.
இலக்கிய உலகில் எழுத்தாளர் முல்லை அமுதன் கதை, கவிதை ஆக்கங்கள் மூலமாக பலராலும் அறியப்பட்ட ஒருவராவார். அத்துடன் லண்டனை அடித்தளமாகக் கொண்டு ‘காற்றுவெளி’ என்னும் சஞ்சிகையை பல வருடங்களாக வெளியிட்டு வருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது..
.
முற்றத்து நாவல் மரத்தடியில் தன் பழைய ரலி சைக்கிளை சாத்தியபடி உள்ளே யாராவது வருகிறார்களா என்று பார்த்தபடி குரல் கொடுக்கிறார்…
‘தம்பி’
குரலில் குழையும் கருணை, அன்பு, வாஞ்சை…
வெயில் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுந்து கொண்டிருந்தது.
அப்பா உள்ளேயிருந்து வந்தபடி,
‘வாரும்.. வாரும்..’ அழைத்தார்.
கையைக் குலுக்கியபடி உள்ளே வந்து உடகார்ந்தார் ஹாசிம் நானா.
அம்மா புன்னகைத்தபடி தேநீருடன் வந்தாள்.
‘நல்லாயிருக்கியாம்மா’
அம்மா ‘ஓம்’ என்று தலையாட்டியபடி உள்ளே போனாள்.
ஹாசின் நானாவுக்கு சீனி குறைத்து அம்மா போட்ட தேநீரைச் சுவைத்தபடி ஊர்க்கதைகள் பேசியபடியே இருந்தனர். அரசியலைத் தவிர்த்தும் பேசமுடியாது. ஆனாலும் லாவகமாக இருவரும் அரசியல் விடயத்தில் நாகரிகமாகவே நடந்து கொண்டனர்.
அப்பா தமிழரசுக்கட்சியை ஆதரிப்பவர். ஹாசிம் நானாவின் அப்பாவும் அப்படியே. எனினும் காலம் தந்த அசௌகரியங்களால் ஹாசிம் நானா அரசியலை வெறுத்தார். எனினும் மனிதர்களிடையேயான அன்பையே பெரிதும் மதித்தார்.
அம்மா சுகயீனமுற்று இருந்தபோது ஒருநாள் தண்ணீரை மந்திரிச்சுக் கொடுக்க அம்மா எழுந்து கொண்டாள். அதுவும் அவர் மீதான மரியாதை பெருகக் காரணமாயிருக்கலாம்.
அம்மாவின் கைப்பட பொங்கல் பொங்கும் போது அவருக்கும் அனுப்பிவிடுவாள் அம்மா.. அவர்களின் பண்டிகைக்காலங்களில் அவர்களின் உணவுப் பதார்த்தங்களைக் கொடுத்து விடுவார். ருசியாக ஹாசிம் நானாவின் மனைவி சமைப்பார்.
ஹாசிம் நானா வந்து போகும் அளவிற்கு அவரின் மனைவி வருவதில்லை. கூச்ச சுபாவம் உள்ளவராக இருக்கலாம். ஓரிரு தடவைகளே பார்க்கமுடிந்தது. அக்காவின் திருமணத்தின் போதும் பிறகொரு நாளிலும்.
எதிர்பாராதவிதமாக ஹாசிம் நானாவின் மனைவி இறந்து போனார். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது.. அம்மா பெண்களுடன் இணைந்து கொண்டு பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள். அப்பா ஹாசிம் நானாவை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார்.
அன்றுதான் ஹாசிம் நானா உடைந்துபோய் அழுததைப் பார்க்க முடிந்தது. மனைவியை எப்படிக் காதலித்திருப்பார்..
தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்.
