புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் இப்படி ஓர் எதிரொலியா.. | சிறுகதை | தேவகி கருணாகரன்

இப்படி ஓர் எதிரொலியா.. | சிறுகதை | தேவகி கருணாகரன்

14 minutes read

.

அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் தேவகி கருணாகரன் அவர்கள் இலக்கிய உலகில் மிகவும் அறியப்பட்ட ஒருவராவார். பல இலக்கிய போட்டிகளில் பல பரிசில்களையும் பெற்றிருக்கின்றார். இவர் “அன்பின் ஆழம்” எனும் சிறுகதை தொகுப்பை வெளியிட்டு வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாக தன் எழுத்துக்களில் பதிவு செய்யும் சிறந்த ஒரு எழுத்தாளரும் ஆவார்.

.

அந்த ஞாயிற்றுக் கிழமை தான் முகுந்தனுடைய வாழ்க்கையை தலைகீழாக்கின நாள்

மதிய சாப்பாட்டுக்குப் பின் முகுந்தனின் அப்பா, சின்னத்தம்பி நித்திரை கொள்வது வழக்கம். அந்நேரம் வீட்டில் எல்லோரும் மெள்ளமாகத் தான் பேச வேண்டும். வீட்டுக்குள் ஓடிப் பிடிக்கக் கூடாது என்பதும் சட்டம். சரியான கோவக்காரர், அவர் நித்திரையைக் குழப்பினால் வீட்டில் எல்லோருக்கும் ஏச்சும் அடியும் தான். அன்று முகுந்தனின் அம்மா ராசு, நல்லூர்க் கந்தசாமி கோவிலுக்குப் போயிருந்தார். அண்ணன்மார் தங்கள் கூட்டாளிகளோடு சினிமாவிற்குப் போயிருந்தனர்.

முகுந்தனுக்கு அப்போது பத்து வயது தான். இன்றைக்கு எப்படியாவது அப்பாவிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என எண்ணி போட்டிக்கோவில் நின்ற தகப்பனின் பழைய மாடல் டொயாட்டா காரை கழுவ முடிவெடுத்தான். கறுத்த நிற காரைக் கழுவி நல்லா அழுத்தித் துடைத்து விடப் பளப்பளத்துக் கொண்டு நின்றது. அவனுக்கு ஒரே சந்தோசம், அப்பா என் முதுகிலே தட்டி,

“நல்ல பிள்ளை, இப்படித்தான் இருக்கவேணும்”

என சொல்லுவார் என எதிர்பார்த்து மகிழ்ச்சியோடு வாசற் படிக்கட்டில் அமர்ந்திருந்தான். கார் கழுவும் போது நனைந்திருந்த உடம்பு, உடைகள் மேல் குளிர்க்காற்று சிலீரென்று வீசவும், உடல் குளிர்ந்து நடுங்கியது. எனினும் பொறுமையாக அப்பா வரும் வரை காத்திருந்தான். ஐந்து மணி போல நித்திரை கொண்டு எழும்பி வந்த தகப்பனிடம்,

“அப்பா, நான் காரைக் கழுவினான், பாருங்கோ எப்படி ஷைன்பண்ணுதெண்டு” என்றான்.

“ம்ம்ம்!” என உறுமின சின்னத்தம்பி, காரின் ஒவ்வொரு கதவாகத்திறந்து பார்த்துக்கொண்டு வந்தார். பின்புற கதவைத்திறந்தவர், யன்னல் கண்ணாடி சரியாக பூட்டாமல் இருந்ததால், கோர்சினால் அடித்தத் தண்ணீர் உள்ளேப்போய் கார் சீட்டெல்லாம் நனைந்து உள்ளேயும் வெள்ளமாக நின்றது. இதைக்கண்ட சின்னத்தம்பி,

“இங்க பார் எண்ட கார் சீட்டை நனைச்சுப் பழுதாக்கி போட்டாய். வேணுமெண்டு தான் செய்தியா?” எனக் கேட்டப்படி அவன் முதுகில் பளார் பளாரென அடித்தார்.

“இல்லை அப்பா.. யன்னல் திறந்திருந்ததை நான் கவனிக்கல்லை, சொரி அப்பா” என அவரின் அடியின் வலி தாங்கமுடியாது அழுதபடி கெஞ்சினான். அவன் கெஞ்சக் கெஞ்ச வெறி கொண்டவர் போல் அவன் முதுகில் தொம் தொம்மென்று அடித்தார்.

