படத்தின் நாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காப்பீடு செய்ய வேண்டும் என்று லைக்கா படத்தயாரிப்பு நிறுவனத்திடம் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
கமல், ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நூலிழையில் உயிர் தப்பினர். இச்சம்பவத்தையடுத்து கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்த பின்பே படப்பிடிப்பை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இனி படப்பிடிப்புத் தளத்தில் ஏதேனும் விபத்து நேரிட்டால் முழுப் பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும்.
எந்த ஒரு படத்தயாரிப்பு நிறுவனமும் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருக்கின்றனவா என பரிசோதிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். விபத்து நேரிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு காப்பீடு மற்றும் நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.