கடந்த 3ஆம் திகதி சினம் கொள் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதியுடன் இலங்கை அகதி பாத்திரத்தில் நடித்த அரவிந்தன் இப் படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.
முதல் கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த திரைப்படத்தில் ஈழத் கவிஞர் தீபச்செல்வனும் நடித்துள்ளார்.
சினம் கொள் படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளார் தீபச்செல்வன். வசனங்களையும் இவர்தான் எழுதினாராம். அண்மைய நாட்களில் வெளியிட்ட சினம் கொள் படத்தின் இரண்டு பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
கவிதைகள் வாயிலாக எல்லோராலும் நன்றாக அறியப்பட்ட தீபச்செல்வன் இந்த படத்தின் வாயிலாக சிறந்த நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளார் என்று படத்தை பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இது பற்றி தீபச்செல்வனிடம் கோட்டோம். “குறுகிய நேரம் நடித்தாலும் அழுத்தமான ஒரு பாத்திரம். இயக்குனர் ரஞ்சித், நடித்தே ஆக வேண்டும் என என்னை கேட்டதனால் நடித்தேன். சிறந்த வாய்ப்பு என்று இப்போது தான் உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.