“என் கண்முன்னே நிற்காதே போயிடு” எனக் கர்ஜித்தார். தந்தையின் அடிக்கு பழக்கப்பட்ட அவனுக்கு அவர் அடி ஒரு பொருட்டாகப்படவில்லை, ஆனால் அவர் கண்களில் தெரிந்த வெறுப்பைத் தான் அவனால் தாங்க முடியவில்லை, வீட்டை விட்டு ஓடிப் போயிடலாம் என நினைத்தான். அம்மாவை நினைத்ததும் அவனுக்கு போக மனம் வரவில்லை. ஆனால் அவனுக்கு அந்தச் சங்கடத்தை வைக்காது சின்னத்தம்பி முகுந்தனை வெளியே தள்ளிவிட்டு படலையை அடித்துச் சாத்தி பூட்டையும் போட்டு பூட்டி,

“போய் தொலையடா!”

எனக் கத்திவிட்டு உள்ளே சென்று விட்டார். அவனும் அழுது கொண்டு எங்கே போகிறோம் என்ற நினைவு இன்றி கால் போன போக்கிலே நடந்தான். அதிகத் தூரம் நடந்ததால், கால் வலிக்கவும் ஒரு கல்வெட்டின் மேல் அமர்ந்து பக்கத்தில் நின்ற மரத்தில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

முகுந்தனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பாவுக்குத் தன் மேல் பாசமேயில்லை என்றும் வருடங்கள் போகப் போக அவர் தன்னை முற்றாக வெறுக்கிறார் எனவும் உணர்ந்திருந்தான்.. அவன் நாலு வயதாக இருக்கும் போது நடந்த அந்தச் சம்பவம் அவன் கண்முன்னே நிழலாடியது.

ஒரு ஞாயிறு அம்மா வெளியே போயிருந்தா. அப்பா வழக்கம் போல மதிய நித்திரையில் மூழ்கியிருந்தார். அறைக்குள் வந்த முகுந்தன் அப்பாவிற்கு பக்கத்தில் படுப்போம் என ஆசையோடு தன் பிஞ்சு கைகளால் க‌ஷ்டப்பட்டு கட்டிலைப் பிடித்து ஏறி அப்பாவிற்கு பக்கத்தில் படுத்து தூங்கியும் விட்டான். அன்று நல்ல மழைக் குளிர். அவனையறியாமல் கட்டிலிலே ஒன்றுக்கு போயிட்டான். உஷ்ணமாக சிறு நீரில் சின்னத்துரையின் சாரமும் உடலும் தோயவும் துள்ளி எழுந்தவர், முகுந்தனின் முதுகில் இரண்டு அறை அறைந்து விட்டு, தர தரவென இழுத்துக் கொண்டு போய் அறைக்கு வெளியே தள்ளி, கதவையும் சாத்திவிட்டார்.

அன்று அப்பா! அப்பா! என அழுது அழுது களைத்து அறைவாசலிலே தூங்கிவிட்டதை அவனால் ஒரு நாளும் மறக்க முடியாத சம்பவம்.. அவன் பிஞ்சு மனம், தந்தையின் பாசத்திற்காக அன்று தொடக்கம் இன்று மட்டும் ஏங்கும் அந்த வலியை சொற்களால் விவரிக்க முடியாது. அவன் நெஞ்சிலே அது ஒரு தீராத காயமாக நொந்தது.

ஆண்பிள்ளைகளுக்கு அவர்களது தந்தை ஒரு ஹீரோவாகவோ ஒரு வழிகாட்டியாகவோ தெரிவார்கள். அந்த கண்ணோட்டத்தோடும் பல எதிர்பார்ப்போடும் தந்தையின் அன்பை நாடினான். ஆனால் அவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அண்ணன்மார்கள் என்ன கேட்டாலும், வாங்கிக் கொடுக்கும் அப்பா ஏன் தான் கேட்டால் மட்டும் மறுத்துவிடுகிறார் என மனம் குழம்பினான். இதை கவனித்த அண்ணன்மார்கள்

“நீ குப்பத்தொட்டியிலே இருந்து எடுத்தப் பிள்ளை”

என அவனைக் கேலி செய்வார்கள். கறுத்தாட்டு கூட்டத்திலே வெள்ளாடுபோல குடும்பத்திலே மற்றவர்களைப் போல இல்லாமல் முகுந்தன் நல்ல நிறமாக எல்லோர் மனதையும் கவரும் தோற்றத் தோடுமிருந்தான்.

