“தன்னுடைய புகழ் பெற்ற படமான ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் தலைப்பை தேர்வு செய்து கொடுத்ததே இளையராஜாதான்..” என்று இயக்குநர் மகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்ச் சினிமாவின் அடையாள இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திரன், தற்போது மீண்டும் படம் இயக்க வந்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இன்னமும் தலைப்பு வைக்கவில்லையாம். இசை இசைஞானி இளையராஜதான். படத்தின் கதை புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையாம். படத்தின் ஒளிப்பதிவை சஞ்சய் லோக்நாத் மேற்கொள்கிறார். இவர் புகழ்பெற்ற பழம் பெரும் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத்தின் மகன். எடிட்டிங் காசி விஸ்வநாதன். சரவணன் என்ற தயாரிப்பாளர் இதனைத் தயாரிக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
அப்போது பேசிய இயக்குனர் மகேந்திரன், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்குகிறேன்.
கொஞ்ச நாட்களாக எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் என்னுடைய சில விஷயங்களை சமரசம் செய்து கொள்ள முடியாததால் அவற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படம் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் கதை. உங்களுக்கெல்லாம் தெரிந்த கதை தான்.
என் படங்கள் சிலவற்றுக்கு இளையராஜாதான் தலைப்பு வைத்தார். ‘உதிரிப் பூக்கள்’ என்ற தலைப்புகூட அவர் வைத்ததுதான். அதேபோல இந்தப்படத்துக்கும் அவர்தான் தலைப்பு வைப்பார்.
என் படங்களில் பெரும்பாலான வசனங்களை இளையராஜாதான் எழுதியிருப்பார். குழப்பமாக வேண்டாம். நான் எடுத்த பெரும்பாலான எடுத்த மவுனக் காட்சிகளுக்கெல்லாம் தன் பின்னணி இசையால் அர்த்தமுள்ள வசனங்கள் எழுதியவர் இளையராஜாதான். அதனால் தான் அப்படிச் சொன்னேன். அவர் இல்லாமல் என் படங்கள் எப்போதுமே இல்லை.
நானெல்லாம் சினிமா இயக்க வந்ததே விபத்துதான். ஏதோவொரு உந்துதலால் படம் இயக்க வந்தேன். அதற்கு முன் நிறைய படிச்சபிறகுதான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்துச்சு. ஆனால் அவர் ஒரு பிறவி மேதை’’ என்றார்.