தமிழ்த் திரைப்பட சங்கத்தின் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சென்னையில் சனிக்கிழமை (செப்.7) நடைபெறுகிறது.
2013 – 2015-ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் இத்தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 73 பேர் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு கேயார்-எஸ்.தாணு அணிகளுக்கிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
2 இடங்களைக் கொண்ட துணைத் தலைவர் பதவிக்கு 11 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இறுதியாக சுபாஷ் சந்திரபோஷ், பவித்ரன், கதிரேசன், டி.ஜி.தியாகராஜன் உள்ளிட்ட 5 பேர் போட்டியிடுகின்றனர்.
2 இடங்களைக் கொண்ட செயலாளர் பதவிக்கு 10 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களில் ஞானவேல்ராஜா, சிவசக்தி பாண்டியன், டி.சிவா, பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட 5 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். புஷ்பா கந்தசாமி, ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
21 இடங்களைக் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 72 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 13 பேர் விலகிக்கொள்ள அழகன் தமிழ்மணி, விஜயமுரளி, நடிகை தேவயானி, எஸ்.ஜே.சூர்யா உள்பட 59 பேர் இறுதிப் பட்டியலில் உள்ளனர்.
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்க உள்ள இத்தேர்தல் காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணி வரை நடைபெறும். மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன், ஜெகதீசன் ஆகியோர் மேற்பார்வையில் இத்தேர்தல் நடக்கிறது. 3 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களில் சங்கத்தின் நிரந்தர அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்கலாம். வாக்குகள் சனிக்கிழமை (செப்.7) மாலை 7 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.