Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள்

சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள்

5 minutes read

“சிறுகதை மன்னன்” என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.

புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. தாயார் பர்வதம் அம்மாள்.

இவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனினும், சொக்கலிங்கம் பிள்ளை தாசில்தாராக வேலை பார்த்ததால், ஊர் ஊராகப் போகவேண்டியிருந்தது.

இந்நிலையில், கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலிïரில், 1906-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி புதுமைப்பித்தன் பிறந்தார்.

புதுமைப்பித்தனுக்கு எட்டு வயதானபோது, தாயார் பர்வதம் அம்மாள் காலமானார்.

அதன்பின், சொக்கலிங்கம் பிள்ளை மறுமணம் செய்து கொண்டார்.

புதுமைப்பித்தன் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் ஆரம்பக் கல்வி பயின்றார்.

சொக்கலிங்கம் பிள்ளை 1918-ல் ஓய்வு பெற்ற பின், சொந்த ஊரான திருநெல்வேலியில் குடியேறினார்.

புதுமைப்பித்தன், திருநெல்வேலி யோவான் கல்லூரியிலும், பின்னர் இந்துக் கல்லூரியிலும் படித்து 1931-ல் “பி.ஏ” தேறினார்.

மகன் அரசாங்க உத்தியோகத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொக்கலிங்கம் பிள்ளை விரும்பினார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

1931 ஜுலை மாதத்தில், புதுமைப்பித்தனுக்கும், திருவனந்தபுரத்தில் மராமத்து இலாகா அதிகாரியாக இருந்த பி.டி.சுப்பிரமணிய பிள்ளையின் மகள் கமலாவுக்கும் திருமணம் நடந்தது.

புதுமைப்பித்தன் நண்பர்களுடன் இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடுவது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். ஆனால் மகன் வெட்டிப்பொழுது போக்கிக் கொண்டிருப்பதாக சொக்கலிங்கம் பிள்ளை நினைத்தார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறுகள்  ஏற்பட்டன.

இந்தச் சமயத்தில், கே.சீனிவாசன் “மணிக்கொடி” என்ற இலக்கியப் பத்திரிகையை சென்னையில் தொடங்கினார். டி.எஸ்.சொக்கலிங்கம், “வ.ரா” ஆகியோர் அவருக்குத் துணையாக இருந்தனர்.

“மணிக்கொடி”யில் புதுமைப்பித்தன் கதைகள் எழுதினார். மற்றும் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் “காந்தி”, சங்கு சுப்பிரமணியத்தின் “சுதந்திரச் சங்கு” ஆகிய பத்திரிகைகளிலும் அவருடைய கதைகள் பிரசுரமாயின.

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் புதிய கோணத்தில், தனித்தன்மையுடன் திகழ்வதை “வ.ரா”வும், டி.எஸ்.சொக்கலிங்கமும் பாராட்டி, புதுமைப்பித்தனுக்குக் கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார்கள்.

புதுமைப்பித்தனுக்கு இருந்த இலக்கிய மோகம் அவரைச் சென்னைக்கு இழுத்துச் சென்றது. “மணிக்கொடி”யில் எழுதியதுடன், ராய.சொக்கலிங்கத்தின் “ஊழியன்” பத்திரிகையில் உதவி ஆசிரியர் பணியையும் கவனித்தார். எனினும், அந்தப்பதவியில் அவர் அதிக காலம்

நீடிக்கவில்லை.”மணிக்கொடி”யில் எழுதி வந்த புதுமைப்பித்தன், பின்னர் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் அழைப்பின் பேரில், “தினமணி” நாளிதழின் துணை ஆசிரியர் பொறுப்பில் சேர்ந்தார்.

“தினமணி” ஆண்டு மலரைத் தயாரிக்கும் பொறுப்பு புதுமைப்பித்தனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு மலர்களைச் சிறந்த இலக்கியப் பெட்டகங்களாகப் புதுமைப்பித்தன் கொண்டு வந்தார். “நாசகாரக்கும்பல்” போன்ற அவருடைய சிறந்த சிறுகதைகள், “தினமணி” ஆண்டு மலரில் வெளிவந்தவைதான்.

1943-ல் டி.எஸ்.சொக்கலிங்கம் “தினமணி”யை விட்டு விலகி, “தினசரி”யைத் தொடங்கினார். புதுமைப்பித்தனும் “தினசரி”யில் சேர்ந்தார். பிறகு சொக்கலிங்கத்துடன் மனத்தாங்கல் ஏற்பட்டு, தினசரியை விட்டு விலகினார்.

“தினமணி”யில் புதுமைப்பித்தனுடன் பணியாற்றிய சிலர் சினிமாத்துறையில் புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். “இளங்கோவன்” என்ற புனைப்பெயர் கொண்ட ம.க.தணிகாசலம், சினிமா வசனகர்த்தாவாக கொடிகட்டிப் பறந்தார். “மணிக்கொடி” ஆசிரியராக இருந்த பி.எஸ்.ராமையா சினிமா டைரக்டராக உயர்ந்திருந்தார். “மணிக்கொடி” துணை ஆசிரியர் கி.ரா. (கி.ராமச்சந்திரன்) ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார்.

