சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘அஞ்சான்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று முந்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன் பேசும்போது, போகிற போக்கை பார்த்தால் சூர்யா நடிகர் சிவக்குமாரின் பெயரை கெடுத்துவிடுவார் என்று நினைக்கிறேன் என்று துவக்கத்திலேயே அரங்கை அதிர வைத்தார். அவரது பேச்சை கேட்ட சூர்யா கூட சற்றே அதிர்ச்சியுடன் காணப்பட்டார். பின்னர் பார்த்திபன் அதற்குரிய விளக்கத்தை கொடுத்தார்.அப்போது அவர் கூறியபோது,
சினிமாவில அடக்கம், அமைதி, பணிவுக்கு பெயர் போனவர் சிவகுமார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரை முந்திக்கொண்டு இப்போ சூர்யா எல்லா விழாக்களிலும், எல்லோரிடமும் ரொம்ப அடக்கமாகவும், அமைதியாகவும், பணிவோடும் நடந்து கொள்கிறார். பல விழாக்களில் நான் கலந்துகொண்டாலும் மேடையில் ஒரு ஓரத்திலேயே அமர்ந்திருப்பேன். அந்த விழாக்களுக்கு சூர்யா வந்தால் உடனே என் அருகில் வந்து நலமா என்பார். அதுமட்டுமின்றி இன்று அமர்ந்திருந்த இருக்கைக்கு வந்த சூர்யா, நான் உங்ககூட நடிக்கிறேன்னு தெரியுமா? என்று என்னிடம் கேட்டார். ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் நான் நடிப்பதை, அவர் என்னுடன் நடிப்பதாக கேட்டது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் இணைந்து நடிப்பதை இந்த பிறந்தநாளில் சூர்யா தனக்கு கொடுத்த விருந்தாக எடுத்துக் கொள்வதாகக் பார்த்திபன் கூறினார்.