Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் கண்ணம்மா கண்ணம்மா பாடலின் பின்னணி | யுகபாரதி நெகிழ்ச்சி

கண்ணம்மா கண்ணம்மா பாடலின் பின்னணி | யுகபாரதி நெகிழ்ச்சி

7 minutes read

#ஒருபாட்டு,
கொஞ்சம் பின்னணி: 20
கண்ணம்மா கண்ணம்மா

காதலும் பக்தியும் வெவ்வேறு இல்லையென ஆண்டாளுக்குப் பிறகு அறிந்த ஒரே தமிழ்க்கவி பாரதிதான். எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாளின் கண்ணேறுக்கு ஆளான கண்ணன், பதினோரு நூற்றாண்டுக் கழித்துவந்த பாரதிக்குக் கண்ணம்மாவாகக் காட்சியளிக்கிறான்.

சுட்டும்விழிச்சுடரைச் சூரியனாகவும் சந்திரனாகவும் பார்க்கத் தெரிந்த அவனே, `கண்ணம்மா’ எனும் பெயர்ச்சொல்லைக் காதலுக்குத் தந்திருக்கிறான். அவன் சொற்களில் மயங்கிய பதின்மத்தில் காணும் பெண்களெல்லாம் கண்ணம்மாவாகத் தெரிந்தார்கள்.

காட்சிக்கினிய அக்கண்ணம்மாக்களைக் கசிந்துருகிக் காதலித்திருக்கிறேன். ஆனால், சொன்னதில்லை. காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையென்று வாலி எழுதுவாரே அப்படி. என் விஷயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கண்ணம்மாக்கள். அவர்களில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுப்பதா எனும் தயக்கத்தில் நல்ல வாய்புகளும் நழுவிப்போயின. சின்ன்ஞ்சிறு கண்ணம்மாக்கள், செல்வக் களஞ்சியங்கள்.

தவிர, கண்ணம்மாக்களின் கருணையினால் விளைவதே காதல். தேவுடு காப்பவரையெல்லாம் தேவதைகள் ஆசீர்வதிப்பதில்லை. ஒரு பறவை, உண்ட கனியின் விதையை எங்கே உமிழுமென யாருக்கும் தெரியும்? இருந்தாலும், என் வீட்டில் கண்ணம்மாக்களுக்குப் பஞ்சமில்லை.

Image may contain: 1 person, text

தவிர, கண்ணம்மாக்களின் கருணையினால் விளைவதே காதல். தேவுடு காப்பவரையெல்லாம் தேவதைகள் ஆசீர்வதிப்பதில்லை. ஒரு பறவை, உண்ட கனியின் விதையை எங்கே உமிழுமென யாருக்கும் தெரியும்? இருந்தாலும், என் வீட்டில் கண்ணம்மாக்களுக்குப் பஞ்சமில்லை.

முதல் கண்ணம்மா என்னைப் பெற்றவளாகவும், இப்போதைய கண்ணம்மா நான் பெற்ற மகளாகவும் இருக்கிறார்கள். இடையிலே மனைவியாகிய கண்ணம்மாவைச் சொல்லாமல் விடமாட்டேன்.
எல்லா ஆண்களின் வாழ்விலும் ஓரிரு கண்ணம்மாவும் அவர்களைப் பற்றிய கதைகளும் உண்டு.

ரூப வடிவிலும் அரூப வடிவிலும் கண்ணம்மாவை கண்ட பாரதி பாக்கியசாலி, தெரிந்த தெரியாத உள்ளொளி முழுவதையும் அவன் ஒருவனே கண்ணம்மாவாக்கிக் காதலித்திருக்கிறான். அவன் காதலுக்கு முன்னால் நாம் செய்வதெல்லாம் சும்மா.
எனக்கும் டி.இமானுக்கும் வெகுநாளாக ஒரு விருப்பம். கண்ணம்மாவை வைத்து ஒரு பாடலையேனும் அமைக்கவேண்டும் என்பதே அது.

