‘அனேகன்’ படத்திற்குப் பிறகு தனுஷ், பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு முடித்து தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படத்தையடுத்து ‘வேலையில்லா பட்டதாரி’ கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் சமந்தா நடித்து வருகிறார்கள். வேல்ராஜ் இயக்கும் இப்படத்தை அனிருத் இசையமைத்து வருகிறார். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதில் தனுஷ் ‘துள்ளுவதோ இளமை’ பாணியில் இளைஞனாக நடித்து வருகிறார். வேலையில்லா பட்டதாரி கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் தலைப்பு வேலையில்லா பட்டதாரி 2ம் பாகமாக இருக்க கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு ‘டீக்கடை ராஜா’ என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வேலையில்லா பட்டதாரி படத்தின் தலைப்பு பாடலில் டீக்கடை ராஜா நாங்க என்ற வரி இடம் பெற்றிருக்கும். ஆதலால் புதுப்படத்தின் தலைப்பு ‘டீக்கடை ராஜா’ என்று வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.