ஒருமாதம் கழிந்த பின்பும் அவர் வீட்டை விட்டு நகராமல் எல்லாம் இழந்தவர் போல உட்கார்ந்தவரை அப்பாதான் ‘வாரும்’ என்றபடி கைப்பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார். அவரின் பிள்ளைகளும் திருமணம் முடித்திருந்ததினால் அவரவர் வீடுகளுக்குச் சென்றிருந்தமையும் தனிமை நானாவை வாட்டியெடுத்தது.
எங்கள் வீட்டிற்கு முன்னால் வாழும் சுந்தரம் கிணற்றில் தண்ணீர் அள்ளியபடி குரலை உயர்த்தி உச்ச சத்தத்தில் பழைய பாடலைப்பாட நாம் சிரிப்போம். வாயில் விரலை வைத்து விசிலடிக்கவேண்டும் போலிருக்கும். முடிவதில்லை.
அப்பா நன்றாக விசிலடிப்பார். சாதாரனமாக விசிலடித்து பாட்டை ஹம் பண்ணினாலே அம்மா திட்டுவார். சுந்தரம் பாட்டைக் கேட்டு விசிலடிக்க ‘விசிலடிக்கதை… அந்த மனிசன் தன்னைத்தான் பகிடி பண்ணினம் என்டு நினைக்கும்’ அம்மா தடுத்து விடுவாள்.
பாடி முடிய பெரிதாக நாலு வீடு கேட்க ‘ஏவறை’ விடுவார். அக்கா சிரிக்க எனக்கும் சிரிப்பு வந்து விடும். ஹாசீம் நானாவின் மகன் முழுப்பாட்டையும் விசில் பண்ணிப் பாடுவார் என்று தெரியும். ஏனோ ஹாசிம் நானா அளவிற்கு எங்களுடன் அவர்கள் ஒட்டவில்லை.
அப்பாவும் அதிகம் அம்மாவுடன் பேசியதில்லை. அம்மாவும் அப்பாவின் குறிப்பறிந்து நடந்து கொள்பவள். ஒரு பார்வை போதும். அம்மா சூழலை புரிந்து கொண்டு நடந்து கொள்வாள். அப்பாவிற்கும் அதிகம் நண்பர்கள் இல்லை. இருக்கும் ஓரிரு நண்பர்களுள் முதன்மையானவர் ஹாசிம் நானாவாக இருந்தமை காலம் இட்ட கட்டளையோ என்றே எண்ணத் தோன்றும். கிட்டினன் என்கிற நண்பர் வரும் போதே வெத்திலைப் பாக்குத் தட்டத்தை எடுத்து வைத்து விடுவார் அப்பா.
கிட்டினன் வெத்திலையை மடித்து சுண்ணாம்பைத் தடவி சிறிதளவு பாக்கையும் சேர்த்து வாயில் போட்டு புகையிலையைப் பிய்த்தபடி சிறு சிறு துண்டாய் பிய்த்துப் பிய்த்து வாயில் போட முனையும் போது அப்பா கொடுப்புக்குள் சிரித்துக் கொள்வார். அவருக்கு அது போதும்.. அப்பா வெத்திலை போடுவதை நிறுத்து விட்டிருந்தாலும் நண்பர்களுக்காக வாங்கி வைத்திருப்பார்.
அப்பா யாருக்கும் தனது சைக்கிளை இரவல் தரமாட்டார். அந்தக் காலத்து சைக்கிள் ஒடும் கனவை நனவாக்கும் விதத்தில் வேலை செய்த இடத்தில் கடன் வாங்கி, வாங்கிய சைக்கிளை வேலை தவிர வேறெங்கும் அதிகமாக பாவிக்கமாட்டார். துடைத்து விறாந்தையில் பாதுகாப்பாக நிற்க வைத்துவிடுவார். சிறு கீறல் கூட இருக்காது. கோயிலுக்கு நடந்தே போவார். சந்தைக்கும் அப்படித்தான்.
சைக்கிள் ஓடவேண்டுமென்கிற ஆசை இருந்தும் அப்பாவிடம் கேட்கப் பயம்..