மூன்று அண்ணன்களுக்குப் பிறகு பின் ஐந்து வருட இடைவெளிக்குப்பின் பிறந்த முகுந்தன் மேல் ராசுவுக்கு கொள்ளைப் பாசம். தகப்பன் காட்டிய வெறுப்புக்கு ஈடு கட்ட தாய் அவன் மேல் அன்பைப் பொழிந்தார். பல தடவை அவரின் மூர்க்கமான அடிகளுக்கு இடையே புகுந்து அடிகளை அவரே வாங்கிக் கொள்வார்.

இப்போது இருட்டிக் கொண்டு வந்தது. பசி வயிற்றைக் கிள்ளவும் முகுந்தனுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. திரும்பி வீட்டுக்கே போய் விடுவோமா என நினைத்தான். தந்தையின் வெறுப்பு நிறைந்த முகம் கண் முன் நிழலாடவும் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

உள்நாட்டுப் போரில் குண்டுத்தாக்கலினாள் தாய் தந்தையை ஒரு நொடியில் இழந்த சிறுவர் சிறுமிகள் மன நிலைதான் அப்போது அவனுக்கும். இலேசில் காயப்படக்கூடிய அந்த பச்சிளம் பாலகன் ஒரு நொடியில் அநாதையானான். சிந்திக்கும் திறன் இழந்தான். கால்கள் இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க மறுத்தன.

ரோட்டில் ஓடிக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு வாகனத்தை மறித்து ஏறி தூரப் போய் விட வேணும் என முடிவெடுத்தான். பசியுடன் களைப்போடு நிற்க முடியாவிட்டாலும் எழுந்து நின்று கையை உயர்த்தி தன்னை ஏற்றிக் கொண்டு போகும்படி சைகை காட்டினான். கடைசியாக ஒரு லொறி ஓட்டுனர் பரிதாபப்பட்டு அவனை ஏற்றிக்கொண்டான்.

“எங்கே போக வேணும் தம்பி?” வண்டி ஓட்டுனர் அவனை கூர்ந்துப் பார்த்தபடி கை கொடுத்து வண்டியில் ஏற்றியபடிக் கேட்டான்.

“வண்டி எங்கே போகுதோ அங்கேயே போறேன் அண்ணே” மெல்லிய குரலில் பதிலளித்தான். பாவம் பச்சை மண், நடந்து வந்த அலுப்பில் உடனேயே தூங்கி விட்டான்.

“தம்பி வரவேண்டிய இடம் வந்திட்டுது எழும்பு, தம்பி” என்று ஓட்டுனர் அவன் தோளைத் தட்டி எழுப்பவும், உடலை முறுக்கி, முணுகியபடி எழுந்தான் முகுந்தன். சுற்றும் முற்றும் பார்த்தான், இருட்டியிருந்தது. வண்டி ஓட்டுனர் முகத்தைப் பார்த்ததும், மத்தியானம் நடந்தவை நினைவுக்கு வரவும், அழுகையே வந்துவிட்டது.

“தம்பி இப்ப ஏன் அழுறாய்.? எங்கே போகவேணும் சொல்? நான் கொண்டே விடுறேன்” கரிசனையுடன் கேட்டார்.

“எங்கே போறதெண்டு தெரியாது” கண்ணீரைத் துடைத்தபடி சொன்னான்.

“வீட்டை விட்டு ஓடி வந்திட்டியா?”

“ஓம்”

“திரும்பிப் போகப்போறியா?

“இல்லை இல்லவே இல்லை. ஐயோ! அப்பா அடிப்பார். நான் போகமாட்டேன்.” அவன் குரலில் தகப்பன் மேல் இருந்த பயத்தை வண்டி ஓட்டுனர் உணர்ந்துக் கொண்டார்.

“தம்பி இங்கே எனக்குத் தெரிந்த காப்பகம் இருக்குது அதிலே சேர்த்துவிடவா?”

