிகளிற்காக வவுனியா மாவட்ட செயலகத்தில் 18 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான தபால் வாக்குகள் எண்ணுவதற்காக காமினி தேசிய பாடசாலையில் 13 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த செயற்பாடுகளில் 2000இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.