லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரபேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மறுபக்கம் பிரச்சாரத்திற்கு நட்சத்திர பட்டாளத்தை அழைத்து வர திட்டமிடப்படுகிறது. இந்நிலையில் நடிகைகளுக்கு தான் படுகிராக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக நடிகை நமீதாவை தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளனவாம்.
மார்க்கெட் இல்லாத நமீதா அரசியலில் குதிக்கப் போவதாக தெரிவித்தார். தான் எந்த கட்சியில் சேருவேன் என்பதை அடுத்த மாதம் அறிவிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நமீதா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி இருக்கும் கட்சியில் சேர்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திமுகவில் சேரப் போவதாகவும் பேசப்படுகிறது. வரும் லோக்சபா தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யுமாறு நமீதாவிடம் அதிமுக சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
நமீதாவுக்கு கோலிவுட்டில் மவுசு இல்லாவிட்டாலும் அரசியல் கட்சிகளிடையே படுகிராக்கியாக உள்ளது. அவர் எந்த கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நமீதா தவிர சிம்ரன் மற்றும் அண்மையில் மார்க்கெட் இழந்த நடிகைகளையும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாம்.