செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 13 | பத்மநாபன் மகாலிங்கம்

12 minutes read

பெரிய பரந்தன் வளர்ச்சியடைந்த சமகாலத்தில், 1905 ஆம் ஆண்டு வடக்கு புகையிரத பாதையும், அதற்கு சமாந்தரமாக தரைவழிப் பாதையும் அமைக்க தொடங்கினர். 1914 ஆம் ஆண்டு மன்னாருக்கான புகையிரதப்பாதை அமைக்கப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கிய கண்டிவீதி இயக்கச்சி, ஆனையிறவு, பரந்தன் சந்தி, கரடிப்போக்கு, கிளிநொச்சி, முருகண்டி, ஊடாக மதவாச்சி வரை சென்று பின்னர், முன்னர் இருந்த கண்டிவீதி உடன் இணைந்தது. புதிய பாதை கண்டி வீதி என்று அழைக்கப்பட்டு, இப்போது A9 வீதி என்று அழைக்கப்படுகின்றது. ஆனையிறவில் அப்போது புகையிரதப்பாதையில் ஒன்றும் தரை வழிப்பாதையில் ஒன்றுமாக இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டன.

வண்டில்கள் பாலத்தில் செல்லும் போது எருதுகள் மிரண்டு அடம் பிடித்தன. நெல், வைக்கல் கொண்டு செல்பவர்கள் துணிவு பெற்று பாலத்தின் மேல் செல்ல தொடங்கினர். சுட்டதீவில் ஒரு முறையும் கச்சாயில் ஒருமுறையும் நெல்லையும் வைக்கலையும் இறக்கி ஏற்றுவது சிரமத்தைக் கொடுத்தது. ஆனால் மக்கள் பரந்தன்சந்தி, ஆனையிறவு, இயக்கச்சி, புதுக்காட்டு சந்தி, பளை, முகமாலை, எழுதுமட்டுவாள், மிருசுவில், கொடிகாம்ம், பின்னர் மீசாலை என்ற சுற்றுப் பாதையை விரும்பாது சுட்டதீவு துறை, கடல்பயணம், கச்சாய், மீசாலை என்ற கிட்டிய பாதையை பயன்படுத்தவே விரும்பினர்.

கால போகம் செய்து முடிக்கப்பட்ட பின்   முடிவெட்டும் தொழிலாளிக்கும், சலவைத் தொழிலாளிக்கும், சீவல் தொழிலாளிக்கும் பேசியபடி கூலியாக நெல்மணிகளை அளந்து கொடுத்தார்கள். முன்பு எல்லோரும் ஒரு பெரிய பானையை வைத்து தியாகர் வயலில் தைபொங்கல் பொங்கியவர்கள், இந்த வருடம் பெண்கள் வந்து விட்டதனால் அவரவர் வீட்டிலேயே பொங்குவதென்று தீர்மானித்தார்கள். விவசாயிகள் பயிரை செழித்து வளர செய்த சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பொங்கல் பொங்கி சூரிய உதயத்தின் போது படைத்தார்கள்.

மனைவியரை இன்னும் அழைத்துவராதவர்கள் பொங்கலுக்கு ஊருக்கு சென்றுவிட்டனர். பொங்கல் முடிய தன் மகனை மாமன், மாமியிடம் விடுவதாக திட்டமிட்டிருந்த முத்தர் பள்ளிக்கூடம் தொடங்கி விட்டது என்று அறிந்ததும் திரும்ப கொண்டு சென்று விட்டு விட்டார். பொங்கலுக்கு கட்டாயம் கூட்டி வருவேன் என்று மகனுக்கு கூறியபடி முத்தர் கணபதிப்பிள்ளையை மீசாலை சென்று மூன்று நாள் விடுமுறையில் கூட்டி வந்திருந்தார். எல்லோர் வீடுகளிலும் முற்றத்தில் கோலம் போட்டு நிறைகுடம் வைத்து பொங்கல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சின்ன கணபதிக்கு பொங்கலை விட கணபதி, வீரகத்தி, செல்லையா, பொன்னாத்தையுடன் விளையாடுவது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தது. இரண்டு நாட்களும் அவனது பொழுது அவர்களுடன் கழிந்தது. பள்ளி செல்வதற்காக ஊருக்கு வெளிக்கிட்ட போது “போக மாட்டேன்” என்று அடம் பிடித்து அழ தொடங்கினான். கணபதி பெரிய மனித தோரணையுடன் அவனை அணைத்து, கண்ணீரை துடைத்து “சின்ன கணபதி, படிப்பு முக்கியம். நீ படித்து முடித்து விட்டு இங்கு தானே ஐயா, அம்மாவுடன் வந்து இருக்கப் போகின்றாய்” என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.

