0
தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக திரைப்பட வளர்ச்சி கழகம் (பிலிம் டெவலெப்மெண்ட் கார்ப்பரேஷன்) என்ற தனி அமைப்பு உருவாக்க வேண்டும் என்று தமிழ் திரைப்படத்துறையினர் தமிழக அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர். இது தொடர்பாக பெப்சி தலைவர் அமீர், இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் தலைமையில் திரைப்படத்துறையினர் நேற்று (ஜூன் 24) செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்தித்து பேசினார்கள்.
பின்னர் இதுபற்றி அவர்கள் கூறியதாவது: தமிழ் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்காக பிலிம் டெவலெப்மெண்ட் கார்ப்ரேஷன் அமைக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அதனால் என்ன நண்மை என்பதையும் எடுத்துச் சொன்னோம். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இதுபற்றி நடவடிக்கை எடுக்கிறேன் என்று முதல்வர் கூறியிருந்தார். விரைவில் சட்டமன்றம் கூட இருக்கிறது. அப்போது செய்தி விளம்பரத்துறையின் மானியக்கோரிக்கை வரும்போது இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று நம்புகிறோம். அதனை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.