நண்பனிடம் இரவல் வாங்கி ஓடப் பழகும்போது புஷ்பாக்காவின் வேலிக்குள் விழுந்து காயப்பட்ட அனுபவம் இன்றும் நினைவிருக்கிறது.. பிறகு சைக்கிள் கடை சாமி அண்ணரிடம் வாடகைக்கு எடுத்தே பழக வேண்டியதாயிற்று. சாமி அண்ணரும் அப்பாவிடம் போட்டுக் கொடுத்து விட்டார். அப்பா முதலில் லேடீஸ் சைக்கிள் ஒன்றை மலிவான விலையில் மாமா ஒருவரிடம் சொல்லி வைத்து வாங்கித் தந்தார். மாமா நீர்கொழும்பில் சுருட்டுக்கடை வைத்திருந்தார். சீட்டாடி, குடித்துவிட்டு காசில்லாதபோது இருப்பதை விற்று வாழ்க்கை நடத்தும் அவ்வூர் மக்களிடம் மலிவாக வாங்கிய சைக்கிளை தந்திருந்தார்.
லேடீஸ் சைக்கிள் என்றதும் முதலில் தயக்கம் தான். பிறகு மறுக்க முடியாது போயிற்று. இதுவும் இல்லாமல் போய்விடும் என்ற பயத்தில் வாங்கிக் கொண்டேன். நல்லா ஓடப் பழகியதும் பி எஸ் ஏ சைக்கிள் ஒன்றை வாங்கித் தந்தார். பழையது தான் எனினும் பரவாயில்லை போலிருந்தது.
அக்காவின் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துப் போவார் அப்பா. பிள்ளைகளும் ஒருகட்டத்தில் கூச்சமாக இருக்குது எண்டு அப்பாவை வரவேண்டாம் என்று மறுத்து விட அப்பாவும் கூனிப் போனார்.
‘அடுத்த தலைமுறை இப்படித்தான் பெரியவர்களை மதிக்காமல் போகப்போகுதுகள்’ பிறகு பழகி விட்டது.. பிள்ளைகள் எண்டால் இப்படித்தான். நீங்களும் சாரத்தோட போறியள்.. அதுகளுக்குப் பிடிக்கேல்லப் போல’
அம்மா அப்பாவை சமாதானப்படுத்தியிருந்தாள்.
ஒரு நாள் அவசரத் தேவைக்காக இரவல் கேட்ட கந்தசாமி அண்ணருக்கு மனமிரங்கி இரவல் கொடுக்கப் போக தினசரி அதுவே அவரும் இரவல் வாங்கும் மனிதராக மாறி விட்டிருந்தார். மறுக்க மனது வராத சூழலில் கந்தசாமி அண்ணரையும் பகைத்துக் கொள்ள முடியாதவராய் அப்பா இருந்தார் என்றே சொல்ல வேண்டும். ஒருமுறை இடப்பெயர்வு வந்த போது பாதுகாக்கவென வைத்த உறவுக்காரரின் விட்டிலிருந்து அப்பாவின் சைக்கிளும் களவு போயிருந்தது.
இப்போது கந்தசாமி அண்ணர் புதுச் சைக்கிள் வாங்கி விட்டார். எனினும் அப்பாவும் புதுசாக ஒரு சைக்கிள் வாங்காமலும், இரவல் வாங்காமலும் இருந்தார். கந்தசாமி அண்ணரும் இரவல் தரும் மனநிலையிலும் இல்லை. கேட்டதும் இல்லை.
அப்பா மௌனமாக இருந்தார்.
‘நடப்பது உடம்புக்கு நல்லது தான்’ தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
பெரியவர்கள் கதைத்துக் கொண்டிருக்கையில் சிறியவர்கள் வந்திருந்து கதைப்பதையோ, கதை கேட்பதையோ அப்பாவும் விருப்பியதில்லை. இது பெரியப்பா வீட்டில் இருந்த போதும் எழுதப்படாத சட்டமாகவே இருந்தது.
