விஜய்யுடன் ‘கத்தி’ மற்றும் சூர்யாவுடன் ‘அஞ்சான்’ படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா, அரசியலில் குதிக்க போவதாக ஆந்திரா முழுவதும் பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதனால் லிங்குசாமி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் நடிகை சமந்தா சேரப்போவதாகவும், ஆந்திரா முழுவதும் அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் ஆந்திரா முழுவதும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவலை ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியினரும் மறுக்கவில்லை. சமந்தா தெலுங்கானாவில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அந்த வதந்தி நீண்டுகொண்டே போகிறது.
இதுகுறித்து இன்று தனது டுவிட்டரில் விளக்கம் கொடுத்த சமந்தா, “நான் அரசியலில் சேரப்போவதாக வந்துள்ள செய்தியில் சிறிதும் உண்மையில்லை. எனக்கு ஜெகன்மோகன் ரெட்டி மீது நல்ல மரியாதை உண்டு. அவருடைய கட்சி வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் ஆனால் அதற்காக அரசியலில் இறங்கும் எண்ணம் எனக்கு சிறிதும் இல்லை” என்று கூறியுள்ளார்.
அவர் திடீரென அரசியலில் இறங்கினால் அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் கத்தி மற்றும் அஞ்சான் படத்தின் படப்பிடிப்புகள் பாதிக்கும் என லிங்குசாமியும் முருகதாஸும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். சமந்தாவின் டுவிட்டர் விளக்கத்திற்கு பிறகே இருதரப்பினரும் நிம்மதி அடைந்துள்ளனர்.