April 2, 2023 4:01 am

பத்மபூஷண் விருது: தேசிய அளவில் ஆளுமை மிக்க அங்கீகாரம்பத்மபூஷண் விருது: தேசிய அளவில் ஆளுமை மிக்க அங்கீகாரம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

எனக்கு கிடைத்துள்ள பத்மபூஷண் விருது தேசிய அளவில் ஆளுமை மிக்க ஒர் அங்கீகாரம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது குறித்து கவிஞர் வைரமுத்து சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலை இலக்கியப் பணிகளுக்காக பத்மபூஷண் விருது எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தேசிய அளவில் ஆளுமை மிக்க ஓர் அங்கீகாரமாகும். இந்த விருது பெறுவதன் மூலம் அது தருகிற மகிழ்ச்சியை நான் மறைக்க விரும்பவில்லை. மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். நீண்ட பயணத்தில் நெல்லிச்சாறு போல இனி ஆற்றவிருக்கும் பணிகளுக்கு இது ஊட்டமும் உற்சாகமும் தரும் என்று நம்புகிறேன்.

இது இட்டுக் கொள்வதற்கான பட்டம் அல்ல. பெற்றுக்கொள்வதற்கான விருது என்று புரிந்து கொள்கிறேன். விருது என்பது பயணத்தின் முடிவல்ல. பயணப்பாதையில் இளைப்பாறிக் கொள்ளும் ஒரு பாலைவனச் சோலை. சற்றே இளைப்பாறிவிட்டு இன்னும் விரைந்து ஓடுவேன். கலை இலக்கியத்தின் வழியே மனிதகுல மேம்பாடு என்ற குறிக்கோளைத் தொடுவேன். இந்த ஆண்டு பத்ம விருது பெற்ற பெருமக்களையெல்லாம் வாழ்த்துகிறேன். என்னை இந்த விருதுக்கு முன்னெடுத்துச் சென்ற தமிழ்ச் சமுதாயத்தை வணங்கி நன்றி சொல்கிறேன் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை குறிப்பு: தேனி மாவட்டம், மெட்டூர் என்ற கிராமத்தில் 1953ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை ராமசாமித் தேவர். தாயார் அங்கம்மாள். வடுகப்பட்டியில் உயர்நிலைக்கல்வி முடித்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ படித்துத் தங்கப்பதக்கம் வென்றார். தமிழ்நாடு அரசு ஆட்சிமொழி ஆணையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது 1980-இல் பாரதிராஜாவின் “நிழல்கள்’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். “வைகறை மேகங்கள்’ முதல் “மூன்றாம் உலகப்போர்’ வரை 36 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இதுவரை 7500 பாடல்கள் எழுதியிருக்கிறார். 6 முறை தேசிய விருது பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வைரமுத்து. பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருதினையும் 6 முறை பெற்றிருக்கிறார்.

2003-இல் இலக்கியப் பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருது பெற்றார். இவர் எழுதிய “கள்ளிக்காட்டு இதிகாசம்’ 2003-இல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களிலும் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்