அப்பா சும்மா நிமிர்ந்து பார்த்தாலே நாம் எழுந்து உள்ளே போய் விடுவோம். அம்மாவும் அதிகமாக வந்து அவர்களுக்கு முன்னால் குந்தியிருந்து கதைப்பதில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்து விடுவாள்.
ஹாசிம் நானா வெத்திலை போடும் பழக்கம் இல்லை. அம்மா தருகின்ற தேநீரே அவருக்குப் போதும். அப்பா அவருக்கு நண்பரேயாயினும் அம்மா தனக்கு இன்னொரு தாய் என்று சொல்லும் போதேல்லாம் அப்பா நிமிர்ந்து கொள்வார். அம்மாவை நினைத்துப் பெருமிதம் கொள்வார்.
தட்டுப்பாடான காலங்களில் சக்கரைக்கட்டி ஒன்றுடன் தேநீரைக் கொடுக்க நேர்கையிலும் மகிழ்வுடன் வாங்கிக் குடிப்பார். மதங்கள் வேறெனினும் மனங்களில் ஒருமித்த நட்பாய் இருந்தனர்.
ஹாஸிம் நானா நன்றாகத் தைப்பார். பிள்ளைகளும் யாழ்ப்பாணத்தில் புடவைக் கடையும், தையல்கடையும் வைத்திருந்தனர். புதுவருஷத்திற்கு சேர்ட்டும், ஜீன்ஸ் ஒன்றுமாக தன் கையாலேயே தைத்துத் தந்தார். கன காலம் டிறங்குப்பெட்டியில் வைத்து, பூச்சியுருண்டையும் போட்டு பாதுகாத்து வைத்திருந்தேன்.
ஒரு தடவை அந்த உடுப்பைப் போட்டுக்கொண்டு ஞானம்ஸ் ஸ்ரூடியோவில் போட்டோ எடுத்ததும் ஞாபகம். வெளிநாடு போக முடிவெடுத்த போது கூட பாஸ்போட் சைஸ் படம் எடுத்ததும் உண்டு. அந்த நாட்களில் இரட்டை வேடப் படங்கள் பார்த்த அனுபவத்தில் எலைட் ஸ்ரூடியோவில் இரட்டை வேடமாக ஒரு போட்டோ எடுத்திருந்தேன். ஆசையாய் வைத்திருக்க சிங்கப்பூர் பெரியம்மா வந்த நேரம் அந்த புகைபடத்தை அவரிடம் கொடுத்து விட்டார். கண்ணாடிக்கு முன்னால் நின்று கமல் மாதிரி அபிநயம் போட்டு பார்த்து மகிழ்வதுண்டு.
அக்கா பார்த்துச் சிரிக்கும்.
ஹசிம் நானா தையலில் கெட்டிக்காரர். அவர் தைத்து தந்த உடைகள் அழகாய் இருப்பது போலிருந்தது.
ஹாசிம் நானாவிடமிருந்து ஒருவித வாசம் வரும். சந்தனம் கலந்த சவர்க்காரம் போடுக் குளிகிறாரோ? பெண்களைப் போல முழுகிவிட்டு சாம்பிராணிப்புகை பிடிக்கிறாரோ? அவர் அருகில் சென்று அவரிடமிருந்து வரும் வாசத்தை அப்படியே சுவாசத்திற்குள் உள்வாங்கி கணப்பொழுதாவது மூச்சை விடாமல் வைத்திருக்க வேண்டும் போலிருக்கும். ஓரிரு தடவை அப்படியே செய்தும் பார்த்தேன். அவரிடம் கேட்கும் தைரியம் இல்லை. ஆனால் அவரின் மனைவி இறந்தபின் அந்த மணம் ஏனோ இல்லை.. எல்லாவற்றையும் இழந்தது போலவே இருந்தது. எவ்வளவு காதலித்திருப்பார் அவரின் மனைவியை…? பழைய கலகலப்பும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
வெள்ளையுடன் கூடிய கோடு போட்ட சாரத்துடன், வெள்ளைச்சேர்ட் அணிவதே வழக்கம். கழுத்துக்கும், சேர்ட் கொலருக்குமிடையில் ஒரு லேஞ்சியை மடித்து நீளமாக செருகியிருப்பார். பளிச்சென்று தெரிவார். எல்லாம் போயிருந்தது. அப்பா அவரிடமிருந்த பழைய கலகலப்பு போனதில் கவலையுமடைந்தார்.
