சினிமா நூற்றாண்டு விழா: டோலிவுட் கலை நிகழ்ச்சிகள் ரத்து?சினிமா நூற்றாண்டு விழா: டோலிவுட் கலை நிகழ்ச்சிகள் ரத்து?

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் தெலுங்கு திரையுலகினர் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதில் இருந்து பின் வாங்கியுள்ளனர்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வருகிற 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவிருக்கிறது. விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா 21ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதன் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.

மேலும் விழாவை சிறப்பிக்கும் வகையில் கன்னட, தெலுங்கு, மலையாள மற்றும் தமிழ் திரையுலகினர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி 22-ம் தேதி காலை கன்னட திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகளும், மாலை தெலுங்கு திரையுலகினரின் நிகழ்ச்சிகளும், 23-ம் தேதி மலையாள திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகளும், நிறைவு நாளன்று தமிழ் திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகளும் நடப்பதாக இருந்தது.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகினர் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதில் இருந்து பின் வாங்கியுள்ளனர். ‘’தெலுங்கான பிரச்சனைக்காக மக்கள் போராடி வரும் இத்தருணத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது என்பது பொருத்தமாக இருக்காது என பின் வாங்கியதற்கான காரணம் குறித்து தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது. இருப்பினும், விழாவில் கலந்துகொள்வதில் எவ்வித மாற்றமும் கிடையாது என்று அதில் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்