பெருநகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும், ‘காபி டே’, ‘நைட் கிளப்’, அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் மற்றும் கல்லூரிகள் என்று எங்கே பார்த்தாலும் ஜீன்ஸ்தான். மகளோடு போட்டி போட்டுக்கொண்டு அவர்களுடைய அம்மாக்களும் ‘ஸ்ட்ரைட் கட்’ மற்றும் ‘பேட்ஜ் ஒர்க்’ ஜீன்ஸ் அணிந்து வலம் வருகின்றனர். ஜீன்ஸ் என்ற உடையால் பெருநகரங்கள் இளமை கூடி பூத்துக் குலுங்குகின்றன என்றால் அது மிகையாகாது.
நீலக்கலரில் ஜீன்ஸ் போட்டிருந்த பெண்களை பார்த்து பலர், ‘அடங்காப்பிடாரி’ என்று நினைத்த காலம் எல்லாம் மலையேறிப் போச்சு. இன்றைக்கு ஜீன்ஸ் போட்ட பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்ற நினைப்பே அதிகமாகி வருகிறது.
அணிந்து கொள்ள சௌகரியம், எப்போதும் பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஜீன்ஸ் போன்ற சிறந்த உடை வேறு எதுவுமில்லை என்று கூறுகின்றனர் ‘ஜீன்ஸ் கன்னியர்!’
ஒரே ஒரு ஜீன்ஸ் இருந்தாலும் போதும், டி-சர்ட், ஷார்ட் டாப்ஸ், சல்வாருக்கு போடும் குர்தா என்று எதையும் மேலாடையாக போட்டுக் கொண்டு கலக்கலாம். அதே மாதிரி, வெளியூர் சென்றாலும் ஓரிரு ஜீன்ஸ் எடுத்து வைத்தால் போதும் சுமையும் குறைவு, வசதியும் அதிகம்.
ஜீன்ஸ் அணிவதற்கு பதிலாக சல்வார் மற்றும் சுடிதார் அணிந்தால், துப்பட்டாவை பாதுகாப்பாக பிடித்துக் கொள்ளவே நேரம் போதாது. இதற்கிடையில் கையில் வேறு ஏதாவது பொருட்கள் இருந்தாலோ அல்லது சாலையில் நடந்து சென்றாலோ இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் இயல்பு நிலை மாறிவிடும். ஆனால் ஜீன்ஸ் போட்டால் இப்படி எந்தக் கவலையும் இல்லை. இதனால் மற்ற உடைகளைவிட ஜீன்ஸ் அணிந்தால் தன்னம்பிக்கை அதிகமாகும்.
35 வயதைக் கடந்த பெண்கள்கூட ‘ஸ்கின்னி ஜீன்ஸ்’-ஐ விரும்பி அணிகின்றனர். குறிப்பாக ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு இந்த ‘ஸ்கின்னி ஜீன்ஸ்’ மிகப் பொருத்தமாக இருக்கிறது.