எனக்கு வயது 26. நான் ஆறு மாதங்கள் கர்ப்பமாய் இருக்கிறேன். சமீபமாய் எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. மேலும், கால்களில் வீக்கமும் உள்ளது… இதற்கு என்ன தீர்வு?
ஆறாவது மாதத்தில் தாயின் வயிற்றுப்பகுதி மேடிட்டு வயிறு முன்புறமாய் பெருத்திருக்கும் என்பதால் முதுகுத்தண்டுவடம் இயல்பாக வளைய நேரிடும். இதனால் முதுகுவலி ஏற்படுவது இயல்பே. முதுகுவலி உள்ளவர்கள் சரியான போஸ்சரில் அமர வேண்டியது அவசியம். முதுகுத்தண்டு ஏடாகூடமாய் வளையும்போது வலி அதிகமாக வாய்ப்புகள் அதிகம்.
சாய்மானம் இல்லாத மர நாற்காலிகளில் நேராக அமரலாம். ‘எர்கொனாமிக்ஸ்’ நாற்காலிகள் சந்தையில் கிடைக்கின்றன. அதில் அமர்வதும் நல்லதே. உறங்கும்போது இடது புறமாக உடலை சாய்த்து கால்களின் இடையே சற்றே மெலிதான தலையணை வைத்து உறங்குவது நல்லது. கர்ப்பிணிகளுக்கான சிறப்புப் படுக்கைகள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றையும் பயன்படுத்தலாம்.
கர்ப்பகாலத்தில் குழந்தையின் உடலுக்கு அதிக இரத்த ஓட்டம் தேவை என்பதால் தாயின் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் இரத்த நாளங்கள் விரிவடைந்து பெரிதாகின்றன. இப்படி பெரிதாவதால் கால் பகுதிகளில் நரம்புகள் வெளியே தெரிகின்றன. மேலும், புவியீர்ப்பு விசையை எதிர்த்து இரத்தம் உடலின் மேற்புறம் நோக்கிச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும்போது ‘வெரிகோஸ்வெய்ன்’ என்ற பிரச்சினை ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் கால்களுக்கான பிரத்தியேக ஸ்டொக்கிங்ஸ் அணியலாம். கால்களை எப்போதும் தொங்க விட்ட நிலையில் வைத்திருக்காமல், சற்று உயரமாக வைக்கலாம். சிறிதுநேரம் சுவரில் கால்களை வைத்து ஓய்வெடுக்கலாம். கால்களுக்கு வெதுவெதுப்பான நீரால் ஒத்தடம் கொடுக்கலாம். தாங்க முடியாத அளவுக்கு முதுகுவலியும் கால் வீக்கமும் இருந்தால் அருகில் உள்ள மருத்துவரிடம் தாமதிக்காமல் செல்லுங்கள். சுய வைத்தியம் செய்ய வேண்டாம்.
நன்றி | வீரகேசரி