சோப்பும் தண்ணீரும்
தினமும் இருவேளைகள் மிதமான சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு முகத்தை நன்கு கழுவுவதுதான் பருக்களை வரவிடாமல் தடுக்கும். ஏற்கனவே வந்துவிட்ட பருக்களை விரட்ட இது உதவாது. ஆனால், முகத்தின் சருமம் சுத்தமாக இருந்தால் புதிதாக பருக்கள் வராமல் தடுக்கப்படும். ‘முகத்தைக் கழுவுகிறேன்’ என்கிற பெயரில் அழுத்தித் தேய்க்கக்கூடாது. அது பருக்களையும் அதிகப்படுத்தும். சருமத்துக்கும் நல்லதல்ல.
தவிர்க்கும் முறை
பருக்கள் இருப்பவர்கள் காலையில் தினம் ௨-3 முறைகள் மிக மிதமான கிளென்சர் கொண்டு முகம் கழுவ வேண்டும். உடற்பயிற்சி செய்கிற வழக்கமுள்ளவர்கள் அதை முடித்ததும் முகம் கழுவ வேண்டும்.
சிலர் பருக்கள் இருந்தால் ஆஸ்ட்ரின்ஜென்ட் உபயோகிப்பார்கள். சருமம் மிகவும் எண்ணெய் பசையுடன் இருப்பவர்கள்தான் ஆஸ்ட்ரின்ஜென்ட் உபயோகிக்க வேண்டும்.
பரு இருப்பவர்கள் சருமத்தை மட்டுமின்றி, கூந்தலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் எண்ணெய் வழிகிற கூந்தல் என்றால் ஒருநாள் விட்டு ஒருநாள் தலையை அலச வேண்டும்.
சருமத்துக்கான எந்த அழகு சாதனத்தை வாங்கினாலும் அதில் noncomedogenic எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அத்தகைய பொருட்கள்தான் சருமத் துவாரங்களை அடைக்காது. சருமத் துவாரங்கள் அடைபட்டால் அது பருக்களாக வெளிக்கிளம்பும் வாய்ப்புகள் அதிகம்.
தினம் இருவேளைகள் மிதமான கிளென்சர் உபயோகித்து முகம் கழுவ வேண்டும்.
கிளென்சர் உள்ளிட்ட எந்த அழகு சாதனமும் சொரசொரப்புத் தன்மை கொண்டதாகவோ, ஸ்க்ரப்பிங் துகள்கள் கொண்டதாகவோ இருக்கக்கூடாது. அவை பருக்களை அதிகப்படுத்தும்.
பருக்களைக் கிள்ளவோ, அழுத்தி எடுக்கவோ கூடாது. இது பருக்களை அதிகப்படுத்துவதுடன், தழும்புகளையும் உருவாக்கும்.
பருக்கள் இருப்பவர்கள் அதிக மசாஜ் தேவைப்படுகிற ஃபேஷியல்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பருக்கள் உள்ளவர்களுக்கான பிரத்யேக ஃபேஷியல்கள் பற்றிக் கேட்டறிந்து அவற்றைச் செய்து கொள்வதே சிறந்தது.
பருக்களுக்கான கிரீம்களை தவிர்க்க வேண்டியவர்கள்
கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் ஊட்டுபவர்கள்
மருந்து அலர்ஜி உள்ளவர்கள்,
வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு இருப்பவர்கள்.
பிற சிகிச்சைகள்
கெமிக்கல் அடங்கிய கிரீம் மற்றும் லோஷன்களை உபயோகிக்கத் தயங்குபவர்கள் டீ ட்ரீ ஆயில் அடங்கிய கிரீம்கள், ஆல்பா ஹைட்ராக்சி அடங்கிய கிரீம்கள் மற்றும் துத்தநாக (ஸிங்க்) சப்ளிமென்ட்டுகளை உபயோகிக்கலாம்.
பார்லர் சிகிச்சை
ஹைபரீக்வன்சி என்கிற சிகிச்சை பருக்களை விரட்டும் முதல் கட்டத் தீர்வாக இருக்கும்.
லேசர் மற்றும் லைட்
தெரபியின் மூலம் சருமத்தை பாதிக்கச் செய்யாமல் பருக்களை விரட்டவும், அதனால் உண்டாகும் வீக்கத்தையும் குணப்படுத்த முடியும். இவற்றை அந்த சிகிச்சைகளில் தேர்ந்த நிபுணர்களிடம் மட்டுமே செய்து கொள்ள வேண்டும்.
