ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கான சர்வதேசத் திரைப்பட விழா, மும்பையில் வரும் 2014 பிப்.3-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து திரைப்பட விழாவின் இயக்குநர் வி.எஸ்.குண்டு செய்தியாளர்களிடம் சென்னையில் வெள்ளிக்கிழமை கூறியது:
ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கான சிறந்த களத்தை உருவாக்கும் விதத்தில் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த திரைப்பட விழாவில் அனிமேஷன் படங்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முழு நீள படங்களைத் தவிர்த்து குறும்பட உலகம் தனித்து இயங்கி வருகிறது. அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக இந்த திரைப்பட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்திய அளவில் 588 படங்களும், சர்வதேச அளவில் 205 படங்களும் கலந்துகொள்ள இருக்கின்றன. 34 நாடுகளைச் சேர்ந்த படங்கள் இதில் கலந்துகொள்கின்றன.
32 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. சுமார் ரூ.55 லட்சம் வரை பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆவணப்படம், சிறந்த குறும்படம், சிறந்த அனிமேஷன் படம், சிறந்த இயக்குநர், சிறந்த தயாரிப்பாளர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதைத் தவிர தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் அவர்களுக்கும் போட்டிப் பிரிவுகளில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் மட்டுமல்லாமல் சென்னை, கொல்கத்தா, தில்லி, பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களிலும் படங்கள் திரையிடப்படுகின்றன. ஆவணப்பட உலகில் பல சாதனைகள் புரிந்த வி.சாந்தாராமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
இளம் படைப்பாளிகள் பயன் பெறும் வகையில் கருத்தரங்குகள், விவாத மேடைகள், நடிப்பு பயிற்சிப் பட்டறைகள் ஆகியவையும் நடைபெறுகின்றன என்றார்.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: (0091) 022 – 23513633