ஆறுமுகத்தாருடன் இன்னும் மூன்று பேர் வண்டில்களில் நெல் மூட்டைகளை ஏற்றி கண்டிவீதியால் கொண்டு சென்று மீசாலை, சாவகச்சேரியில் விற்று விட்டு, திரும்ப வரும் போது கிடுகுகளை வாங்கி ஏற்றிவர முடிவு செய்தார்கள். பொன்னாத்தையை விசாலாட்சிக்கு உதவியாக வந்து நிற்கும்படி ஆறுமுகத்தார் கேட்டார். அவளும் சம்மதித்து தகப்பன், தாயிடம் அனுமதி பெற்று வந்து விட்டாள்.

தம்பிமாரில் ஒருவரை இரவு வந்து துணையாக படுக்க ஒழுங்கு செய்தார். விசாலாட்சியிடம் “விசாலாட்சி, நான் கணபதியையும் கூட்டி செல்கிறேன். அவனும் எவ்வளவு நாட்கள் தான் பெரிய பரந்தனை மட்டும் சுற்றி சுற்றி வருவான். கணபதி நாலு ஊரைப் பார்த்து அறியட்டும்.” என்று கூற அவளும் சம்மதித்தாள்.

கணபதி வண்டியில் ஏறி நெல்மூட்டைகளின் மேல் இருந்து கொண்டான். துணைக்கு இன்னொருவர் ஏறி அவனை அணைத்தபடி இருந்தார். விசாலாட்சி அவனிடம் “கணபதி, கவனமாக வண்டில் சட்டத்தை பிடித்துக் கொண்டு இரு” என்று கூறி அனுப்பி வைத்தாள்.

ஆறுமுகத்தாரின் வண்டில் முன்னே செல்ல, மற்ற மூவரினதும் வண்டில்கள் வரிசையாக அணி வகுத்து பின்னால் சென்றன. விசாலாட்சி, வேட்டி மட்டும் கட்டி, சால்வையால் தலைப்பா கட்டி வண்டிலில் நிமிர்ந்து இருந்து ஓட்டிய ஆறுமுகத்தாரையும், ஊர் பார்க்கும் மகிழ்ச்சியில் தாயாருக்கு கைகாட்டி விடை பெற்ற கணபதியையும், பின்னால் வரிசையாக சென்ற வண்டில்களையும் மறையும் வரை கண் கொட்டாது பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் காதுகளில் வண்டில்களின் மணிச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அவள் கணபதியைப் பிரிந்து முன்பு ஒரு நாளும் இருந்ததில்லை.

வண்டில்கள் அரசினர் போட்ட கிரவல் பாதையில் செல்லாது, குறிப்பம் புளி அருகே காட்டினூடகச் சென்ற மண் பாதையில் சென்றன. பாதை குண்டும் குழியுமாக இருந்தது. முயல்களும், கௌதாரிகளும், கானாங்கோழிகளும் குறுக்கால் ஓடின.

(குறிப்பு: 1954 ஆம் ஆண்டில் தான் குமரபுரம் குடியேற்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டு காடுகள் வெட்டி கழனிகள் ஆக்கப்பட்டன. அதன்பிறகு தான் காஞ்சிபுரம் கிராமம் உருவானது. அதுவரை அது பெரும் காடு)

கிழக்கு திசையில் ஓடிய வண்டில்கள், பரந்தன் சந்தியில் ஏறி வடக்கு திசையில் ஓடின. ஆனையிறவு வரை காடுகள் தான். பின்னர் கடல் நடுவே இருந்த பாதையில் ஓடி பாலத்தை அடைந்தன. பின் வண்டிலில் வந்த ஒருவர் ஆறுமுகத்தாரின் வண்டிலின் முன்பு போய் பாதையைப் பார்த்து நின்றபடி பின் பக்கமாக வண்டிலின் நுகத்தை இரண்டு கைகளாலும் பிடித்து எருதுகளுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்று பாலத்தைக் கடந்து விட்டு விட்டு வந்தார். அவர் இவ்வாறே மற்ற மூன்று வண்டில்களையும் பாலத்தை கடக்க உதவினார்.