“ஓம்… ஓம் அண்ணே சேர்த்து விடுங்கோ” என்றான் விம்மலுக்கிடையே.

முகுந்தனை கிளிநொச்சியிலிருந்த துலைந்த பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் காப்பகம் ஒன்றில் சேர்த்துவிட்டார் வண்டி ஓட்டுனர். சில நாட்கள் அம்மாவையும் வீட்டையும் நினைத்து நினைத்து அழுதபடியே இருந்த முகுந்தனுக்கு அவனிலும் நாலு வயது மூத்த கந்தப்பு ஆறுதல் சொன்னான். தன் சிறிய தாயின் கொடுமை தாங்க முடியாமல் இந்தக் காப்பகத்திலே தஞ்சம் அடைந்திருந்தவன், முகுந்தனின் கதையைக் கேட்டு விட்டு,

“நீ சொல்றதைப் பாத்தா, உன்னை உன்ர அப்பா அம்மா தத்தெடுத்திருபாங்களோ?” எனக் கேட்டான்

“ஓம் ஓம் அப்படியும் இருக்கலாம். எங்கட வீட்டில் உள்ளவர்களின் சாயல் கொஞ்சம் கூட எனக்கு இல்லை. இதைப் பற்றி நான் கனக்க யோசித்திருக்கிறேன். ஆனால், அது எப்படி அம்மாவுக்கு மட்டும் என்மேல் நல்ல பாசம். அப்பா மட்டும் தான் என்னைப் போட்டு அடிப்பார்,” என்றான் முகுந்தன்.

“ஒரு வேளை அப்படி இருக்குமோ?” வாழ்க்கையில் அடிபட்டதால் ஏற்பட்ட அனுபவத்தில் கேட்டான் கந்தப்பு.

“எப்படி?’

“உன்ர அம்மாவை அப்பா இரண்டாம் தாரமா கட்டியிருப்பாரோ? உன்ர அண்ணன்மார்கள் அப்பாண்ட முதல் தாரத்து பிள்ளைகளாக இருக்க வேணும். உன்ர அம்மாவும் முதல் கல்யாணம் கட்டியிருக்க வேணும். நீ அம்மாண்ட பிள்ளையாக்கும்.”

“அப்படியா”என பெருமூச்செறிந்த முகுந்தன் தன் தந்தையின் வெறுப்பின் காரணம் தெரியாது குழம்பினான். வருடங்கள் ஐந்து உருண்டோடின. தாயினதும், சகோதரர்களினதும் முகங்களை முகுந்தனால் நினைவுப்படுத்த முடியாவிட்டாலும் அதிர்ஷ்டவசமாக அவர்களின் நினைவுகள் அவனுக்குள், இன்னும் அவன் தோலுக்குள் மங்காது, புது பொலிவோடு துலங்கின.

தன் அன்பு கரங்களால் குளிப்பாட்டி, உணவூட்டி, உடுப்பாட்டி, சில சமயங்களில் அடித்தும், மறு நேரங்களில் அணைத்தும், சீராட்டிய அம்மாவுடன் வாழ்ந்த வாழ்வை அவன் நினைவுகளில் ஆழப் பதிந்திருந்ததால், சில சமயங்களில் அம்மா அவனுடன் கூட இருப்பதாக ஓர் உணர்வு.

முகுந்தன் ‘ஒ’ லெவல் சோதனை எழுதி பாசாகியும் விட்டான். அதற்கு மேல் அவனுக்குப் படிக்க விருப்பமிருந்தாலும் காப்பகத்தில் அதற்கெல்லாம் நிதி இருக்கவில்லை. ஒரு தேனீர் கடையில் அவனுக்கு வேலை எடுத்து கொடுத்தார்கள். வேலை செய்வதுடன் தன் நம்பிக்கையும் வளர தானே ஒரு விடுதியில் கூடிய சம்பளத்திலே ரூம் பாயாக வேலை தேடிக் கொண்டான். கையிலே காசு பிளங்கத் தொடங்கவும், அப்பா வீட்டில் இல்லாத போது யாழ்ப்பாணம் போய் அம்மா, அண்ணன்மாரை பார்க்க வேணும் என்ற ஆசையும் எழுந்தது.

