நடிகர் சந்தானம், திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனைநடிகர் சந்தானம், திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சந்தானம், பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, ஏ.எம்.ரத்னம், ஞானவேல்ராஜா ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

இது குறித்த விவரம்:

திரைப்பட நடிகர் சந்தானம், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, ஏ.எம்.ரத்னம்,ஞானவேல்ராஜா ஆகியோர் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன. இந்தப் புகார்களின் அடிப்படையில் தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் சந்தானத்தின் வீடு மற்றும் அலுவலகம், பொழிச்சலூரில் அவர் குடும்பத்தினர் உள்ள வீடு ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தச் சென்றனர்.

அங்கு காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை வியாழக்கிழமை நள்ளிரவு வரை நீடித்தது.

இதேபோல தியாகராயநகர் கலிபுல்லா சாலையில் உள்ள சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ஆர்.பி. சௌத்ரியின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வளசரவாக்கம் காமகோடி நகரில் உள்ள சத்ய சாய் திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.எம்.ரத்னத்தின் வீடு மற்றும் அலுவலகம், தியாகராயநகர் தணிகாசலம் சாலையில் உள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல்ராஜா வீடு, அலுவலகம் ஆகியவற்றிலும் வருமான வரித்துறையினர் ஒரேநேரத்தில் சோதனை நடத்தினர்.

மேலும் சென்னையில் இவர்களுக்குச் சொந்தமான கட்டடங்கள், வீடுகள், பிற நிறுவனங்களின் அலுவலகங்கள் என மொத்தம் 23 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதேபோல சேலம், கோவை ஆகிய நகரங்களி உள்ள இவர்களது இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல ஏ.எம். ரத்னத்தின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சூர்யா மூவிஸ் நிறுவன அலுவலகம் உள்ள ஹைதராபாதிலும் இந்த சோதனை நடைபெற்றது.

சோதனை நடந்த இடங்களில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அங்கிருந்தவர்களின் செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

குறிப்பாக நடிகர் அஜித்குமார் நடித்து வியாழக்கிழமை வெளியான ஆரம்பம் திரைப்படத்தை தயாரித்த ஏ.எம். ரத்னத்தின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது, திரைப்படத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில் நடிகர் கார்த்தி நடித்து தீபாவளிக்கு வரவுள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடத்தியிருப்பது அந்த திரைப்பட குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞானவேல்ராஜா நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் உறவினர் ஆவார்.

நடிகர் விஜய் நடிக்கும் ஜில்லா திரைப்படத்தை ஆர்.பி. சௌத்ரி தயாரித்து வருகிறார்.

மொத்தம் 30 இடங்களில் நடைபெற்ற இச் சோதனையில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறையினர் சரி பார்த்தனர். இதில் பல முக்கிய ஆவணங்களும், பணமும் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தச் சோதனை வெள்ளிக்கிழமையும் நடைபெறும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

ஆசிரியர்