கெமிக்கல் பீல் மற்றும் டெர்மாப்ரேஷன் சிகிச்சைகளும் பலனளிக்கும். பருக்களுக்கான பிற சிகிச்சைகளுடன் இவற்றையும் சேர்த்துச் செய்கிற போது, பருக்கள் விட்டுச் சென்ற தழும்புகளையும் போக்க முடியும். பொடுகு இருந்தால் பருக்கள் வரும்! பொடுகுப் பிரச்னை இருப்பவர்களுக்கு மற்றவர்களைவிடவும் பருக்களின் தீவிரம் அதிகமாக இருக்கும். குறிப்பாக நெற்றிப் பகுதியில் பருக்கள் வரும். எனவே கூந்தலை சுத்தமாக, பொடுகின்றி வைத்துக் கொள்வதன் மூலம் பருக்களிடம் இருந்து தப்பிக்கலாம்.
முட்டை மற்றும் முட்டைகோஸில் உள்ள வைட்டமின் பி, பொடுகைக் கட்டுப்படுத்தும். பொடுகுதான் பருக்களுக்கான காரணம் என்பதைக் கண்டுபிடித்துவிட்டால், Anti Dandruff ஷாம்பு உபயோகித்து பொடுகின்றி கூந்தலைப் பராமரிக்க வேண்டும். பரு என்பது முகத்தில் மட்டும்தான் வரும் என்றில்லை. தோள்பட்டை, முதுகுப் பகுதிகளிலும் வரலாம். அதனால், பொடுகு இருப்பவர்கள் கூந்தலை விரித்து சருமத்தில் படும்படி விடாமல் கட்டிக் கொள்ள வேண்டும். தலைக்கு உபயோகிக்கிற சீப்பு, ஹேர் பேண்ட், தலையணை உறை போன்றவற்றை இரண்டு நாட்களுக்கொரு முறை சுத்தப்படுத்தி உபயோகிக்க வேண்டும்.
வீட்டு சிகிச்சைகள்
பொடுகினால் வரும் பருக்களை விரட்டுவதில் டீ ட்ரீ ஆயிலுக்கு முதலிடம் உண்டு. நீங்கள் உபயோகிக்கிற ஷாம்புவில் சில துளிகள் டீ ட்ரீ ஆயில் கலந்து குளித்தால் அதில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் தன்மையானது பொடுகைக் கட்டுப்படுத்தி, பருக்கள் வராமலும் காக்கும்.
முதல் நாள் இரவே ஊற வைத்த வெந்தயத்தை மறுநாள் அரைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறி, மிதமான ஷாம்புவால் அலசினால் பொடுகும், அதனால் வரும் பருக்களும் கட்டுப்படும்.
ஐஸ் கட்டிகளை ஒரு சுத்தமான துணியில் கட்டி, பருக்களின் மேல் ஒற்றி ஒற்றி எடுக்கலாம். அது பருக்களால் சருமத்தில் ஏற்பட்ட சிவப்பை மாற்றி, அந்த இடத்தில் ரத்த ஓட்டத்துக்கும் உதவும்.
ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் டீ ட்ரீ ஆயில் கலந்து பருக்களின் மேல் தடவி, 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரில் அலசலாம்.
ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை 4 டீஸ்பூன் தண்ணீருடன் கலந்து, அதில் பஞ்சைத் தொட்டு, முகம் முழுக்க ஒற்றி எடுக்கவும். இது பருக்களைச் சுற்றியுள்ள பாக்டீரியா தொற்றினை உடனடியாக சுத்தம் செய்யும்.
முல்தானி மட்டி 2 டீஸ்பூன், வேப்பிலை பவுடர் அரை டீஸ்பூன், பன்னீர் சிறிது இவை மூன்றையும் குழைத்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் காய்ந்ததும், குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். வாரம் 2 முறைகள் இப்படிச் செய்யலாம். ஜாதிக்காயை அரைத்து, பருக்களின் மேல் மட்டும் படும்படி போடலாம்.
4 டீஸ்பூன் ரத்த சந்தனப் பொடியுடன், சீரகத்தை வேக வைத்த தண்ணீர் 3 டீஸ்பூன், 1 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் போலச் செய்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், பருக்களால் உண்டான தழும்புகள் மறையும்.
ஆதாரம்: குங்குமம் இதழ்