எனவே சினிமா துறையில் நுழைய விரும்பினார், புதுமைப்பித்தன். “காமவல்லி” என்ற படத்திற்கு வசனம் எழுதினார். அதற்குக் கணிசமான பணமும் கிடைத்தது.

“அவ்வையார்” படத்தைத் தயாரிக்க முதன் முதலாக ஜெமினி திட்டமிட்டபோது, கி.ரா.வும், புதுமைப்பித்தனும் சேர்ந்து வசனம் எழுதினார்கள். (பின்னர் கே.பி.சுந்தரம்பாள் நடிக்க, ஜெமினி தயாரித்த அவ்வையார் படத்தில் புதுமைப்பித்தனின் வசனம் இடம் பெறவில்லை)

1945-ம் ஆண்டைப் பொறுத்தவரை புதுமைப்பித்தனுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. சொந்தத்தில் சினிமாப்படம் எடுக்கத் தீர்மானித்து, தன் தாயார் பெயரில் “பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்” என்ற படக் கம்பெனியையும் தொடங்கினார். குற்றாலக் குறவஞ்சி கதையை “வசந்தவல்லி” என்ற பெயரில் படமாக்க வேண்டும் என்பது, அவரது திட்டம்.

இதில், கதாநாயகனாக நாகர்கோவில் மகாதேவன் நடிப்பதாக இருந்தது. மகாதேவனை, சில நண்பர்கள் புதுமைப்பித்தனிடம் அழைத்து வந்தனர். பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்து முடிந்தது.

“கதாநாயகனுக்கு அட்வான்ஸ் கொடுங்கள்” என்று ஒருவர் கூற, புதுமைப்பித்தன் தன்னிடம் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அட்வான்சாகக் கொடுத்தார்!

அதன்பின், சில பத்திரிகைகளில் “வசந்தவல்லி” பற்றி விளம்பரங்கள் வெளிவந்தன. படம் தயாரிக்கப்படவில்லை.

அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி, சட்டத்துடன்

2ஷி ஆண்டு காலம் போராடி, 1947 ஏப்ரலில் விடுதலையானார்.

அவருடைய மகத்தான வெற்றிப்படங்களான “ஹரிதாஸ்”, “சிவகவி”, “அசோக்குமார்”, “அம்பிகாபதி” முதலான படங்களுக்கு வசனம் எழுதியவர் இளங்கோவன். அவருடன் மனத்தாங்கல் கொண்டிருந்த பாகவதர், விடுதலைக்குப்பின் சொந்தமாகத் தயாரித்த ”ராஜமுக்தி” படத்துக்கு வசனம் எழுத புதுமைப்பித்தனை அழைத்தார்.

படப்பிடிப்பு முழுவதும், புனாவில் அகில இந்தியப் புகழ் பெற்ற பிரபாத் ஸ்டூடியோவில் நடந்தது. புனாவுக்குச் சென்று, அங்கேயே தங்கி வசனம் எழுதினார், புதுமைப்பித்தன்.

வசனம் எழுதும் பணி முடிவடையும் தருணத்தில், அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

காசநோய் காரணமாக, அவர் உடல் நிலை வரவர மோசம் அடைந்தது. 1948 மே மாதம் முதல் வாரத்தில் மனைவி கமலா தங்கியிருந்த திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்தார். நடக்க முடியாமல் கம்பு ஊன்றி நடக்க வேண்டிய அளவுக்கு, அவர் உடல்நிலை மோசமடைந்திருந்தது.

“ராஜமுக்தி”க்கு வசனம் எழுதியதில் ஓரளவு பணம் கிடைத்திருந்த போதிலும், முழு நேர எழுத்தாளராக வாழ்ந்த காரணத்தாலும், தந்தையுடன் சுமுக உறவு இல்லாததாலும், புதுமைப்பித்தன் இறுதிக்காலத்தில் வறுமையுடன் போராட வேண்டியிருந்தது.

மனைவி கமலாவையும், ஒரே மகள் தினகரியையும், தமிழ்  இலக்கிய உலகையும் தவிக்க விட்டு, 30-6-1948 அன்று புதுமைப்பித்தன் காலமானார்.

புதுமைப்பித்தன் வரலாற்றில் ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சி:

தமிழ் இலக்கியத்துக்கு இணையற்ற சேவை செய்த புதுமைப்பித்தன் வறுமையுடன் போராடி தமது 42-வது வயதில் காலமானார். இதற்கு 20 ஆண்டுகளுக்குப்பின், தமிழக அரசு லாட்டரியில் அவர் மனைவி கமலாவுக்கு ரூ.2 லட்சம் பரிசு கிடைத்தது.

அந்த சமயத்தில், புதுமைப்பித்தனின் ஒரே மகள் தினகரிக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. “மகள் திருமணத்துக்கு, தந்தை கொடுத்த சீதனமாக இந்த பணத்தைக் கருதுகிறேன்” என்றார், கமலா விருதாசலம்.

தினகரி திருமணம் சிறப்பாக நடந்தது. கணவர் பெயர் சொக்கலிங்கம். இவர் என்ஜினீயர்.

புதுமைப்பித்தன் நூல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.

புதுமைப்பித்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

நன்றி : மாலைமலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More