மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணியாளர்களுக்கு காத்திருக்கும் சவால்கள்மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணியாளர்களுக்கு காத்திருக்கும் சவால்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணியாளர்களுக்கான கேள்வி அதிகரித்து வருவதனால்  இலங்கை மற்றும் இந்திய வீட்டுப்பணியாளர்களை பெற்றுக்கொள்வது தொடர்பில்  இன் நாடுகள் அதிக கவனத்தை செலுத்தத் தொடங்கியுள்ளன.

இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடனான தொழில் பிணக்குகள், எத்தியோப்பியாவிலிருந்து பணியாளர்களை பெற்றுக்கொள்வதை இடைநிறுத்தியுள்ளமை போன்றவையே இலங்கை மற்றும் இந்திய பணியாளர்களை இனிவரும் காலங்களில் பெற்றுக்கொள்ள தீர்மானித்திருப்பதற்கான பிரதான காரணிகளாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனால் இடை முகவர்களின் நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் எனவும் பெண்களை ஏமாற்றுவதற்கான பல சம்பவங்கள் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் கடந்த காலங்களில் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணியாளர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் அதிகரித்திருந்த நிலையிலும் இலங்கை அரசிடமிருந்து காத்திரமான கண்டனங்கள் வெளிவராமையும் மதிய கிழக்கு நாடுகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

the-little-country-maid-by-camille-pissarro-coloring-page

வீட்டுப் பணியாளர்களுக்கான சம்பளத்தை ஒழுங்காக வழங்காமை, வேலை வழங்குநர்கள் அவர்களை மோசமான முறையில் நடத்துதல், போதிய உணவு வழங்காமை, தினமும் அதிக நேரம் வேலை செய்யவேண்டிய  நிலைமை மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் போன்ற காரணங்கலால் இலங்கையில் இருந்து செல்லும் வீட்டுப்பணியாளர்கள் பெருமளவு பாதிப்படைகின்றார்கள்.

மேற்கூறிய காரணங்களால் இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சவுதி அரேபியாவுக்கு வீட்டுப்பணியாளர்களை அனுப்புவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன. தமது மக்களின் பாதுக்காப்பில் இவ்விரு நாடுகளும் கவனமெடுப்பது பாராட்டத்தக்கது.

இச் சிக்கலை தீர்க்கும் பொருட்டு அவ்விரு நாடுகளுடனும் நடத்தப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளதுடன், உயர் சம்பளம் போன்ற சலுகைகளை மத்திய கிழக்கு நாடுகள் வழங்க முன்வந்த போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை எனத் தெரியவருகின்றது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் வெளிநாட்டு வீட்டுபணியாளர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் விநியோகத்தில் 30% குறைபாடு நிலவுவதாக ஜெத்தா வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனத்தின் வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கமர்த்தல் தொடர்பான குழுவின் உறுப்பினரான முத்லாக் அல் ஹாஸ்மி தெரிவித்துள்ளார்.

இதேநேரம் மத்திய கிழக்கு நாடுகளின் தனவந்தர்கள் தமது பணவசதியை பயன்படுத்தி வறுமையில் உள்ள இளம்பெண்களிடம் துஷ்பிரயோகம் செய்வதையும் அண்மைக்கால செய்திகள் கூறுகின்றன. மேலும் கேரளாவில் தமது விடுமுறையை கழிப்பதற்காக வந்து திருமணம் என்ற பெயரில் பல இளம் பெண்களை ஏமாற்றுவது விடுமுறை காலம் முடிந்ததும் அவர்களை கைவிடுவதும் இன்றும் தொடர்கின்றது.

 

– தேன்மொழி –

ஆசிரியர்