தாய்லாந்தில் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள் இருவருக்கு அந்த நாட்டின் அரசர் மன்னிப்பு வழங்கியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றிருந்த இருவரும் அரசரின் மன்னிப்பு ஆணையை அடுத்து ஆயுள் தண்டனையை அனுபவிக்க உள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு தாய்லாந்தின் பிரபலமான சுற்றுலா தீவான கோ தாவோவில் பிரித்தானியாவின் ஜெர்சியைச் சேர்ந்த டேவிட் மில்லர் (24), நோர்போக்கைச் சேர்ந்த ஹன்னா வித்தரேஜ் (23) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பர்மிய தொழிலாளர்களான ஜா லின் மற்றும் வின் ஸா ஹ்டூன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டில் விசாரணை முடிக்கப்பட்டு இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் மரண தண்டனை பெற்ற பர்மிய குற்றவாளிகள் இருவரும் தாய்லாந்து அரசரிடம் மன்னிப்பு கோரி முறையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தாய்லாந்து அரசர் குற்றவாளிகள் இருவரது மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார்.
மேலும் குறித்த குற்றவாளிகள் இருவருக்கும் நல்ல நடத்தை காரணமாக அவர்களின் சிறை தண்டனை காலத்தை குறைக்கவும் சட்டத்தில் இடமிருப்பதாக அவர்கள் சார்பில் வாதாடியுள்ள சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பிரித்தானியர்களான மில்லர் மற்றும் வித்தரேஜ் ஆகிய இருவரும் அடித்தே கொல்லப்பட்ட நிலையில் கடற்கரையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.
அத்துடன் உடற்கூறு ஆய்வில், வித்தரேஜ் பலாத்காரத்திற்கு இலக்காகியுள்ளதும் கண்டறியப்பட்டது.
இந்த வழக்கில் கைதான பர்மிய தொழிலாளர்கள் இருவரின் நண்பர்கள் வெளியிட்ட தகவல்கள் அப்போது விவாதத்தை கிளப்பியது.
மேலும் உயரதிகாரிகளின் கட்டாயத்தின் பேரில் இந்த கொலைப்பழியை அவர்கள் ஏற்க நேர்ந்தது என தெரிவித்திருந்தனர்.
அது மட்டுமின்றி, சர்வதேச பத்திரிகைகளின் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க பொலிசாரும் கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணை முன்னெடுக்கப்படவில்லை என்றே சர்வதேச குற்றவியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனினும் , இதுவரை எத்தனை கொலைக்குற்றவாளிகளுக்கு தாய்லாந்து அரசர் மன்னிப்பு வழங்கினார் என்பது மர்மமாகவே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.