Image may contain: 1 person, beard

ரூப வடிவிலும் அரூப வடிவிலும் கண்ணம்மாவை கண்ட பாரதி பாக்கியசாலி, தெரிந்த தெரியாத உள்ளொளி முழுவதையும் அவன் ஒருவனே கண்ணம்மாவாக்கிக் காதலித்திருக்கிறான். அவன் காதலுக்கு முன்னால் நாம் செய்வதெல்லாம் சும்மா.
எனக்கும் டி.இமானுக்கும் வெகுநாளாக ஒரு விருப்பம். கண்ணம்மாவை வைத்து ஒரு பாடலையேனும் அமைக்கவேண்டும் என்பதே அது.

காரணம், என் வீட்டில் ஒன்றும், அவர் வீட்டில் இரண்டுமாக மூன்று கண்ணம்மாக்கள். எத்தனையோ பாடல்களை யார் யாருக்கோ அமைத்துவிட்டோம். மகள்களுக்கு ஒரு பாட்டு செய்வோமே என யோசித்த வேளையில், `கண்ணம்மா’ பாடல் உருவானது.
அதேசமயத்தில் அப்படியொரு பாடல் `றெக்க’ திரைப்படத்திற்கும் தேவைப்பட்டது. சூழலும் ஏக்கமுமே தேவைகளாக மாறுகின்றன.

கலைஞர்களின் செளகர்யமே அதுதான், சந்தோசங்களையும் சரக்காகிச் சந்தைக்கு அனுப்பிவிடலாம். உணர்வுகளின் உற்பத்தியே கலையும் இலக்கியமும். இயக்குநர் ரத்தினசிவா அற்புதமான கதைச்சொல்லி. தத்ரூப விவரிப்பில் காட்சிகளை கண்முன்னே நிகழ்த்திக்காட்டுவார்.

அக்காவை முதல்காதலியாக உருவகித்த தம்பியின் தடுமாற்றமே பாடலின் சூழல். `தணிந்து கனியாத தாபத்தை பாடலாக்கித் தாருங்கள்’ என்றார். கதைப்படி, நாயகியின் பெயரும் பாரதியே என்றது நெஞ்சில் பூதூவிற்று. முதல்காதலா, இளங்காமமா என பகுத்தறிய முடியாதப் பருவக் கிளர்ச்சியை இனக்கவர்ச்சியென்று இகழ்வது நியாமல்ல. அது, களங்கமற்ற அன்பின் வெளிப்பாடு.

Image may contain: 1 person, eyeglasses and closeup

அக்காவை முதல்காதலியாக உருவகித்த தம்பியின் தடுமாற்றமே பாடலின் சூழல். `தணிந்து கனியாத தாபத்தை பாடலாக்கித் தாருங்கள்’ என்றார். கதைப்படி, நாயகியின் பெயரும் பாரதியே என்றது நெஞ்சில் பூதூவிற்று. முதல்காதலா, இளங்காமமா என பகுத்தறிய முடியாதப் பருவக் கிளர்ச்சியை இனக்கவர்ச்சியென்று இகழ்வது நியாமல்ல. அது, களங்கமற்ற அன்பின் வெளிப்பாடு.

குழந்தைமையில் மட்டுமே குடிகொள்ளும் செளந்தர்யம். மறுபடியும் குழந்தையாகிவிடமாட்டோமா என வளர்ந்தவர்களும் ஏங்குவது அதற்காகவே. `கண்ணம்மா கண்ணம்மா’ என முதலிரு சொற்களைச் சொன்னதுமே இமானும் சிவாவும் ஒருவரை ஒருவர் குழந்தைபோல பார்த்துக்கொண்டனர்.

`அழகுப் பூஞ்சிலை’ என்றதும், அவர்களுடைய நான்கு கண்களும் என்னை நோக்கித் திரும்பின. `என்னுள்ளே என்னுள்ளே / பொழியும் தேன்மழை / உன்னை நினைத்திருந்தால் / அம்மம்மா உள்ளமே / துள்ளிக்குதித்ததுதான் / எங்கெங்கும் செல்லுமே / என்று அடுக்கிக்கொண்டே போனேன்.

`அம்மம்மா’ என்னும் பதத்தை உச்சரிக்கும்போதே உணர்வு கிளர்வதாக இமான் தெரிவித்தார். இசைப்பாட்டிற்கு இப்படியான வார்த்தைகளைத் தேர்ந்துகொடுத்த சிறுகூடல்பட்டியை நினைவில் வணங்கினேன். அதேநிமிடத்தில் என் மகளின் முகமும் முத்தங்களும் நினைவுக்கு வந்தன.

