பிரபல பாலிவுட் கதாநாயகனான ஹிரித்திக் ரோஷன்-சூஸானே கான் இடையிலான விவாகத்தை ரத்து செய்து மும்பை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கலைக் குடும்பத்தைச் சேர்ந்த ஹிரித்திக் ரோஷன் தனது இளமைப்பருவத்தில் இருந்து காதலித்துவந்த சூஸானே கான்-ஐ கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தற்போது 40 வயதாகும் ஹிரித்திக் ரோஷன், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக தாங்கள் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார்.
இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் மும்பை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருந்தனர். ஹிரித்திக் ரோஷனைப் போன்றே கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவரான -சூஸானே கானும் கணவரை பிரிந்து வாழ விரும்புவதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பரஸ்பர புரிந்துணர்வின்படி ஹிரித்திக் ரோஷனும் சூஸானே கானும் பிரிந்து வாழ மும்பை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக ஹிரித்திக் ரோஷனின் வழக்கறிஞர் மிருணாளினி தேஷ்முக் இன்று தெரிவித்தார்.
இதன் மூலம், இவர்களின் 13 ஆண்டுகால இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இந்த தம்பதியருக்கு ஹ்ரேஹான்(7), ஹ்ரிதான்(5) என்ற இரு மகன்கள் உள்ளனர்.