Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி நடிகை ராதா பற்றி ஓர் கவர் ஸ்டோரி

நடிகை ராதா பற்றி ஓர் கவர் ஸ்டோரி

6 minutes read

“13 வயசுல ஹீரோயின்… 10 வருஷ மேஜிக்… இப்ப பிசினஸ் ஸ்டார்!” – நடிகை ராதா ஷேரிங்ஸ்

1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ராதா. இவரின் அக்கா அம்பிகாவும் இவரும் ஒரே காலகட்டத்தில் புகழ்பெற்றனர். நடிக்க வந்து ஆறே ஆண்டுகளில் 100 படங்களில் நடித்ததுடன், 10 ஆண்டுகளில் 162 படங்களில் நடித்தார். இது இந்திய அளவில் எந்த நடிகையும் செய்திடாத `அடி தூள்’ சாதனை. சினிமாவில் புகழுடன் இருந்தபோதே திருமணமாகி, பிசினஸ் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பிஸியானவர், தற்போது வரை மீண்டும் நடிக்கவில்லை.

கேரளாவில் தனக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடியவர், அது தொடர்பான படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். குடும்ப வாழ்க்கை, பிசினஸ் பயணங்கள் குறித்து ராதாவிடம் பேசினோம்.

குடும்பத்தினருடன் ராதா
குடும்பத்தினருடன் ராதா

கொரோனா லாக்டெளனில் மும்பையிலுள்ள வீட்டில் ஏழு மாதங்கள் முடங்கியிருந்தவர், தற்போது பிசினஸ் பணிகளில் மீண்டும் களமிறங்கியிருக்கிறார். கேரளாவில் தனக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடியவர், அது தொடர்பான படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். குடும்ப வாழ்க்கை, பிசினஸ் பயணங்கள் குறித்து ராதாவிடம் பேசினோம்.

“எங்க பிள்ளைங்க கார்த்திகா, விக்னேஷ், துளசி மூணுபேர் மேலயும் எனக்கு அளவு கடந்த பாசம் உண்டு. மேற்படிப்புக்காக மூணுபேரும் வெளிநாடுகளுக்குப் போனாங்க. அவங்களை ரொம்ப காலம் பார்க்காம என்னால இருக்க முடியாது. அதனால, வெவ்வேறு பகுதிகள்ல இருந்த அவங்களை சில மாதங்களுக்கு ஒருமுறை சந்திக்கப் போவேன். தவிர, குடும்பத்துடன் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சுற்றுலா போவோம். பெரும்பாலும் டிராவல்லதான் இருப்பேன். போன வருஷம் பிப்ரவரி இறுதியில குடும்பத்தோடு தாய்லாந்துக்கு டூர் போனோம். அப்பவே அங்க பலரும் மாஸ்க் போட்டுகிட்டு கொஞ்சம் பதற்றத்தோடு இருந்தாங்க.

ராதா - அம்பிகா
ராதா – அம்பிகா

அப்போ கொரோனா பத்தி எங்களுக்கும் பெரிசா விழிப்புணர்வு இல்ல. இந்தியா திரும்பிய கொஞ்ச நாள்லயே நம்ம நாட்டுலயும் அதுபத்தின செய்திகள் பரவி, கட்டுப்பாடுகள் கடுமையாச்சு. பிறகு, மும்பையில இருக்கிற எங்க வீட்டுலயேதான் அஞ்சு பேரும் இருந்தோம். கேரளாவுல மூணு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களும், ஸ்கூல், சினிமா தியேட்டர், கல்யாண மண்டபம்னு நிறைய பிசினஸ் வேலைகளை நிர்வகிக்கிறோம். கேரளாவுலயும் சென்னையிலயும் `ஏ.ஆர்.எஸ்’ங்கிற பெயர்ல ஸ்டூடியோ இருக்கு. மும்பையில பல ரெஸ்டாரன்ட்ஸ் நடத்தறோம். இதுலயெல்லாம் பல ஆயிரம் பேர் வேலை செய்யுறாங்க. லாக்டெளன் வந்த பிறகு, பிசினஸ் எதையும் நடத்த முடியல.

பிசினஸ் ரீதியா நிறைய சவால்கள் இருந்ததால நிறையவே வருத்தப்பட்டோம். நம்பிக்கையோடு சூழலைக் கடந்துவந்தோம். இனி ஆக்டிவ்வா வேலை செஞ்சு வளர்ச்சி பெறலாம்னு நம்பினோம். அந்த இறுக்கமான நிலையில் இருந்து என்னையும் கணவரையும் மீட்டது எங்க மூணு பிள்ளைங்கதான். படிப்பு, பிசினஸ்னு அவங்கவங்க வேலையா நாங்க தனித்தனியா இருந்தாலும், வருஷத்துல மூணு முறை தவறாம ஒண்ணு கூடிடுவோம். மும்பையிலுள்ள எங்க வீட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை ரொம்பவே கோலாகலமா கொண்டாடுவோம். களிமண்ணுல விநாயகர் சிலை செஞ்சு, வழிபாடு நடத்தி, நீர்நிலையில கரைக்கிற வரைக்கும் எங்க வீட்டுல திருவிழா கோலம்தான்.