ஒரு கிழமை வராமல் இருந்தால் ஏதோ போல் வீடு இருக்கும். விருந்தினர்களை வரவேற்பதில் அப்பா பின் நிற்பதில்லை. சில விருந்தினர்கள் வருவதால் வீட்டில் அசௌகரியங்கள் அதிகமாகுமெனில் அவர்கள் வராமல் இருப்பதே மேல் என நினைக்கத் தோன்றும். ஹாசிம் நானா ஒரு தடவையாவது வந்து போனால் அப்பாவும் கலகலப்பாகி விடுவார்.
பிலாமரத்தில் காகம் கொந்தின பிலாப்பழத்தை கொக்கத்தடியால் அறுத்து விழுத்துவார். பத்திரமாக கீழே விழுந்து உடைந்து விடாதபடி காவோலையையும் நிலத்தில் போட்டு வைத்திருப்பார். தண்ணீர் ஊற்றிய பலாமரத்தின் வேர்களைச் சுற்றி பாத்திகட்டி, எப்போதும் ஈரமாய் இருக்கும்.. காலில் படும்போது சதக் சதகென்றிருக்கும். மரத்தில் கைக்கெட்டிய உயரத்தில் சிறிதாய் இரண்டு இலைகளுடன் கையால் இடுங்கி விடும்படி கை துறுதுறுக்கும்.
யாரும் காணாத போது பிடுங்கிவிட்டு அப்பாவிடம் ஏச்சு வாங்கியது ஞாபகம் வந்தது. பழத்தை வெட்டமுன்னமே வளவெல்லாம் மணக்கும். ஹாசிம் நானாவிற்கும் கொடுத்து விடச் சொல்லுவார் அப்பா. அப்பாவின் வயது தானிருக்கும். ஒன்றிரண்டு கூடலாம் அல்லது குறையலாம்.
பழைய கம்பீரம் மாமாவிடம் இல்லை தான். ஆனால் அப்பாவிடம் கதைக்கையில் கம்பீரம் வந்து விடுவது போல காணப்பட்டதாகவே உணர்ந்தேன்.
‘பாவம் மாமா..’ எல்லோரையும் போலவே ஹாசிம் நானா என்றே நாமும் சொல்வோம். நேரில் ‘மாமா’ என்றே அழைப்போம்.
கிணற்றில் தண்ணீர் அள்ளியபோது வாளிக்குள் தவளையும் சேர்ந்து வந்தது. நன்றாக குளித்தது மாதிரி மதாளிப்பாய் இருந்தது. மீளவும் கிணற்றுள் தண்ணீருடன் இறக்கி விட்டு, தண்ணீரை தெளியப்பண்ணி வாளிக்குள் தண்ணீரைக் கோலினேன். கிணற்றுள் நாலைந்து தவளைகள் வாழ்ந்து வருவதை நாம் அறிவோம். குடிக்கிற தண்ணீர் அள்ளும் வாளிக்குள் தண்ணீரை நிரப்ப வேண்டும். அவ்வப்போது அம்மாவிற்குத் தேங்காய் துருவிக் கொடுக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அம்மா புறுபுறுப்பாள்.
