வாஷிங்டன் : அமெரிக்காவில் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்திருக்கும் நிலையில், அவசர தேவைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி ம்ருந்தை பயன்படுத்த எஃப்.டி.ஏ. எனப்படும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கழகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் தடுப்பூசியை புழக்கத்திற்கு கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவிட் -19 நோய் தொற்று அமெரிக்காவில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அங்கு பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. இதையடுத்து கோவிட் -19 பரிசோதனையை நாடு முழுவதும் டிரம்ப் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் இணைந்து பிபைசர் என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசிக்கு இங்கிலாந்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், பிபைசர் தடுப்பூசியை அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கழகமும் அங்கீகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் பிபைசர் தடுப்பூசி மருந்தை புழக்கத்திற்குள் கொண்டு வர அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் அமெரிக்காவில் முதல் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும், அமெரிக்காவின் வயது முதிர்ந்த சீனியர் குடிமக்களுக்கும், கொரோனா தடுப்பு பணிகளில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் அடுத்தக் கட்டமாக இம்மாத இறுதியில் மற்றவர்களுக்குக் கிடைக்க வழி செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவிற்கு முன்னரே பிபைசர் தடுப்பூசி மருந்துகள் வாங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக கொள்முதல் செய்யும் நடவடிக்கை அமெரிக்க அரசு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.