அம்மா, அக்காக்களுடன் ராதா
அம்மா, அக்காக்களுடன் ராதா

ஆண்டுதோறும் ஏதாச்சும் ஒரு வெளிநாட்டுல கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம். தவிர, ஓணம் பண்டிகையின்போது என் குடும்பம், அம்பிகா அக்கா, மல்லிகா அக்கா, ரெண்டு தம்பிகள் குடும்பத்தாரும் கேரளாவுல இருக்கிற எங்க அம்மாவின் வீட்டுக்கு வந்துடுவாங்க. அஞ்சு பேரோட பிள்ளைகளையும் ஒரே இடத்துல பார்க்கிறது சந்தோஷமா இருக்கும். இதேபோலவே, லாக்டெளன்ல வீட்டுல முடங்கியிருந்த ஏழு மாதங்களும் மகிழ்ச்சியா இருந்துச்சு. அன்பு பரிமாற்றம், எதிர்காலத் திட்டமிடல், அரட்டை, விளையாட்டுனு கணவர், குழந்தைகளுடன் சந்தோஷமா இருந்தேன். டெக்னாலஜி விஷயங்களைப் பிள்ளைங்ககிட்ட இருந்து கத்துகிட்டேன். சோஷியல் மீடியாவை ஆக்டிவ்வா பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஓ.டி.டி தளங்கள்ல நிறைய சினிமாக்கள் பார்த்தேன்.

இந்த நிலையில, கடந்த ஆகஸ்ட் மாதம் எங்க ஹோட்டல் நிர்வாக வேலைகளைக் கவனிக்க கேரளா வந்தேன். இங்க இருக்கிற எங்க இன்னொரு வீட்டுலதான் இப்பவரை தங்கியிருக்கோம். கொரோனா பாதிப்பால பிசினஸில் பல வருஷம் பின்னாடி போன மாதிரி இருக்கு. இப்ப படிப்படியா ஹோட்டலை நாடி மக்கள் வர்றாங்க. ஆனா, கோவிட் பிரச்னைக்கு முன்பு இருந்த நிலைக்குத் திரும்ப இன்னும் ஒரு வருஷத்துக்கு மேல ஆகும். எப்படியும் சமாளிச்சு வந்திடுவோம். கொரோனா பாதிப்பால ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை மறந்து, புது வருஷத்தைச் சந்தோஷமா வரவேற்கணும்னு பார்ட்டிக்கு ஏற்பாடு செஞ்சோம். கேரளாவிலுள்ள எங்களோட `உதய் சமுத்ரா கோவளம்’ ஸ்டார் ஹோட்டல குடும்பத்தோடு புத்தாண்டு கொண்டாடினோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறுபவர், சினிமா மற்றும் பர்சனல் விஷயங்கள் குறித்துப் பேசினார்.

குடும்பத்தினருடன் ராதா
குடும்பத்தினருடன் ராதா

“எங்க வீட்டுல அம்பிகா அக்காவுக்கும் எனக்கும் சின்ன வயசுல இருந்தே சினிமா மேல அதீத ப்ரியம். நிறைய படங்கள் பார்த்தே, அந்தந்த கேரக்டர் பெண்கள் இப்படித்தான் இருப்பாங்கன்னு புரிஞ்சுகிட்டோம். அதனால, சினிமாவுக்குள் வந்த பிறகு, எந்த கேரக்டரா இருந்தாலும் எளிதா புரிஞ்சுக்கவும் கேரக்டர்ல ஒன்றிப்போய் நடிக்கவும் முடிஞ்சது. பாரதிராஜா சார் படத்துக்காக அம்பிகா அக்கா ஸ்கிரீன் டெஸ்ட்டுக்குப் போனாங்க. அந்தக் கதைக்கு அக்கா தேர்வாகல. எதேச்சையா என்னோட போட்டோவைப் பார்த்த பாரதிராஜா சார், `அலைகள் ஓய்வதில்லை’ படத்துல என்னை நாயகியா செலக்ட் பண்ணினார். அப்போ எனக்கு 13 வயசுதான்!

அந்தப் படத்துக்குப் பிறகு, நடந்ததெல்லாம் மேஜிக்தான். டீன் ஏஜ்லயே முன்னணி ஹீரோயினா ஹோம்லி, கிளாமர் ரோல்னு மாறிமாறி நடிச்சேன். அந்தச் சூழல் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. இரவு பகலா நடிச்சேன். எந்தச் சோர்வும் தெரியாத வகையில அம்மாவும், அக்கா அம்பிகாவும் எனக்கு உதவியா இருந்தாங்க. அதனாலதான், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளிலும் நிறைய படங்கள்ல நடிக்க முடிஞ்சது. தவிர, ஒவ்வொரு மொழியிலயும் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியா நடிக்கும் வாய்ப்புகள் நிறையவே கிடைச்சது.