ஆனையிறவில் தூரத்தில் ஒரு சிறிய கட்டிடம் தெரிந்தது. அங்கு வெள்ளைக்காரத் துரைகள் வந்து தங்கி செல்வதாக மீன் பிடித்துக் கொண்டு நின்றவர்கள் கூறினார்கள். கடலின் நடுவே இருந்த பாதையால் சென்றது, பாலத்தின் மேல் சென்றது, மீனவர் பிடித்து பனையோலை கூடையில்   போட்ட மீன்கள் துள்ளி குதித்தது எல்லாம் கணபதிக்கு புதுமையாக இருந்தன. கடலின் கரையோரம் மீனவர்களின் தோணிகள் தரையில் இழுத்து, கவிழ்த்து விடப்பட்டிருந்தன.

இயக்கச்சியில் பாதை மேற்கு பக்கமாக திரும்பியது. திரும்பிய மூலையில் ஒரு கடை இருந்தது. இரண்டொரு மனிதர்களுடைய நடமாட்டம் தெரிந்தது. மக்கள் குடியிருப்புக்கள் உள்ளுக்குள் சிறிது தூரம் தள்ளி இருக்க வேண்டும். வண்டில்கள் ஓடும் போது பளை வருவதற்கிடையே ஆங்காங்கு கொட்டில் வீடுகள் காணப்பட்டன. மக்கள் தென்னங்கன்றுகளை நடுவதில் ஈடுபட்டிருந்தனர். புகையிரத வீதியில் மனிதர்கள் நின்று ஏதோ செய்து கொண்டிருந்தார்கள்.

பளையில் ஒரு தேநீர்க்கடையும், ஒரு பலசரக்குக் கடையும் காணப்பட்டன. இரண்டு மூன்று வண்டில்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எருதுகள் அவிழ்த்து மேய்வதற்காக கட்டப்பட்டிருந்தன. வண்டில் தொடர்ந்து ஓடியது. எழுது மட்டுவிலில் வண்டில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, எருதுகளை அவிழ்த்து அருகே காணப்பட்ட ஓடையில் நீர் குடிக்க செய்து மரநிழலில் மேய கட்டினார்கள். பெரியவர்கள் ஒரு பெரிய வாகை நிழலில் வட்டமாக இருந்து கதைத்தார்கள். கணபதி அங்கும் இங்கும் நடந்து வேடிக்கை பார்த்தான். பெரியவர்களை விட்டு தூரத்திற்கு அவன் செல்லவில்லை. ஒரு வேப்ப மரத்தில் ஏறி இறங்கி விளையாடிய மந்திகள் அவனைப் பார்த்து பல்லைக் காட்டி “ஈ, ஈ” என்றன. கணபதி சற்று பயந்து திரும்பி பெரியவர்கள் இருந்த மரத்தடிக்கு சென்றான்.

அவர்களில் சிலர் சுருட்டை பற்றவைத்து குடிக்க, சிலர் வெற்றிலை பாக்கு போட்டனர். சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் எருதுகளை மீண்டும் வண்டில்களில் பிணைத்தார்கள். வண்டில்கள் மீண்டும் ஓடத் தொடங்கின.

மிருசுவில் தாண்டி கொடிகாமத்தில் கண்டி வீதியில் இரண்டு கடைகளும் பருத்தித்துறை போகும் வீதியில் ஒரு கடையும் காணப்பட்டன. அந்த கடைகளில் ஒரு பகுதி பலசரக்கு விற்குமிடமாகவும் மற்ற பகுதி தேனீர், வடை விற்கும் இடமாகவும் இருந்தன.

சந்தியில் ஒரு மூலையில் ஒரு பெரிய மரத்தின் கீழ் மூன்று நான்கு பெண்கள் கடகங்களிலும் பெட்டிகளிலும் மரக்கறிகளை விற்பதற்காக வைத்திருந்தனர். இன்னொரு அம்மா பனங்கட்டி குட்டான்கள், ஒடியல்கள், புழுக்கொடியல்கள் என்பவற்றை வைத்திருந்தார்.

வரும் வழியில் கள்ளு கொட்டில்களில் ஆண்கள் சிலர் குந்தியிருந்து பிளாக்களில் கள்ளு குடிப்பதை கணபதி கண்டான். மீசாலை வந்ததும் இவர்களின் இடத்திற்கு மாவடி பிள்ளையார் கோவில் தாண்டி போக வேண்டும். கண்டி வீதியால் தெற்கு புறமாக திரும்பி, பின் கிழக்கு பக்கமாக பாதை சென்றது. அந்த பாதையில் செல்வதற்கு முன்னர் புகையிரதப் பாதையை கடக்க வேண்டி வந்தது. வண்டில் தண்டவாளங்களின் மேல் ஏறி இறங்கியது கணபதிக்கு வேடிக்கையாக இருந்தது.

