Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழ் சினிமா பறிகொடுத்த தேவதை | ஸ்ரீதேவி

தமிழ் சினிமா பறிகொடுத்த தேவதை | ஸ்ரீதேவி

3 minutes read

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு சினிமாவில் கோலோச்சி, இந்தி சினிமாவின் ராணியாக உயர்ந்த ஸ்ரீ தேவி, இப்போதும் தமிழ் ரசிக நெஞ்சங்களை ஆட்கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக 1969ல் முதன்முதலில் அறிமுகமான படம் துணைவன். அதே ஆண்டிலேயே மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரம். அதற்கு அடுத்த ஆண்டில் தெலுங்கு திரையுலகில் அறிமுகம். இப்படியாக தமிழில் துவங்கி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் நடித்து, இந்தியா முழுவதும் அந்தந்த மொழி நடிகையாகவே பிரபலமான கதாநாயகிகள் இந்தியாவில் வேறு யாருமே இல்லை.

தமிழில் துணைவன் துவங்கி, 2015ல் வெளிவந்த புலி வரை, 72 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. ஹிந்தியில் அவருக்கு முதல் படம், 1975ல் வெளிவந்த ஜூலி. மரணமடைவதற்கு முன்பாக, ஷாருக்கானுடன் அவர் நடித்துக்கொடுத்திருக்கும் ஸீரோ திரைப்படம் ஸ்ரீதேவி நடித்த கடைசிப் படமாக இருக்கலாம். ஜூலி முதல் ஸீரோ வரை இந்தியில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையும் 72தான்.

தெலுங்கில்தான் அவர் நடித்த படங்கள் அதைவிட அதிகம். 83 படங்களில் நடித்திருக்கிறார். இருந்தபோதும், துபாயில் அவர் மரணமடைந்தபோது, அவரை இந்திய ஊடகங்கள், பாலிவுட் கதாநாயகியாகத்தான் கருதி, துக்கமடைந்தது. தற்போது அவர் முழுக்க முழுக்க ஒரு இந்தி நடிகையாகப் பார்க்கப்படும் நிலையில், 1975ஆம் ஆண்டிலிருந்து 1986வரை தமிழ் சினிமாவில் கோலோச்சிய காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மாபெரும் கனவுக் கன்னியாக அவர் வீற்றிருந்தார்.

sri devi

“வைஜயந்தி மாலா, ரேகா, ஹேமாமாலினி ஆகியோர்கூட தமிழ்நாட்டிலிருந்து இந்தி சினிமாவுக்குச் சென்றிருந்தாலும் ஸ்ரீ தேவி அடைந்த உயரம் என்பது மிகப் பெரியது. 80களின் மத்தியில் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவராலும் அறியப்பட்டவராக ஸ்ரீதேவி இருந்தார்” என்று நினைவுகூர்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளரான சு. ராஜசேகர். அவர் சுட்டிக்காட்டுவதைப்போல, தென்னிந்தியாவிலிருந்து இந்தி சினிமாவுக்கு வந்தவர்களிலேயே, சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பிடித்தவர் ஸ்ரீ தேவி மட்டுமே.

’அப்பாவித்தனமும் அழகும்’

ஸ்ரீ தேவி தமிழில் நடிக்க வந்த காலகட்டத்தில், லதா, மஞ்சுளா, சாரதா, சுஜாதா, ஸ்ரீ பிரியா என பலரும் கதாநாயகிகளாக நடித்துக்கொண்டிருந்தாலும் அவர்கள் யாரிடமும் ஸ்ரீதேவியிடம் இருந்த ஒரு அப்பாவித்தனமும் அழகும் இருந்ததில்லை. அதுவே அவரைத் தனித்துவமானவராகக் காட்டியது என்கிறார் எழுத்தாளர் தேவிபாரதி.16 வயதினிலே படத்தில் மயிலு, மூன்று முடிச்சு படத்தில் செல்வி, சிவப்பு ரோஜாக்கள் சாரதா என ஆரம்பகாலப் படங்களில், ஒரு நெருக்கடியிலிருந்து வெளிவரத் துடிக்கும் பெண்ணாக அவர் தொடர்ந்து நடித்து வந்தது, அந்த காலகட்டத்தோடு மிகவும் பொருந்திப்போனது என்கிறார் தேவிபாரதி.

