சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று விடுகின்றனர்: ரஜினிகாந்த் உருக்கமாக பேசினார்சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று விடுகின்றனர்: ரஜினிகாந்த் உருக்கமாக பேசினார்

சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையிலும், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவிலும் தோற்றுவிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசினார்.

திரைப்பட நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திய தமிழக முதல்வருக்கும், என் திரையுலக அண்ணன் கமலுக்கும், ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,

என்னை திரையுலகில் அறிமுகம் செய்த இயக்குநர் பாலசந்தர், என்னை நிலை நிறுத்திய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வில்லனாக நடிக்க வந்த எனக்கு, “காமெடி உனக்கு நன்றாக வரும்” என்று சொன்னவர் இயக்குநர் பாலசந்தர். “ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் இயல்பான நடிப்பை சொல்லிக் கொடுத்தவர் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்.

இயற்கையான நடிப்பை “முள்ளும் மலரும்’ படத்தில் கற்றுக் கொடுத்தவர் இயக்குநர் மகேந்திரன். “பாட்சா’ படத்தில் சுரேஷ் கிருஷ்ணா, “படையப்பா’, “முத்து’ இப்போதைய “கோச்சடையான்’ வரை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் என அனைவரும் சேர்ந்து என்னை உயர்ந்த இடத்தில் வைத்து விட்டனர்.

உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் எப்போதும் தனிமையாகத்தான் இருப்பார்கள். “இதற்குத்தானா ஆசைப்பட்டாய் சிவாஜிராவ்?’ என்று சில நேரங்களில் யோசிக்கத் தோன்றும்.

பெருகி வரும் விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி சினிமாவை நாளுக்கு நாள் மெருகேற்றி வருகிறது. இருந்தாலும் “சந்திரலேகா’, “ஒளவையார்’ போன்ற படங்களைப் போல் எடுக்க முடியவில்லை. நான் முதலில் பார்த்த படம் “ஒளவையார்’. எனக்கு அப்போது இருந்த பிரமிப்பு இப்போது வரை உள்ளது. விபூதி பூசிய ஒரு துறவியின் வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு பிரமாண்டமாக எடுத்த எஸ்.எஸ். வாசனை நாம் எப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

சினிமாவில் தயாரிப்பாளர்கள்தான் மிகவும் சிரமப்படுகிறார்கள். பொதுவாக சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்றுவிடுகிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் தோற்றுவிடுகிறார்கள்.

சினிமா கலைஞர்கள் எப்போதும் தங்களை பொருளாதார ரீதியாக உயர்த்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு வேறு முயற்சிகளில் ஈடுபடலாம் என்றார் ரஜினிகாந்த்.

வாழும் மகான் கமல்

அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம்வரை நான் கமலின் ரசிகன். நாங்கள் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார்; நான் கஷ்டப்பட்டு நடித்தேன்.

இந்த சமூகம் எனக்கு கொடுக்கும் மரியாதை, சினிமா எனக்கு கொடுத்த பிச்சை. 38 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு நடிப்பைத் தவிர வேறொன்றும் தெரியாது. சில நேரங்களில் சினிமாவின் வேறு துறைகளில் ஈடுபட்டு என்னால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் கமல் அப்படியில்லை, அவருக்கு எல்லாம் தெரியும். இந்தக் காலத்தில் வாழும் மகானாக கமல் இருக்கிறார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வரும் பலருக்கு கமல்தான் உந்து சக்தியாக விளங்குகிறார். “அபூர்வ சகோதர்கள்’, “தசாவதாரம்’ போன்ற படங்களில் கமல் நடித்ததைப் போல் வேறு யாராலும் நடிக்க முடியாது என்றார் ரஜினிகாந்த்.

 

ஆசிரியர்