ஹாசிம் நானா சாரத்தை இறுக்கமாக்கி இடுப்புக்குச் சௌகரியமாக நாலைந்து மடிப்பாய் சுருட்டி விட்டால் எளிதில் கழன்று விழாது.. நானும் சில நாட்கள் அப்படிக் கட்டிப் பார்த்ததுண்டு. பின் அது சரிவராது என்று நினைத்து மீண்டும் சாரத்தை இறுக்கி இடுப்புடன் ஒரு முடிச்சு போட்டால் பயமின்றி இருக்கலாம். தேவைப்படும் போது சண்டிக்கட்டு கட்டலாம். அப்பா சாதாரனமாகக் கட்டுவார்.
ஒரு தடவை அம்மா கொடுத்த கச்சானை இடுப்பில் கட்டியிருந்த சாரத்தில் நுனியின் சரை போலாக்கிய பகுதியில் போட்டுக் கொண்டு ‘பிறகு சாப்பிடலாம்’ என்று நகர்ந்தார். அப்பாவைப் பார்த்து அம்மா குறும்பாகச் சிரித்தாள்… பிறகு மறந்துபோய் சாரத்தை உதறிக் கட்டப்போய் கச்சானும் கொட்ட அவருக்கே வெட்கமாகி விடும். அம்மா ஜன்னலுக்கால் கண்டு விட்டாள். அப்பாவும் தனது கள்ளக்கண்ணால் கண்டு விடுவார்.
”உவள் பாத்துக்கொண்டிருக்கிறாள்”
“அப்பா மாடு கத்துது” எண்டு பின் வளவுக்குள்ள போக ஹாசிம் நானா கேட்டார்,
‘மேனே என்ன செய்ய பிளான் பண்ணியிருக்கிறாய்?’
அவருக்குச் சொல்ல பதில் வரவில்லை.
‘படிக்கப்போறீரோ அல்லது உழைக்கப் போறீரோ?’
‘தெரியேல்லா மாமா’ இது நான்.
‘உங்கப்பாவும் பாவம்.. உழைச்சுக் களைச்சுப் போனார்.. நீங்கள் உழைச்சால் தான் அவருக்கும் உதவியாயிருக்கும்.. உங்களை நினைச்சு அவருக்கும் கவலைதானே’ மாமா இப்படிக் கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை.
‘என்னை என்ன செய்யச்சொல்லுறீயள் மாமா’
என் குரலில் ஏற்பட்ட மாற்றத்தை அவர் கவனித்தார்.
‘படிச்ச படிப்புக்கு வேலை கிடைகிறது கஷ்டம்.. உந்த எம் பி மாரிட்ட அலையவும் ஏலாது. அவங்களும் தங்கட ஆக்களுக்குத்தான் கொடுப்பினம்.. வேணுமெண்டால்.. சவூதிக்குக் கொஞ்ச நாள் போய்.. ஒரு இரண்டு வருசம் உழைச்சுப் போட்டு வந்தால் கொஞ்சம் காசு மிஞ்சும். பிறகு ஏதாவது பார்க்கலாம்..’
‘அதுக்கும் கன காசு வேணுமே’ இடைமறித்து சொன்னேன்..
‘என்னட்டயும் கொஞ்சம் இருக்கும்.. பிறகு உழைச்சுத் தாருமன்’
மாமா சொல்லுறதிலயும் உண்மை இல்லாமல் இல்லை.. முந்தியும் இரண்டு மூண்டு இடத்தில காசு கட்டி ஏமாந்ததும் மாமாவிற்கும் தெரியும்.
அப்பாவின் செருமல் சத்தம் கேட்க கதையும் முறிந்தது.
ஒருநாள் அப்பாவிடம் அழுதபடி சொன்னது கேட்டது.
‘எனக்கு உங்களை விட்டா உதவியெண்டு யாருமில்லை’ எனக்கொண்டு நடந்தா எண்ட காரியங்களை முன்னிண்டு நடத்தி விடும்…’
அப்பா நிலை குலைந்தார்.
