இளம் தென்றல் 2013 நிகழ்ச்சிக்காக மெல்பேர்ண் வருகை தந்த சுப்பர் சிங்கர் ஜூனியர் பாடகி பிரகதி அவர்களுடன் நிகழ்ச்சியின் நடுவில் ஆவூரான் உரையாடியிருந்தார்.
நான் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்றுக் கொண்டு சங்கீதத்தையும் முறையாகக் கற்றுக் கொண்டு ரெனிஸ்சும் விரும்பி விளையாடுவேன் அதோடு வீணையும் வாசிக்க கற்றுக்கொள்கிறேன் என இளம் பாடகி பிரகதி தன்னை அறிமுகம் செய்திருந்தார்.
நீங்கள் எப்போது பாட ஆரம்பித்தீர்கள்?
நான்கு வயதில் சங்கீதம் கற்க ஆரம்பித்து கர்நாட்டிக்கும் சில வருடங்களின் பின்பு இந்துஸ்தானி இசையுயையும் கடந்த பத்து வருடமாக கற்றுக் கொண்டு வருகிறேன்.
உங்களுடைய இந்த வளர்ச்சிக்கு ஊக்கம் தந்தவர்கள் யார்?
எனது குடும்பத்தில் அம்மாவும் அப்பாவும் நன்றாகப் பாடுவார்கள் எனது அக்கா பாட்டு கற்றுக் கொள்ளும் போது நானும் சேர்ந்து பாடுவேன் அப்படிப் பாடிப் பாடித் தான் நான் எனது இந்தப் பாட்டுப் பயணத்தை ஆரம்பித்தேன். அவர்கள் தான் எனக்கு முதல் குருவாயிருக்கிறார்கள்.
சினிமாத் துறையில் உங்களுக்குப் பிடித்தவர்கள் அல்லது உங்களைப் பாதித்தவர்கள் யார் என்று கேட்டால் யாரைச் சொல்வீர்கள்?
எனக்குப் நிறையப்பேரைப் பிடிக்கும் சித்திரா அம்மா மாதிரிப் பாடவேண்டும் அவர் மாதிரி சிம்பிளா இருக்க வேணும் ஏ.ஆர் ரகுமான்சார் மாதிரி பெரிசா சாதிக்க வேணும் சித்திரா அம்மா மாதிரி கனதியாக பாடவேண்டும் என்று நினைப்பன். யாரையும் பின் பற்றாமல் பிரகதிக்கு என்று ஒரு ஸ்ரையில் அதை நிலை நாட்டணும்.
உங்களின் எதிர் காலம் எப்படி இருக்க வேணும் என்று நினைக்கிறீர்கள்?
எனக்கு கர்நாட்டிக்கிலும் இந்துஸ்தானியிலும் சினிமாவிலும் நிறைய செய்ய வேணும் என்று நினைத்திருக்கிறன். இதைத்தான் செய்வேன் என்று தீர்மானமாக முடிவு செய்யவில்லை அப்படி முடிவு செய்யும் வயதுமில்லை நான் அமெரிக்காவில் வாழுறதால மேலத்தேய இசையையும் கற்று அதிலையும் தேர்ச்சிபெற விரும்புறன்.
முதல் முறையாக அவுஸ்திரேலியா வந்திருக்கிறீர்கள். இங்கு வந்து பார்த்த போது எப்படி இருக்கிறது?
எனக்கு சின்ன வயசில் இருந்தே அவுஸ்திரேலியா வரவேணும் என்று சரியான ஆசை. அது நிறைவேறியிருக்கிறது. மிகவும் அழகான நாடு இங்கு இருப்பவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். இங்கு வந்து பாடுவேன் என்று கனவிலும் நினைக்கவிலை. இப்படி இளம் தென்றல் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது நாமளும் போய் பாடப் போகிறோம் என்றதும் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது இருக்கிறது. இந்த அழகான அவுஸ்திரேலியாவில் உள்ளவர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.
உங்களை மாதிரி இந்த நிலைக்கு உயர நினைப்பவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
நிறைய கற்றுக் கொள்ளுங்கள். என்ன வேணும் என்று விரும்புகிறீர்களோ அதை அடையக் கனவு காணுங்க. அந்தக் கனவு நிறைவாகும் வரை கஸ்ரப்பட்டு உழைக்கவேணும். கஸ்ரப்பட்டு உழைத்தால் அது கட்டாயம் கிடைக்கும். பாட்டு பாட விரும்புங்க விருப்பத்தோடு பாடுங்க வெற்றி அடையலாம்.
இப்போது இரண்டு பாடல்கள் பாடி முடித்து வந்திருக்கிறீர்கள் எப்படி வரவேற்புக் கொடுத்தார்கள் மெல்பேர்ண் ரசிகர்கள்?
சரியான exciting காக இருந்தது. மேடையில் ஏறியதும் என்னைத் தெரிந்து பலர் பேரைச் சொல்லி அழைத்தார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
பின்னால் இருந்து கையை தட்டி ஆரவாரம் செய்தார்கள். ரசிகர்கள் தங்களின் ரசிப்பை வெளிக்காட்டினால் தான் எங்களால் சந்தோசமாகப் பாடமுடியும். அதை இந்த மேடையில் அனுபவித்தேன்.
சினிமாவில் சந்தர்ப்பம் இன்னும் கிடைக்கவில்லையா அது ஏன்..?
வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தில் இசை அமைப்பாளர் அனிருத் அவர்களின் இசையில் பாடியிருக்கிறேன். அது இன்னும் ஓரிரு மாதத்தில் வெளிவருகிறது பார்த்து மகிழுங்கள்.
ஆவூரான் | ஆஸ்திரேலியாவிலிருந்து