பாக்யராஜ் நடித்த ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ மற்றும் பிரபுதேவா கதாநாயகனாக அறிமுகமான ‘இந்து’ படங்கள் மீண்டும் தமிழில் ‘ரீமேக்’ ஆகின்றன.
‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படம் 1982–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. பாக்யராஜ் இயக்கி நடித்து இருந்தார். அவர் ஜோடியாக பூர்ணிமா நடித்தார். சுமன் முக்கிய கேரக்டரில் வந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள் மெலடி பாடல் மிகவும் பிரபலமானது. சண்முகராஜன் தயாரித்து இருந்தார். அவரே இப்போது ரீமேக் செய்கிறார். பாக்யராஜ் கேரக்டரில் அவரது மகன் சாந்தனு நடிக்கிறார். அதியமான் இயக்குவார் என தெரிகிறது. கதாநாயகி மற்றும் இதர நடிகர் நடிகை தேர்வு நடக்கிறது.
‘இந்து’ படம் 1994–ல் வந்தது. பிரபுதேவா ஜோடியாக ரோஜா நடித்தார். சரத்குமார் கவுரவ தோற்றத்தில் வந்தார். பவித்ரன் இயக்கினார். இதில் இடம் பெற்ற ‘வா முனிம்மா வா, ஏ குட்டி முன்னால, எப்படி எப்படி சமஞ்சது எப்படி, கொத்தமல்லி வாசம்’ பாடல்கள் ஹிட்டானது. இந்த படமும் வெற்றிகரமாக ஓடியது. இதை தற்போது பவித்ரனே ரீமேக் செய்து இயக்குகிறார். இதில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடக்கிறது.