சினிமா நூற்றாண்டு விழா: இன்று முதல் படப்பிடிப்புகள் ரத்துசினிமா நூற்றாண்டு விழா: இன்று முதல் படப்பிடிப்புகள் ரத்து

இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி புதன்கிழமை (செப்.18) முதல் ஏழு நாள்களுக்கு (செப்.24 வரை) படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்திய சினிமா நூற்றாண்டு விழா வரும் 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சென்னையில் கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவை 21-ஆம் தேதி மாலை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில், குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி உள்பட நான்கு மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள்.

வரும் 21-ஆம் தேதி மாலை தமிழ்த் திரை கலைஞர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 22-ஆம் தேதி காலை கன்னடக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. செப்டம்பர் 22-ஆம் தேதி மாலை தெலுங்கு கலைஞர்களும் 23-ஆம் தேதி காலை மலையாளக் கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

தமிழ்த் திரை கலைஞர்கள் சார்பில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் நயன்தாரா, அஸின், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் விஷால், ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களும் பங்கேற்கிறார்கள்.

நூற்றாண்டு விழாவையொட்டி சினிமா படப்பிடிப்புகள் புதன்கிழமை முதல் 24-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன. இதையடுத்து வெளியூர் படப்பிடிப்புகளில் பங்கேற்றுள்ள நடிகர், நடிகைகள் சென்னைக்கு திரும்புகின்றனர்.

ஆசிரியர்