தமிழ்த் திரையுலகில் அந்த காலகட்டத்தில் நடித்தக்கொண்டிருந்த பல கதாநாயகிகளுக்குக் கிடைக்காத வாய்ப்பு ஸ்ரீதேவிக்குக் கிடைத்தது. 75களிலிருந்து 80களின் மத்திவரை கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் பல வெளிவந்தன. அவற்றில் பெரும்பாலும் ஸ்ரீதேவியே கதாநாயகியாக இருந்தார். மூன்று முடிச்சு, 16 வயதினிலே, இளையராணி ராஜலட்சுமி, வணக்கத்திற்குரிய காதலியே, சிவப்பு ரோஜாக்கள், பிரியா, கல்யாணராமன், லட்சுமி, ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிகலா, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை போன்ற படங்களில் ஸ்ரீதேவிக்கு வாய்த்த பாத்திரங்கள் அந்த காலகட்ட நடிகைகள் யாருக்கும் வாய்க்கவில்லை.

மாபெரும் நட்சத்திரமாக ஜொலித்த குழந்தை நடத்திரம்

“அந்த காலகட்டத்தில் அவருக்கு போட்டியே இல்லை. அழகு, அப்பாவித்தனம், அர்ப்பணிப்பு என அந்தக் காலத்து தமிழ் ஆண் மனதின் பெண் தேவதையாக ஸ்ரீதேவி திரையில் உருப்பெற்றிருந்தார். ஸ்ரீ பிரியா, சுஜாதா ஆகியோரை அப்படிச் சொல்ல முடியாது” என்கிறார் தேவிபாரதி. ஸ்ரீ தேவியின் கண்களில் ஒரு அழகும் அப்பாவித்தனமும் இருந்தது. அதனை தமிழ் சினிமா மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியது என்கிறார் தேவிபாரதி. அதற்கு உதாரணமாக, 16 வயதினேலே படத்தில், துவக்கத்திலேயே ஸ்ரீ தேவியின் கண்களின் க்ளோஸப் நீண்ட நேரத்திற்கு திரையில் காண்பிக்கப்படுவதை சுட்டிக்காட்டுகிறார் அவர்.

“ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்தபோது பேபி ராணி, பேபி ஷகிலா ஆகியோரும் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால், பிற்காலத்தில் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. ஆனால், ஸ்ரீ தேவி இந்தியாவின் மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்தார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் பெண் குழந்தைகள், பெரும்பாலும் பெரிய நட்சத்திரமாக பிற்காலத்தில் வருவதில்லை. ஸ்ரீ தேவி ஒரு விதிவிலக்கு” என்கிறார் ராஜசேகர். ஸ்ரீதேவி நடிக்கவந்த காலகட்டமும் அவருக்கு மிக உதவிகரமாக இருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரது காலகட்டம் முடிவுக்கு வந்து, ரஜினி – கமல் காலகட்டம் துவங்கியிருந்தது. 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவும் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருப்பதை பாரதிராஜாவும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த காலகட்டத்திற்குப் பொருத்தமானவராக ஸ்ரீ தேவி மட்டுமே இருந்தார் என்கிறார் ராஜசேகர்.

தெலுங்குப் படங்களில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகளே இந்தித் திரையுலகிற்கு அவரை அழைத்துச் சென்றன என்கிறார் ராஜசேகர். தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள், இந்திப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தபோது, அவர்கள் ஸ்ரீதேவியையே நாயகியாக நடிக்கவைத்தார்கள். ஆனால், வெகுவிரைவிலேயே தனது சொந்த பலத்தில் இந்தித் திரையுலகில் ஆதிக்கம்செலுத்த ஆரம்பித்தார் ஸ்ரீதேவி. 1983ல் வெளிவந்த ஹிம்மத்வாலா திரைப்படத்தின் வெற்றி அவரை எங்கோ கொண்டுசென்றது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, அடுத்த வாரிசு, சந்திப்பு, நான் அடிமை இல்லை என மூன்று தமிழ்ப் படங்களில் மட்டுமே ஸ்ரீ தேவி நடித்தார்.

நன்றி : வெப்துனியா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More