போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய்மார்களின் 46 குழந்தைகளை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தாய்மர்களினுடைய 46 குழந்தைகள் தொடர்பாக தேசிய செய்தித்தாலொன்றில் வெளியான செய்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பாக உடனடி கவனம் செலுத்திய கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குழந்தைகளின் விடுதலை மற்றும் எதிர்காலம் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் மீள் சீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லேக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசியினூடாக அறிவுறுத்தியுள்ளார்.
கர்ப்பிணியாக இருந்தபோது சிறையில் அடைக்கப்பட்ட குறித்த தாய்மார்களுக்கு புதிதாகப் பிறந்த 46 குழந்தைகள், ஐந்து வயதிற்குட்பட்டவர்கள், தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் தங்களது தாய்மார்களின் காவலில் உள்ளனர்.
பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த குழந்தைகள் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஊடக பிரிவு சிறைச்சாலைகள் மீள் சீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லேவிடம் விசாரித்தது.
இது தொடர்பான அனைத்து தகவல்களும் பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் சேகரிக்கப்பட்டு வருவதாக கௌரவ அமைச்சர் தெரிவித்தார். குழந்தைகளை விடுவிப்பதற்கான சட்ட பின்னணி மற்றும் நடவடிக்கை குறித்து மிக விரைவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விளக்கமளிக்கவுள்ளேன் என்று அவர் கூறினார்.
இது குறித்து சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உ புல்தெனியவிடமும் பிரதமர் ஊடக பிரிவு விசாரித்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், பெரும்பாலான தாய்மார்கள் விளக்கமறியலில் கைதிகாளாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சிறைச்சாலைகள் மீள் சீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லேவிடம் குறித்த சம்பவம் தொடர்பான தகவல்கள் விரைவில் வழங்கப்படும் என்று ஆணையாளர் துஷார உ புல்தெனிய மேலும் தெரிவித்தார்.