அந்த விடுதியில் வந்து தங்கியிருந்த ஜெகநாதன் என்ற ஐயாவிற்கு முகுந்தன் தான் ரூமிற்கே அடிக்கடி சாப்பாடு கொண்டுப்போய் கொடுப்பான். அந்தச் சந்தர்ப்பங்களில் அவனுடன் பல விசயங்களைப் பற்றிப் பேசுவார். ஒரு நாள்,

“தம்பி உன்னைப் பார்த்தால் என்னுடைய பிரண்ட் சின்னதம்பிண்ட நினைப்புத் தான் வருது. உன்னிலே அவருடைய சாயல் தெரிது,” என்றார்.

தகப்பண்ட பெயரைச் சொன்னதும், முகுந்தன் திடுக்கிட்டுப் போனான்.

“ஐயா, கச்சேரியிலே வேலை செய்யிற சின்னைதம்மியைச் சொல்லுறீங்களா?”

“ஓம் ஓம் உனக்கு சொந்தமோ?”

“பல வருடங்களுக்கு முன் அவர் என் அப்பா ஆனால் இப்ப இல்லை. நான் ஒரு அநாதை”

“என்ன சொல்லுறாய்?”

“பத்து வயதாயிருக்கேக்கை என்னை வீட்டை விட்டு அடித்து துரத்தி விட்டார். அடித்து துரத்தும் போது அம்மா வீட்டில் இல்லை. அவ இருந்திருந்தா விட்டிருக்கமாட்டா. பாவம் அம்மா, எப்படி இருக்கிறாவோ?”

“ஏன் தம்பி நீ திரும்பிப் போய் அம்மாவைப் பாத்திருக்கலாமே!”

“அண்டைக்கு ஒரு லொறியிலே ஏறி கன தூரம் வந்திட்டேன். லொறி டிரைவர் என்னை இங்கே ஒரு காப்பகத்திலே சேத்து விட்டார். அடி உதை இல்லாம நிம்மதியாயிருக்கேக்க திரும்பிப் போக வேணும் எண்ட ஆசை வரயில்லை. எண்டாலும் கொஞ்சம் காசு சேத்துக்கொண்டு அம்மாவையும் அண்ணன் மாரையும் போய் பாக்கலாம் எண்டிருக்கிறன்”

“சரி முகுந்தா, நான் நாளைக்கு யாழ்ப்பாணம் பயணம். இன்னும் இரண்டு கிழமையால திரும்பவும் வேலையா வருவேன், இங்கே தான் தங்குவேன்”

யாழ்ப்பாணம் போன ஜெகநாதன் தாமதியாது நெருங்கிய நண்பனான சின்னதம்பியின் வீட்டுக்குப் போனார். கோபத்தோட நறுக்கெண்டு கேள்விகள் கேட்க நினைத்துக் கொண்டு போனவர், சார்மனைக் கதிரையிலே படுத்திருந்த அவரைக் கண்டதும் வாயடைத்துப் போனார். உடல் நலிந்து எழமுடியாமல் திராணியற்று கிடந்தார் சின்னத்தம்பி. எழும்ப எத்தனித்த அவர் தோள்மேல் கை வைத்து,

“சின்னா அப்படியே இரு. உன் உடம்புக்கு என்ன?”

சின்னதம்பியின் கண்களில் நீர் நிறைந்து விட்டன. எ…..னக்கு ஃலட் கான்சர். டிரீ..ரீட்..மண்ட் குடுக்கிறாங்கள். ஆனால் எந்த பிரயோசனமும் இல்லை”

“சின்னா, கொழும்புக்குப் போய் டிரீட்மண்ட் எடுக்கலாமே”

“ஓம்ஓம் அங்க தான் போனனாங்கள். எலும்பு மச்சை டிரான்ஸ்பிலாண்ட் செய்ய வேணும் எண்டு சொல்லிச்சினம். எண்ட மச்சத்தோடு ஒத்துப்போற டொனர் கிடைக்கல்லே” என்றார் சின்னையா

“ஏன் சின்னா உண்ட மகன்களிண்ட ஒத்துப் போகயில்லையோ?”

“இல்லையே. அடுத்த கிழமை திரும்பவும் கொழும்பு போறோம், வேறு டொனரின்ட மச்சை ஒத்துப் போம் என்டு நினைக்கினம்.”

