April 2, 2023 4:02 am

கிராமத்திலும் ‘அம்மா திரையரங்கம்’ நிறுவ வேண்டும்: தமிழக முதல்வருக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள்கிராமத்திலும் ‘அம்மா திரையரங்கம்’ நிறுவ வேண்டும்: தமிழக முதல்வருக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சென்னை மட்டுமில்லாமல் கிராமங்களிலும் அம்மா திரையரங்கங்களை திறக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பசித்த வயிற்றுக்கு குறைந்த விலையில் அம்மா உணவகம் ஆரம்பித்த போதே நீங்கள் ஏழைகளின் இதயங்கள் நிரந்தரமாக குடியேறி விட்டீர்கள். இப்போது ‘அம்மா திரையரங்கம்’ திட்டம் கொண்டுவந்ததின் மூலமாக திரையுலகில் வாழ்க்கை இழந்து, எப்படி இனி திரைப்படம் எடுத்து வாழப்போகிறோம், என தவித்து நின்ற ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள் இதயங்களிலும், கண்களில் ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு இயக்குனராகவே வாழ்ந்து மடிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட என் போன்ற ஆயிரக்கணக்கான இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் இதயங்களில் என்றும் மறக்காத, மறக்க நினைக்காத வண்ணம் நீங்கள் குடிகொண்டு விட்டீர்கள்.

இந்த திட்டம் சென்னை நகரம் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் நிறுவப்பட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். இந்த திட்டத்தின் மூலமாக தமிழகத்திலிருந்து திருட்டு விசிடியை கட்டுப்படுத்தி, எல்லா தயாரிப்பாளர்கள் குடும்பங்களிலும் விளக்கேற்ற முடியும். குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்கள் எல்லா திரைப்படங்களையும் பார்க்கவும், உழைத்து களைத்த மக்கள் பொழுதுபோக்கிற்காக குடும்பங்களுடன் திரையரங்கம் சென்று திரைப்படம் காணவும் நிச்சயம் வழி செய்யும்.

இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பயன்பெறுவதோடு அல்லாமல் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவும் வழி செய்யும். இந்த திட்டம் நிறைவேற நீங்கள் இடும் கட்டளைகளை செவ்வனே நேர்மையான வழியில் செய்து முடிக்க நான் என்றும் உங்கள் பின்னால் பணிவோடு நிற்க தயார்.

உங்கள் ஆட்சிகாலம்தான் தமிழகத்தின் பொற்காலம். திரையுலகிலிருந்து சென்று முதல்வராகிய நீங்கள் இந்த திரையுலகை வாழவைக்க நன்றியோடு எங்களுக்கு அளித்திருக்கும் இந்த கொடை இலக்கியங்களிலும், இதிகாசங்களிலும் ஏன் இவ்வையகத்தில் பதவிக்கு வந்த யாருமே செய்யாத, அளிக்காத கொடை…

எங்கள் நன்றிகள் எங்கள் கண்களில் கண்ணீர் துளிகளாக வழிகிறது. இனிமேல் எங்களுக்கு நஷ்டம் என்ற ஒன்று இருக்காது. எங்கள் படைப்பை தமிழக மக்கள் அனைவரும் பார்க்கப்போகிறார்கள் என்ற சந்தோஷத்தில் நான்.. நாங்கள் ஆனந்தக் கூத்தாடுகிறோம், என்பதே உண்மை.

இவ்வாறு இயக்குனர் சேரன் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் ‘அம்மா திரையரங்கம்’ என்ற பெயரில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்றும், அதில் படம் பார்க்க குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டில் அண்மையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்