தலைமுறைகள் – சினிமா விமர்சனம்தலைமுறைகள் – சினிமா விமர்சனம்

‘தலைமுறை’ இடைவெளிகளைத் தாண்டிய தாத்தாவுக்கும் பேரனுக்குமான பேரன்பு!

திடுக் திருப்பங்கள் இல்லை, பாடல்கள் இல்லை, அச்சுபிச்சு காமெடி இல்லை, ஆக்ஷன் சண்டைகள் இல்லை, டாஸ்மாக் காட்சிகள் இல்லை. ஆனால், எளிய மனிதர்களின் வாழ்க்கையை, உறவுகளின் உன்னதத்தை ரசிகர்களுக்கு ஜீவனுடன் கடத்துகிறார் இயக்குநர் பாலு மகேந்திரா!

‘வாட் இஸ் ரிவர்?’ என்று பேரன் கேட்க, ‘ரிவர் இஸ்… ரிவர் இஸ்…’ என்று இழுத்து ‘உங்க அம்மாகிட்ட கேட்டுக்கோ’ என்று ஓட்டமும் நடையுமாக பேரனிடம் இருந்து தப்பிக்கும் அந்த இடத்தில்… ‘அறிமுக நடிகர்’ பாலு மகேந்திரா… சான்ஸே இல்லை!

மருமகளையும் பேரனையும் காணவேண்டும் என்ற ஆவலை மறைத்து, ‘அவ வந்தா இங்கெல்லாம் சமைக்கக் கூடாது’ என்று வீம்பாகச் சொல்வது, 12 வருடங்களாகத் தேக்கிவைத்திருந்த அன்பை, ‘ஷூவைக் கழட்டிட்டுப் போடா’ என்ற ஓர் அதட்டலில் வெளிப்படுத்துவது, ‘இன்னமும் திருட்டுக் கல்யாணத்துக்குக் கையெழுத்துப் போட்டுட்டுத்தான் இருக்கியா?’ என்று மகனின் நண்பனைக் கிண்டலடிப்பது, ‘தமிழையும் தாத்தாவையும் மறந்துராதப்பா!’ என்று பேரனிடம் உருகுவது… என இது, நடிகர்-ஒளிப்பதிவாளர்-இயக்குநர்- பாலு மகேந்திரா ஸ்பெஷல்!

பேரனுக்கு தாத்தா தமிழ் கற்றுக்கொடுப்பதும், தாத்தாவுக்கு பேரன் ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதும் சற்றே நீளம் என்றாலும்… ரசிக்கலாம்!

தேவையான தருணங்களில் மட்டும் இழையோடும் இளையராஜாவின் பின்னணி இசை, படத்தின் ஆன்மாவாகக் கலந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவில் ஆறும் ஆறு சார்ந்த பகுதிகளிலும் ஈரம். கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளும் காட்சிகளில் கசியும் வெளிச்சம் முழுக்க அன்பு!

நிச்சயம் நம் சமூகத்துக்கு அவசியமான செய்தி சொல்லியிருக்கிறது ‘தலைமுறைகள்’. ஆனால், ஏன் இத்தனை வறட்சியாக? மொத்தத்

திரைப்படத்தையும் வசனங்கள் மூலம் மட்டுமே நகர்த்தியிருக்க வேண்டுமா? சின்னச் சின்ன வசனங்களையே நீளமாக இழுத்துப் பேசி, இரண்டு மணி நேரத்துக்கு நிரப்பியிருக்க வேண்டுமா? அத்தனை பாசக்கார தாத்தா, மகள் வழிப் பேரன்கள் மீது ஏன் அக்கறை செலுத்துவது இல்லை? அத்தனை கறார் சாதி ஆதரவாளர், ஒரு பாதிரியார் சொன்ன நான்கு வரியில் மனம் மாறுவது… சினிமா மேஜிக்!

இருந்தாலும், சாதியை ஒழிப்போம், தாய்ப்பால் கொடுப்போம், தமிழைக் கற்போம், கிராமம் பிரியோம்… என படம் முழுக்க வரும் நல்வாழ்க்கை நெறிமுறைகளுக்காக இந்தத் தலைமுறைகளை ஆராதிக்கலாம்!

நன்றி | ஆனந்த விகடன்

ஆசிரியர்