“ஏன் உண்ட கடைசி மகன் முகுந்தன்டையும் ஒத்துப் போகல்லையோ?” அவனெங்கே? சின்னையா இப்படி ஒரு கேள்வியை எதிர் பார்க்கவில்லை. திகைத்துப்போய், சற்று தாமதித்து,

“அவன் துலைஞ்சு போயிட்டான். இயக்கத்திலே சேர்ந்து செத்திட்டானோ! ஆமிக்காரன்கள் பிடித்துக்கொண்டு போயிட்டாங்களோ தெரியாது” என முணு முணுத்தார். அவருடைய பதிலைக் கேட்டு ஜெகநாதன் திகைத்துப் போயிருக்க, சின்னத்தம்பி,

“அவன் துலைஞ்சு போய் பத்து வருசமாச்சுதே. அவனை நாங்கள் மெல்ல மெல்ல மறந்து கொண்டு வாறம்” என்றார்.

“ஆனால் அவன் உங்களை மறக்கவில்லை. சின்னா, நான் அவனைக் கண்டனான். உன்ரை அடியையும், வெறுப்பையும் தாங்க முடியாமைத்தான் வீட்டை விட்டு ஓடியிருக்கிறான். ஏன் சின்னா அவனை அப்படி வெறுத்தாய், பாவம் அவன், எவ்வளவு நெஞ்சு நொந்து, தனித்து அநாதையா தவிக்கிறான் தெரியுமா?” சின்னையாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

“உன்ட பெண்சாதி, ராசு இதை எப்படி தாங்கிக் கொண்டா?”

“ஓ அவன் துலைஞ்ச நாளிலிருந்து அவளுக்கு மனமும் சரியில்லை, உடம்பும் சரியில்லை.”

“அப்ப ஏன் அவனைத் தேடயில்லை”

“ஜெகா, முகுந்தன் என்ட மகனில்லை!”

 மார்பை பிடித்துக் கொண்டு செருமிவிட்டு, “ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி நாலில் நான் வேலை விசயமா கொழும்பு போயிருக்கேக்கே ஆமிக்காரன்கள் வீட்டுக்குள்ளே புகுந்து எல்லோரையும் அடித்து, இருந்த காசு நகைகளை பறித்துக் கொண்டு போனவங்கள், ராசுவையும் விட்டு வைக்கவிலலை.”

“ஐ ஐயோ என்ன சொல்லுறாய்? ஆமிக்காரன்கள் வீட்டுக்குள் புகுந்தது தெரியும். ஆனால் இப்ப நீ வேற கதை சொல்லுறாயே?’’

“ஓம், அதை இப்ப உனக்கு மட்டும் சொல்லுறன். ஆமிக்காரன்களைக் கண்டதும் ராசு மயக்கம் போட்டு விழுந்திட்டாளாம். அவளுக்கு அன்றைக்கு நடந்தது எதுவுமே தெரியாதாம். ஆனால் எனக்குத் தெரியும் நிச்சயமாக அன்றைக்கு ராசுவுக்கு நடந்த விபத்தினால் தான் முகுந்தன் பிறந்திருக்கிறான்.. வேறொருவனின் வன் செயலால் பிறந்தவன் எப்படி என் பிள்ளை ஆவான். அவன் என்ட பிள்ளையில்லை!” கடைசிச் சொற்களை அழுத்தமாகச் சொன்னார்.

“என்ன! நீ விசர் கதை அலட்டுறாய், அது சரி அன்று நடந்ததைப் பற்றி ராசு என்ன சொல்லுறா?”

“நான் அவளிடம் அந்த விபத்தைப் பற்றிக் கேப்பதில்லை. ராசுவின் மனதை நோகப்படுத்தவோ சங்கடப் படுத்தவோ விருப்பமில்லை.

“ஏன் நீ நினைச்சதைப் போல எதுவுமே நடக்காமலும் இருந்திருக்கலாம் தானே, இது எல்லாம் உன்ட கற்பனை, ஏன் சொல்லுறன் என்டா, அவன் இப்போ உன்னை இருபது வயசிலே பாத்த மாதிரியே இருக்கிறான். என்ன, உன்னிலும் பாக்கக் கொஞ்சம் நிறம், மற்றப்படி அச்சிலே வார்த்த மாதிரி நீயே தான்.”

