மலையாள திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளர் இடவேளை பாபுவின் கருத்துகள் குறித்து சங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்று கேட்டு நடிகைகள் ரேவதி, பத்மப்பிரியா கடிதம் எழுதியுள்ளனர். சமீபத்தில் இடவேளை பாபுவிடம், மலையாள திரையுலக ஊழியர்களின் நலனுக்காக உருவாக்கப்படும் படத்தில், நடிகை பாவனா இடம்பெறுவாரா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த இடவேளை பாபு, அந்த நடிகை சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்றும், இறந்தவர்களை தங்களால் உயிர்ப்பிக்க முடியாது என்றும் பதிலளித்தார். இதை கண்டித்த நடிகை பார்வதி, சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து ரேவதி, பத்மப்பிரியா இருவரும் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இடவேளை பாபுவின் கருத்து குறித்த சங்கத்தின் நிலைபாட்டுடன் சேர்த்து,பாவனாவுக்கு எதிராக சங்க துணை தலைவரும், எம்எல்ஏவுமான கே.பி.கணேஷ் குமார் தெரிவித்துள்ள கருத்து குறித்தும் விளக்கம் கேட்டுள்ளனர்.
‘மலையாள திரைப்பட நடிகர் சங்க உறுப்பினர்களில் 50 சதவிகிதம் பெண்கள் இருக்கின்றனர். ஆனால், அவர்களை பாதுகாக்கவும், ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும் எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால், அவர்களது பிரச்னைகளை பற்றி பொதுவெளியில் கிண்டலடித்து, அவர்களை தனியாக தவிக்க விடுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவது போல் தெரிகிறது. எவ்வளவு மோசமான சிக்கலை நம் அமைப்பு சந்தித்தாலும், ஒட்டுமொத்த தலைமையும் அமைதியாகவே இருக்கும்’’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.