‘என்ன நானா.. ஏன் இப்ப அத கதைக்கிறியள்.. நாங்க இருக்குறம்.. உங்கட பிள்ளைகள் இருப்பினம். பிறகென்ன.. உதையெல்லாம் யோசிக்கிறத விடுங்கோ’
அப்பா நானாவின் கைகளை தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டு ஆசுவாசப்படுத்தினார்.
‘ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனத்தில் ஏதோ ஒரு வலி இருந்து கொண்டே இருக்கிறது. மனிதனுக்கு மனிதன் வேறுபாட்டாலும் அடிப்படையில் எங்கோ ஒரு மையப்புள்ளியில் ஒன்றாகவே இருப்பது போலவே உள்ளது.’
அவரவர் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவம், அவர்களின் வயது, வாழ்வின் மீதான நம்பிக்கைகள், நம்பிக்கையீனம் இன்னோரன்ன பல காரணங்கள் அவர்களை உள்ளுர கவலைப்படுத்தவே செய்யும். ஹாசிம் நானாவின் கவலையும் அதிலிருந்தே எழுந்திருக்க வேண்டும். அப்பாவின் கைகளுக்குள் தன்னையும் அடக்கியவர் போல குலுங்கிக் குலுங்கி அழுதார். இப்படி அழுகிறாரே என நமக்கும் கவலையாக இருந்தது. வீட்டிற்குப் போக நன்றாக இருட்டி விட்டிருந்தது.
சவூதியில் வேலைவாய்ப்புக் கிடைத்ததும் அதற்காக ஆயத்தம் செய்ததில் ஹாசிம் நானா நாலைந்து நாட்கள் வரவில்லை என்பதையும் மறந்து விட்டது.
அப்பாதான் ஞாபகமூட்டினார்.
மறுநாள் வந்தார்.
கையில் நிறையப் பலகாரங்களைக் கட்டிக் கொண்டு வந்திருந்தார்.
பேரனுக்கு சுன்னத் பெருநாள் எனவும் அதனால் அவர்களுடனேயே நிற்க வேண்டிவந்து விட்டதால் வரமுடியவில்லை எனவும் சொன்னார்.
பலகாரம் என்றதும் வாய் ஊறியது. என்னதான் நமது விழாக்களில், விருந்துகளில் நன்றாக விரும்பிச் சாப்பிட்டாலும் ஹாசிம் நானா அவ்வப்போது கொண்டுவரும் பலகாரங்கள், கந்துரிச் சோறு அவற்றின் சுவையே தனிதான்.
இப்போதும் வாய் ஊறும்.
கதையூடே அப்பா நான் பயணமாவதாகச் சொன்னார்.
‘நல்லா இரு மேனே.. நல்ல காலம் பிறக்கட்டும். கவனமாகப் போய் வா.. அல்லா காப்பாற்றுவார்’ ஆசிர்வதித்தார்.
அவரைப் பார்க்க கண்கள் பனித்திருந்தன. ஏனோ எனக்கும் அழுகையாய் வந்தது.
‘எள்ளுப்பா.. எள்ளுப்பா’
தெருவில் அடிக்கடி என்றில்லாவிட்டாலும் மாதம் ஒருக்கால் என்றாலும் கத்திக் கொண்டு போவார். யாரும் வாங்கியதாகத் தெரியவில்லை. என்றாலும் அவர் வருவார்.. போவார். அப்பாவும் ஒருநாள் ‘பாவம் மனுசி’ என்றபடி கொஞ்சம் எள்ளுப்பாவை வாங்கினார். நல்ல ருசியாக இருக்கும். மனுசி ஒரு 60 வயதிருக்கும்.. அல்லது கூடவோ தெரியவில்லை. வயதின் முதிர்ச்சி முகத்திலும், உடலிலும் தெரியும். ‘அந்த நாளில நல்ல திடகாத்திரமாய் இருந்திருக்கும். அதுதான் இந்தவயதிலும் உழைக்க முடிகிறது’ அப்பா சொல்லுவார்.