அம்மம்மா என்பதற்கு அதைத்தாண்டி பொருளில்லை. பாட்டெழுதக் கிளம்பியதுமே கண்மலர அவள் கையசைத்துச் சிரித்ததை `ஒளி வீசும் மணிதீபம் / அது யாரோ / நீ’ என்றாக்கினேன். சந்தத்தில் அப்படியே வார்த்தைகள் ஒட்டிக்கொண்டதும், இமான் முகத்தில் ராஜகளை.

`கற்பூர பொம்மை ஒன்று’ எனும் பல்லவி தாங்கிய மு.மேத்தாவின் `கேளடி கண்மணி’ பாடலை ஒருமுறை மனதுக்குள் ஓட்டினேன். அம்மைக்கும் மகளுக்குமான அதேஅன்பை அப்பனுக்கும் மகளுக்குமாக மாற்றினேன்.
கற்றது தமிழ் ராமின்` மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு’ எனும் கவிதை, உள்ளத்தின் ஓர் ஓரத்தில் கண்ணைச் சிமிட்டியது.

`செம்பருத்திப் பூவப்போல / சிநேகமான வாய்மொழி / செல்லங் கொஞ்ச கோடைகூட / ஆகிடாதோ மார்கழி’ எனத் தோன்றியதும், `பால்நிலா உன் கையிலே / சோறாகிப் போனதே / வானவில் நீசூடிட மேலாடையாகுதே’ என்னும் வரிகள், தம்மைத் தாமே எழுதிக்கொண்டன. மெட்டுக்கு எழுதிப் பழகினால் இந்த இயல்பை எவரும் பெறலாம்.

பால்சோறு குறித்து யோசனையில் எப்போதோ நானெழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. `நிலவைக் காட்டியே / என் அம்மாவும் சோறூட்டினாள் / தட்டிலிருப்பது / ரேஷனரிசிப் பருக்கையென்பது / தெரியாமலிருக்க’ என்ற கவிதைக்கு, வாரமலர் அந்தக் காலத்தில் ஐம்பது ரூபாய் சன்மானம் கொடுத்தது. அது கவிதையா எனக்கேட்பவர்களுக்கு அந்த ஐம்பது ரூபாயைத் திருப்பித் தந்துவிடலாம்.

சின்னஞ்சிறுவயதில் எல்லோருக்கும் காதல்போல ஒன்று தோன்றாமலில்லை. ஃபிராய்ட்டும் இன்னபிறகும் அதுகுறித்து ஆய்ந்திருக்கிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள ஈர்ப்பிலேதான் இவ்வையம் இயங்குகிறது. எனினும், தெளிந்த முடிவுகளை விஞ்ஞானமோ மெய்ஞானமோ அறிவிக்கவில்லை. நபருக்கு நபர் வித்யாசப்படும் அனுபவங்களே வாழ்வின் அழகு.

கொஞ்சலை மேலும் கூட்ட `கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா / உன்னை உள்ளம் எண்ணுதம்மா’ என்றாக்கினேன். `பாரதிக்கண்ணம்மா / நீயே சின்னம்மா’ பாடலும் `பாரதிக்கு கண்ணம்மா / நீ எனக்கு உயிரம்மா’ பாடலும் ஆரத்தழுவிக்கொள்ள கைகளை நீட்டின. `உன்னுடைய கோலம் காண / கோயில் நீங்கும் சாமியே / மண்ணளந்த பாதம் காண / சோலையாகும் பூமியே’ என்று அடுத்தச் சரணத்தைத் தொடங்கினேன்.

அறிஞர் அண்ணாவைப் பற்றி வைரமுத்து ஒரு கவிதையில் `நாயகனே உன் நாத்திகம் கேட்க / தெய்வங்களெல்லாம் தேர்களில் வந்தன / பொய்தாம் தாமென புலம்பிப் போயின’ என்றெழுதியிருக்கிறார.
தெய்வங்களே நாத்திகப் பேச்சைக் கேட்க வந்தன என்னும் கற்பனையை `உன்னுடைய கோலம் காண / கோயில் நீங்கும் சாமியே’ என்று ஓசைக்கேற்ப ஒழுங்குசெய்தேன்.

