திரையரங்குகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்திரையரங்குகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்

சென்னையில் உள்ள திரையரங்குகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பள்ளிகள்,வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பெருநகர காவல்துறை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திரையரங்குகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு கூடுதல் ஆணையர் ராஜேஷ்தாஸ் தலைமை வகித்தார். இணை ஆணையர் சண்முகவேல், துணை ஆணையர்கள் சரவணன், கிரி, பகலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சென்னையில் உள்ள திரையரங்குகளின் உரிமையாளர்கள், மேலாளர்கள் என சுமார் 30 பேர் பங்கேற்றனர். இதில், திரையரங்குகளுக்கு வருபவர்களை கண்காணிக்கும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும், பார்வையாளர்களை சோதனையிட்ட பிறகே அரங்குக்குள் அனுமதிக்க வேண்டும், திரையரங்குக்கு வரும் வாகனங்களும் சோதனை செய்யப்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

ஆனால் இதுபோன்ற சோதனைகளுக்கு பார்வையாளர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்,இதனால் திரையரங்கில் பிரச்னை ஏற்படுவதாகவும் திரையரங்கு உரிமையாளர்களும், மேலாளர்களும் தெரிவித்தனர்.

இதைத் தவிர்க்கும்வகையில் திரையரங்கு வளாகத்தில் காவல்துறையின் எச்சரிக்கை பலகை வைக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பரிசீலிப்பதாக அதிகாரிகள் கூறினர்.

ஆசிரியர்