தன்னை வைத்து படமெடுக்க முடியாவிட்டாலும், நஷ்டம் ஏற்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இயக்குநர் கௌதம் மேனனுக்கு ரூ 10 கோடி தந்தார் சூர்யா என தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் கேரியரை உயர்த்திய படங்களில் முக்கியமானவை காக்க காக்க, வாரணம் ஆயிரம்.
இந்தப் படங்களை இயக்கியவர் கௌதம் மேனன். சூர்யாவும் கவுதமும் மீண்டும் இணைய முடிவெடுத்து, அந்தப் படத்துக்கு துருவ நட்சத்திரம் என்று தலைப்பும் வைத்துவிட்டனர். ஆனால் கதை ஒத்து வராததால், படத்தைத் தொடங்குவது இழுத்துக் கொண்டே போனது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கௌதம் மேனனுக்கும் தனக்கும் ஒத்துப் போகாததால், படத்திலிருந்து விலகுவதாக சூர்யா அறிவித்தார்.
இந்த அறிக்கை வெளியான மறுநாளை சூர்யா வீட்டுக்குப் போனாராம் கௌதம் மேனன்.
அவரை அன்புடன் வரவேற்ற சூர்யா, எப்போதும் போல உபசரித்ததுடன், தான் அந்தப் படத்துக்காக பெற்ற அட்வான்ஸ் ரூ 5 கோடியுடன் மேலும் 5 கோடி சேர்த்து பத்து கோடியாகத் திருப்பிக் கொடுத்து அனுப்பினாராம். சந்தோஷத்தில் திக்குமுக்காடியபடி வீடு திரும்பினார் கௌதம் மேனன் என்கின்றனர்.
கூடவே, ஏற்கெனவே சூர்யா இப்படி செய்ததற்கு ஒரு உதாரணத்தையும் எடுத்துப் போடுகின்றனர்.
சூர்யாவை சினிமாவுக்கு அறிமுகம் செய்த இயக்குனர் வசந்த், நொடித்துப் போன நேரத்தில் சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டாராம்.
அந்த சமயத்தில் வசந்த் வீட்டுக்கே போய், ‘ நாம் இணைந்து படம் பண்ணும் சூழல் இல்லை. நீங்கள் என்னை இயக்கி வெளியிட்டால் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை இப்போதே தருகிறேன்,” என சில கோடிகளைக் கொடுத்து உதவினாராம் சூர்யா.