Radha
Radha

என்.டி.ராம ராவ் – பாலகிருஷ்ணா, சிவாஜி – பிரபு, நாகேஸ்வர ராவ் – நாகார்ஜுனானு, அப்பா – பிள்ளை ஸ்டார்களுக்கு ஜோடியா நடிச்சேன். வெற்றிகளும் அதிகம் கிடைச்சது. எனக்குக் கிடைச்ச பெயரும் புகழும் நானே எதிர்பார்க்காதவை. இந்திய சினிமாவுல யாருக்கும் கிடைக்காத பெருமையா அக்கா அம்பிகாவும் நானும் ஒரே நேரத்துல முன்னணி நடிகைகளா இருந்தோம். எங்களுக்குள் எந்தப் போட்டியும் இருந்ததில்ல. தமிழ், மலையாளம், கன்னடத்துல அக்கா பயங்கர பிஸி. தமிழ், தெலுங்குல நான் பிஸி.

என்னோட காஸ்டியூம், மேக்கப் விஷயங்கள்ல என்னைவிட அம்பிகா அக்காதான் அதிக அக்கறையோடு இருந்தாங்க. இப்ப வரைக்கும் அம்பிகா அக்கா என்னோட அம்மா மாதிரிதான். மல்லிகா அக்காவுக்கு சினிமா மீது விருப்பம் கிடையாது. அமைதியான குணம். பிசினஸ் பண்ணிட்டு இருக்கும் அவங்க எந்த இடத்துலயும் தன்னை முன்னிலைப்படுத்திக்க மாட்டாங்க. அதனால, அவங்கள பத்தி பெரிசா யாருக்கும் தெரியாது.

அம்பிகா - ராதா
அம்பிகா – ராதா

நடிப்பு, பிசினஸ்னு நாங்க பிஸியா இருந்தாலும், ஒருபோதும் குடும்பப் பாசத்தையும், அன்பையும் குறைச்சுகிட்டதில்ல. இதை எங்கக் குழந்தைகளுக்கும் கத்துக்கொடுத்திருக்கோம். நான் வளர்ந்த சினிமாங்கிற வீடுதான் எனக்கு நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக்கொடுத்துச்சு. பிறந்த வீடு, அனுபவங்கள் கற்ற சினிமா வீடு, புகுந்த வீடுனு எனக்கு மூணு வீடு கிடைச்சதில் எப்போதும் அளவுகடந்த பெருமை. என்னைத் தேடி வந்த வாய்ப்புகளைச் சரியா பயன்படுத்தி 10 வருஷங்கள் ஓய்வில்லாம நடிச்சேன். நடிகைகளுக்கு உண்மையான வாழ்க்கை தொடங்கறதே குடும்ப வாழ்க்கையிலதான். அதனால, இனி குடும்ப வாழ்க்கைக்குத்தான் முன்னுரிமைனு முடிவெடுத்தேன். அதன்படித்தான் இப்பவரை செயல்படுறேன்.

பிள்ளைங்களை கவனிச்சுகிட்டதுபோக, கணவரின் பிசினஸ்லயும் கவனம் செலுத்தினேன். ஒருகட்டத்துல பிசினஸ் மேல அதீத ஆர்வமும் அன்பும் ஏற்பட்டுச்சு. எங்க தொழில்களை விரிவுபடுத்தி நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தோம். எங்களுக்குப் பிறகு, பிள்ளைங்கதான் பிசினஸ் பொறுப்புகளைக் கவனிக்கப்போறாங்க. அன்பான, திறமையான கணவர் ராஜசேகரன் நாயர், பாசமான குழந்தைகள்னு எல்லா விஷயங்களும் என் எதிர்பார்ப்புக்கு மீறியே கிடைச்சது.

Radha
Radha

அதனாலதான் என்னவோ தெரியல, இதுக்கிடையே எத்தனையோ சினிமா வாய்ப்புகள் வந்தும் ஏற்க முடியல. 30 வருஷமா நடிக்கலையே தவிர, சினிமா உலகத்தோடு தொடர்ந்து நட்பில்தான் இருக்கேன். கொரோனா காலத்துல இருந்து சோஷியல் மீடியா பயன்பாட்டுல எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டிருக்கு. யூடியூப் சேனல் ஒண்ணு ஆரம்பிக்கப்போறேன். அதில், என்னோட சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் திட்டமிட்டிருக்கேன். என்னோட சினிமா நண்பர்களைச் சந்திச்சு நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்கப்போறேன்” என்று கலகல சிரிப்புடன் நிறைவு செய்தார் ராதா.

நன்றி : விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More