ஒன்றிலிருந்து ஒன்று கிளைப்பதே கலையம்சம். இல்லாத ஒன்றை எழுதவே வாய்ப்பில்லை. ஏனெனில், படைப்பென்பது வெளியிடுதல் தானே அன்றி, கண்டுபிடிப்பல்ல. இது என் புரிதல்,தவறாகவும் இருக்கலாம்.
இத்தனையையும் எழுதிவிட்டு பாரதியை இப்பாடலில் எழுதாமல் போவதா என்றே `பாரதி உன் சாயலைப் பாட்டாக மாற்றுவான் / தேவதை நீதானென வாயாறப்போற்றுவான்’ என்று யோசித்தேன்.

மகாகவி பாரதி உன் சாயலை என்னும் அர்த்தத்துடன், `யுகபாரதி தன் மகளின் சாயலைப் பாட்டாக மாற்றுவான்’ எனும் சுயப்பெருமிதமும் அதில் உண்டு.
இப்படியெல்லாம் தற்பெருமையைப் பீற்றுவது வெட்கமென்பதால் `வெட்கம் நெட்டித் தள்ளுதம்மா’ என என்னை நானே கீழிறக்கினேன்.

ஆனாலும், அப்பதம் ஆசைமுத்தமிட அழைக்கும்போது கைகளை நெட்டிவிட்டு குழந்தைகள் ஓடுமே அதற்கானது.
முழு பாடலையும் மெய்மறந்த நிலையில் எழுதினேன் எனில், மிகையாகப்படலாம்.
மிகை உணர்ச்சிகளில் இப்படி நாம் தினம்தினம் ஏதோ ஒன்றை படைத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

அம்மாவின் சமையலும் மனைவியின் பிணக்குமேகூட அழகிய படைப்புகளில் சேர்பவைதாம். ஆழ்ந்து அனுபவிக்க பழகிவிட்டால் ராட்சசியும் ரசனைக்குரியவளே.
எழுதிய வரிகளில் ஒன்றையும் மாற்றாமல் அப்படியே ஏந்திக்கொண்ட இயக்குநர் ரத்தினசிவாவுக்கும், படம்பிடித்த தினேஷ்கிருஷ்ணாவுக்கும் நன்றிகள்.

உருப்படுமா இந்நாடு? - கவிஞர் ...

பாடலைப்பாடிய நந்தனி ஸ்ரீகரின் குரலையும் உழைப்பையும் கொண்டாட மறந்தால் பிழை. நவநாகரீக ஆடையில் பாடவந்த அவருக்குள் தஞ்சாவூர் அம்மாவின் தமிழிருந்தது.
முதல் வரியிலே எல்லோரையும் ஈர்த்துவிட்டார். பாட்டோடு அப்படியே கரைந்தும். பாடி முடிக்க நள்ளிரவானது.

டார்ஜ்லிங்கில் வசித்தவரும் அவர், சென்னையின் கடும்கோடையில் நா வறள வறள பாட எடுத்துக்கொண்ட சிரமங்கள் பதறடிப்பவை. வானிலை மாற்றங்கள், சூழ்நிலைகளைச் சுகமாக்குவதில்லை.
சில பாடல்கள் காலத்தை கடந்துவாழுமென்பர். இப்பாடலோ, கடந்துபோன பின்னும் என் காலத்தை பிறருக்குக் காண்பிக்கும்.

பாடல் பதிவுமுடிந்த பின்னரவில் மிகமிகத் தாமதமாக கருமேகங்கள் சூழ வீடு திரும்பினேன். அதுவரை விழித்திருந்த என் மகள், ஓடிவந்து கட்டிக்கொண்டாள்.

நெற்றி நடுவே முத்தமிட்டு முழுப்பாடலையும் பாடிக்காட்டினேன். பதிலுக்கு அவள் அளித்த முத்தத்தில் `ஒளிவீசும் மணிதீபம்’ என் உச்சந்தலையில் வெளிச்சம் பரப்பியது.

நாளைய நாள், என் வீட்டு இளைய கண்ணம்மாவுக்கு (காவ்யா) பிறந்த நாள். கண்ணம்மாவைப் போலவே நீயும் வாழ்வாங்கு வாழடி மகளே.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More