‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் சிவாஜிக்கு வில்லனாக அதாவது ஆங்கிலத் தளபதி ஜாக்சன் துரையாக, சிவாஜியைப் பார்த்து ”நீர் தான் வீரபாண்டிய கட்டபொம்மனோ” என்கிற வசனத்தைப் பேசி நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகர் சி.ஆர். பார்த்திபன்.
”நீர் தான் வீரபாண்டியக் கட்டபொம்மன் என்பவரோ… என்னது மீசையை முறுக்குகிறாயா, அது ஆபத்துக்கு அறிகுறி…”
கருப்பு வெள்ளைக் காலத்தில் ஒலிக்கத் தொடங்கிய இந்த வசனங்களெல்லாம் இந்த டிஜிட்டல் காலத்திலும் தமிழ் சினிமா மறக்க முடியாத வசனங்களாக தொடர்ந்து ஒலிக்கின்றன.
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் சிவாஜிக்கு வில்லனாக அதாவது ஆங்கிலத் தளபதி ஜாக்சன் துரையாக வந்து சிவாஜியைப் பார்த்து இந்த வசனத்தைப் பேசியவர், நாடக நடிகராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் சுமார் 120 படங்கள் வரை நடித்த பழம்பெரும் நடிகர் சி.ஆர். பார்த்திபன்.
ராஜாஜி, அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா என ஆறு முதல்வர்களுடன் திரைப்படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட சி.ஆர். பார்த்திபன் ரஜினியுடன் ’மூன்று முகம்’, ‘விடுதலை’ ஆகிய படங்களிலும் கமலுடன் ‘காக்கி சட்டை’, ‘தேன் சிந்துதே வானம்’ உள்ளிட்ட படங்களிலும் கூட நடித்திருக்கிறார். இயக்குநர் விக்ரமன் இயக்கிய ‘புது வசந்தம்’ படத்திலும் சுரேஷின் அப்பாக வந்தவர் இவரே.
90 வயதைக் கடந்த நிலையில் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்த சி.ஆர். பார்த்திபன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார்.
அவர் மறைந்ததன் 13-வது நாள் ’சுபம்’ நிகழ்வு நேற்று முன்தினம் நடந்தது. பார்த்திபனின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் சினிமாத் தரப்பிலிருந்து நடிகர் நாசர் கலந்து கொண்டு பார்த்திபனின் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
பார்த்திபனின் மகன் ராமானுஜத்திடம் பேசினேன்.
‘’எல்.ஐ.சி ஏஜென்ட்டா இருந்துகிட்டே கிடைச்ச வாய்ப்பைத் தவற விடாம நடிச்சுட்டு வந்தார் அப்பா. எஸ்.எஸ்.வாசன், ராமண்ணா, பி.ஆர்.பந்துலு, ஸ்ரீதர் தொடங்கி கங்கை அமரன், பாக்யராஜ் வரைக்குமான தயாரிப்பாளர், இயக்குநர்கள் அப்பாவுக்கு வாய்ப்பு தந்திருக்காங்க.
நடிகர்கள்னு பார்த்தா எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ்னு முக்கியமான எல்லா நடிகர்களுடனும் நடிச்சிட்டார்.
வயோதிகம் காரணமா தொண்ணூறுகளின் பிற்பகுதியில நடிக்கறதை நிறுத்திட்டாலும், அதுக்குப் பிறகும்கூட சினிமா பார்த்துட்டேதான் இருந்தார். சில சினிமா நிகழ்ச்சிகளுக்கு அப்பாவை ஞாபகம் வச்சிருந்து கூப்பிட்டிருக்காங்க. அதேபோல சிவாஜி சார் குடும்பத்துல இருந்து அப்பப்ப பேசிட்டே இருப்பாங்க.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி விஜய் சேதுபதி நடிச்ச படத்தைப் பார்த்துட்டு ‘நல்லா நடிக்கிறார்ப்பா’னு சொன்னார். அதையே அவருக்கு வாய்ஸ் மெசேஜ் போட்டோம். உடனே கிளம்பி எங்க வீட்டுக்கே வந்துட்டார் விஜய் சேதுபதி. அப்பாகூட ரெண்டு மணி நேரத்துக்கும் மேல உட்கார்ந்து பேசிட்டுப் போனார்.
அப்பா சினிமாவுல இருந்தாலும் எங்களை எங்க போக்குல விட்டுட்டார். அதனால அவருக்குப் பிறகு சினிமாவுல எங்க குடும்பத்துல இருந்து யாரும் வரலை.
போன மாசம் அப்பா இறந்ததை சினிமாக்காரங்க யாருக்கும் நாங்க சொல்லலை. ஆனாலும் நடிகர் சங்கத்துல அப்பா சீனியர் உறுப்பினர்ங்கிறதால அங்க இருந்து இரங்கல் தெரிவிச்சாங்க. சிவாஜி சார் குடும்பத்துல இருந்து ராம்குமார், பிரபு போன் பண்ணி விசாரிச்சாங்க. பாடகி சுசிலாம்மாவும் விசாரிச்சாங்க. மத்தபடி அன்று யாரும் கலந்துக்கலை.
13-வது நாள் நிகழ்வுக்கு நடிகர் நாசர் சார் வந்திருந்தார். அவர் எங்கப்பாவை அப்பானுதான் கூப்பிடுவார். அப்பா உடல்நிலை சரியில்லாம இருந்தப்ப தொடர்ந்து விசாரிச்சிட்டே இருந்தார். எங்க குடும்பத்துக்கும் சினிமாவுக்குமான கடைசித் தொடர்பு, அநேகமா நாசர் சார் கலந்துகிட்ட இந்த நிகழ்ச்சியாத்தான் இருக்கும்னு நினைக்கிறோம்’’ என்றார்.
நன்றி : விகடன்