போகும் வழியிலே நெல் கேட்டவர்களுக்கு வண்டில்களில் வைத்தே நெல்மணிகளை அளந்து விற்றார்கள். பின்னர் அடுத்த நாள் காலையில் மீசாலை சந்தியில் சந்திப்பதாக கூறி பிரிந்து சென்றார்கள். ஆறுமுகத்தாரும் கணபதியும் முன்பு தம்பையரும் விசாலாட்சியும் வாழ்ந்த வீட்டிலேயே அன்று தங்கினார்கள். உறவினர்கள் சிலர் வந்து சுகம் விசாரித்தார்கள். கணபதியையும் அருகே அழைத்து தடவி தடவி கதை கேட்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு சாப்பாடுகள் கொண்டு வந்து தந்தார்கள்.

ஆறுமுகத்தாரிடம் “கணபதி நன்கு வளர்ந்து விட்டான் என்றும், பெரிய பரந்தன் வெய்யிலில் கொஞ்சம் கறுத்தாலும் நன்றாக இருக்கிறான் என்றும், விசாலாட்சி சுகமாக இருக்கிறளா? ஏதாவது விசேஷம் உண்டா” என்றும் கேட்டார்கள். வீடு நன்கு மெழுகப் பட்டு, கூட்டி துடைக்கப்பட்டிருந்தது. மிகுதி நெல்லை அங்கு வைத்தே வாங்கி விட்டார்கள்.

சாவகச்சேரியில் கூடிய விலைக்கு வாங்கியவர்களுக்கு குறைந்த விலையில் ஊரிலேயே வாங்கியது மகிழ்ச்சியை கொடுத்தது. மதியம் சாப்பிட்டு விட்டு சற்று நேரம் உறங்கியவர்கள், கிடுகுகள் உள்ள இடத்தை விசாரித்து, அங்கு சென்று கிடுகுகள் வாங்கி வண்டிலில் அடுக்கி கட்டிய பின்னர் வீட்டிற்கு வந்தார்கள்.

விசாலாட்சி தனது உறவினர்களுக்கும் தோழிகளுக்கும் கொடுக்கும்படி இறைச்சி வத்தல், புளி, தேன், நெய் முதலியவற்றை அனுப்பியிருந்தாள்.  அவற்றை அவர்களிடம் சேர்ப்பித்தனர். பின் எருதுகளை தண்ணீர் குடிக்க வைத்து, வண்டிலின் கீழே தொங்கிய சாக்கில் அடுக்கி வைத்திருந்த வைக்கல் கட்டுகள் சிலவற்றை அவிழ்த்து உதறி எருதுகளுக்கு போட்டனர். இரவு உறவினர்கள் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு விறாந்தையில் பாயை விரித்து பிரயாணக் களைப்பு தீர நன்கு உறங்கினர்.

காலை எழுந்து காலைக்கடன் முடித்து, குளித்து விட்டு வந்த போது உறவினர்கள் தேநீரோடும், விசாலாட்சிக்கும் மற்றவர்களுக்கும் கொடுப்பதற்காக கறுத்தக் கொழும்பான் மாம்பழம், முருக்கங்காய் கட்டு, குரக்கன் மா, ஒடியல் மா, புழுக்கொடியல் முதலியவற்றுடனும் வந்திருந்தனர். அவற்றை பெற்றுக் கொண்ட ஆறுமுகத்தார் எருதுகளை தண்ணீர் குடிக்கச் செய்து வண்டிலில் பூட்டினார். ஆறுமுகத்தாரும் கணபதியும் விடை பெற்று மீசாலை சந்திக்கு வந்த போது மற்ற மூன்று வண்டில்களில் வந்தோர் தங்களுக்காக காத்திருப்பதை கண்டனர். எல்லோரும் பெரிய பரந்தனுக்கு பயணம் செய்தனர்.