“என்னால் அப்படி எண்ண முடியவில்லையே!”

“உனக்கு இப்படி சுகமில்லாமல் இருக்கிறாய் எனத் தெரிந்தால், அவன் துடிச்சுப்போவான். உன்னைப் பார்க்க ஓடி வந்திடுவான். அது சரி எப்போ கொழும்பு போறாய்? எந்த ஆஸ்பத்திரி?”

“அடுத்த மாதம் முதலாம் தியதி வரச்சொல்லியிருக்கினம். லங்கா ஆஸ்பத்திரிதான்.”

“நானும் கொழும்புக்குப் போகவேணும். அங்கே சந்திப்பம்” என்றபடி வெளியேறினார்.

முதலாம் திகதி காலையிலே ஜெகநாதன் முகுந்தனுடன் நாரம்பிட்டிய ‘லங்கா’ ஆஸ்பத்திரியின் கான்சர் நோய் பிரிவில் போய் நின்றார். சிறிது நேரத்திலே சக்கர நாற்காலியில் சின்னத்தம்பியும், மனைவி ராசு, அவரது மற்ற மூன்று பிள்ளைகளும் கூட்டமாக வந்து சேர்ந்தனர்.

தாயைக் கண்டதும் முகுந்தன், “அம்மா!” என அழைத்தபடி ஓடிப்போய் தாயை அணைத்துக் கொண்டான். அவன் குரலில் ஒலித்த தாய்ப்பாசம் ஜெகநாதனின் மனதை நெகிழ வைத்தது. துலைந்து போயிட்டான், ஏன் இறந்தே போய்விட்டான் என முடிவெடுத்திருந்த முகுந்தனை இறுக அணைத்துக் கொண்டு,

’எங்கேயடா எங்களை எல்லாம் விட்டிட்டுப் போயிருந்தாய்,’

என கேட்டபடி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் ராசு. முகுந்தனின் மூன்று அண்ணன்களும் அவனைக் கட்டி அணைத்தனர். அவர்கள் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். சின்னத்தம்பியின் முகத்தில் ஈயாடவில்லை. கல்லுப்பிள்ளையாராக அமர்ந்திருந்தார். முகுந்தனைப் பார்த்ததில் குடும்பமே சந்தோசப்பட்டுக் கொண்டிருக்க, ஜெகநாதன் உள்ளே சென்று எலும்பு மச்சை மாற்றுச் சிகிச்சை செய்யும் வைத்திய நிபுணரை கண்டு பேசிவிட்டு முகுந்தனை உள்ளே அனுப்பி வைத்தார்.

“எனக்கு இந்த நிபுணரைத் தெரியும். முகுந்தனுடைய எலும்பு மச்சை ஒத்துப்போகுதா எண்டு பாக்கட்டும். அப்படி ஒத்துப் போச்சுதெண்டா எல்லாம் நல்லதா முடிஞ்சிடும். உங்கட அப்பா இந்த வருத்தத்திலிருந்து தப்பி வந்திடுவார்” நம்பிக்கையோடு கூறினார் ஜெகநாதன்.

இரண்டு நாட்களுக்குப் பின் வந்த இரத்தச் சோதனையின்படி முகுந்தனின் எலும்பு மச்சை சின்னத்தம்பியினதுடன் ஒத்துப்போகும் என்ற முடிவு வந்தது. தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஒரு வாரம் கழித்து லங்கா ஆஸ்பத்திரியின் தனி அறையின் படுக்கையில் இருந்த சின்னைத்தம்பி அருகே சென்ற முகுந்தன்,

“அப்பா…”

என அழைத்தான். அவன் குரலில் பாசமும் தயக்கமும். கண்கள் மன்றாடின. சின்னத்தம்பி அவன் கையைப் பிடித்துக்கொன்டு,

“முகுந்தா…… எப்படி இருக்கிறாய்”

அந்தக் கேள்வியில் பல அர்த்தங்கள். அவர் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தன. அது மன்னிப்பு கண்ணீரோ? ஆனந்தக் கண்ணீரோ?

.

– தேவகி கருணாகரன் | சிட்னி, அவுஸ்திரேலியா

.

நன்றி : வீரகேசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More