காலம் வெகு விரைவாக ஓடியது. இப்போது கணபதி பதினாறு வயது இளைஞன். வயதிற்கு மிஞ்சிய வளர்ச்சி. சிறு வயதிலிருந்தே வயல் வேலைகள் செய்த படியால் நல்ல உடற்கட்டைக் கொண்டிருந்தான். தாயார் விசாலாட்சி நல்ல வெள்ளை நிறமானவள், ஆனால் கணபதி தகப்பனாரின் மாநிறத்தையும் அவரின் உயரத்தையும், கூடுதலாக அவரின் சாயலையுமே கொண்டிருந்தான். தம்பையரைப் போலவே குடுமி வைத்திருந்த கணபதியின் கூந்தல் பெண்களின் கூந்தல் போல அடர்த்தியாக இருந்தது. மீசை அரும்பத் தொடங்கி விட்டது. தலைமயிரை குடுமியாக கட்டி, நான்கு முழ வேட்டியை மடித்து கட்டி, சால்வையை தோளில் போட்டு அவன் நடந்து வரும் அழகை மீசாலையிலும் பெரிய பரந்தனிலும் இருந்த முறைப்பெண்கள் வேலி மறைவில் நின்று பார்த்து ரசித்தனர்.

இதுவரை உறவினர்களுக்கு இடையே தான் திருமணம் செய்வது அவர்களின் வழக்கம் என்பதால், தங்களை விட்டு இவன் எங்கு போய்விடப் போகிறான் என்ற நம்பிக்கையும் கொண்டனர்.

கணபதி பெரிய பரந்தனில் எல்லோர் வீட்டுக்கும் செல்லப்பிள்ளை. அவனது நல்ல பழக்க வழக்கங்கள் அவன் மீது எல்லோருக்கும் மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. எட்டாம் வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீரை எந்த ஒழுங்கில் பாய்ச்சினால் நல்லது என்பதிலும் ஒருவரின் வயலும் தண்ணீரில்லாமல் வாட விட்டுவிடக் கூடாது என்பதிலும் கணபதி தெளிவான அறிவைத் கொண்டிருந்தான். தனது வயலுக்கு முதலில் பாய்ச்ச வேண்டும் என்று அவசரப்பட மாட்டான்.

குஞ்சுப் பரந்தனில் உடையார் குடும்பத்தைக் சேர்ந்த ஒருவர் கமவிதானையாக துரைமார்களால் நியமிக்கப்பட்டிருந்தார். குஞ்சுப் பரந்தனில் இருந்த பெரும் பான்மையானவர்கள் உறவினர்களாகும். அப்படி இருந்தும் பத்தாம் வாய்க்காலிலிருந்து அந்த கமவிதானையார் ஒழுங்காக தண்ணீரை பங்கிடுவதில்லை என்ற முறைப்பாடு அடிக்கடி துரைமார்களுக்கு கிடைத்தது. எவ்வித நியமனமும் இன்றி கணபதி சிறப்பாக எல்லோருடைய ஆதரவுடன் எட்டாம் வாய்க்கால் நீரை பாய்ச்சுவதற்கு உதவி செய்து வந்தான்.

மீசாலை செல்லும் போதெல்லாம் ஆறுமுகத்தாரை எல்லோரும் கேட்கும் விசேஷம் எதுவும் இருக்கா என்ற கேள்விக்கு விடையாக விசாலாட்சி கருத்தரித்தாள். உரிய காலம் வந்த பொழுது பரந்தனில் யாரையும் ஒழுங்கு செய்யாது, தனக்கு கணபதி பிறந்த பொழுது பிரசவம் பார்த்த கிழவியையே அழைத்து வரும்படி விசாலாட்சி ஆறுமுகத்தாரிடம் கேட்டுக் கொண்டாள்.

சில நாட்களுக்கு முன்னரே மீசாலை சென்று சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரசவம் பார்த்து வரும்படி ஆறுமுத்தார் வற்புறுத்திய போதும் ஏனோ விசாலாட்சி அதனை மறுத்துவிட்டாள். ஆறுமுகத்தாரையும் கணபதியையும் தனியே விட்டு விட்டு போகவும் அவளுக்கு விருப்பம் இல்லை. ஆறுமுகத்தாரும் மீசாலை சென்று மருத்துவம் பார்க்கும் அந்த அம்மாவைக் கூட்டி வந்தார். 1916 ஆம் ஆண்டு ஆறுமுகத்தாருக்கும் விசாலாட்சிக்கும் ‘மீனாட்சியம்மாள்’ என்ற மகள் பிறந்தாள்.

மருத்துவமாது குழந்தையை தூய்மை செய்து எடுத்து வந்து கணபதியின் கைகளிலேயே பிள்ளையைப் கொடுத்தாள். மகிழ்ச்சியோடு குழந்தையை வாங்கிய கணபதி “தங்கச்சி” என்று அன்புடன் அழைத்தான்.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

முன்னையபகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More