அம்மா சுடச்சுட பால் கொண்டு வந்து கொடுத்தாள்.
அம்மா தானே மாட்டிலிருந்து கறந்து காய்ச்சி அளவாக சீனிபோட்டு எவர்சில்வர் கப்பில் தருவார்.. நாவெல்லாம் இனிக்கும். அம்மா பால் கறக்கையில் மடியை நன்றாகக் கழுவி விட்டு கறப்பாள். கொஞ்சம் தண்ணீரைக் கலவுங்கோ என்றால் மறுத்து விடுவாள். ‘மடி சுரக்காது’ என்பாள். பக்கத்து வீடுகளுக்கு மருந்துத் தேவைக்கென யார் கேட்டாலும் கொடுப்பார். தயிருக்குக்கூட வந்து நிற்போருமுண்டு.
ஹாசிம் நானா சுவைத்துக் குடித்தார்.
வருடங்கள் உருண்டோடி விட்டன. காலம் தான் எவ்வளவு அவசரமாக ஓடி விடுகிறது. இழுத்து நிறுத்தி விட யாரால் முடிந்திருக்கிறது?
அங்கு இங்கு எனப் பொறுக்கியெடுத்தவற்றை அப்படியே கொண்டு போய் பாலைவனத்தில் கொட்டியது போல எங்களையும் அப்படியே இறக்கியது போல யாவரும் உணர்ந்தனர். முன் பின் தெரியாத பலர். இடம் வலம் தெரியாத ஊரில் கொட்டப்பட்டபின் அருகில் இருப்பவர் யார்? எவர்? என்ற கேள்விக்கே இடமிருக்காது.
மதம், இடம் எனக் கேட்டுவிட முடியாது. ஒரு துணை தேவைப்படும் பறவைகள் போலவே யாவரையும் நட்புடனேயே அணுக வேண்டியிருந்தது. அவர்களுடன் தான் வாழ்வேண்டும்.. வேலைசெய்யவேண்டும். இவன் கொலைகாரனாக இருக்கலாம்.. கொள்ளையடித்தவனாக இருக்கலாம். உறவுகளால் நிராகரிக்கபட்டவனாக இருக்கலாம். புதிதாக திருமணம் செய்திருக்கலாம்.. அக்காவிற்கு, தங்கைக்கு வாழ்வை அமைக்க உழைக்கவேண்டியனாகக்கூட இருக்கலாம்.
சமூகத்தின் தேவைக்காக வந்தவனாக அல்லது சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவனாக இருக்கலாம். ஏதாவது ஒரு இயக்கத்தில இருந்திருக்கலாம். இயக்கங்களால் நிராகரிக்கப்பட்டவனாய் அல்லது கொள்கைகளால் விரக்தியுற்றவனாய் யாரும் இருக்கலாம். ஆனாலும் நண்பர்களானோம். நகைச்சுவைகள், மகிழ்வான நெருக்கங்கள், விட்டுகொடுப்புக்கள், ஒருவருக்காக ஒருவர் துணை நிற்கவும், அன்புகாட்டவும் எல்லாமாகிய இணைப்பே இங்கு… கனவுப்பறவைகளே நாங்கள்… ஆட்டம், பாட்டம் சாப்பாடு, திரைப்படம்.. இப்படியே போகும் இயல்பு வாழ்க்கை…
பாலைவனத்தில் வேலையாதலால் ஓய்வும் கிடைப்பதில்லை. ஊர் பற்றிய தகவலும் கிடைக்கத் தாமதமாகி விடும். நாட்டிலும் எவ்வளவோ மாற்றங்கள், இழப்புக்கள், துயரங்கள், இடப்பெயர்வு, பட்டினி, மருந்து, உணவுத் தட்டுப்பாடு எனப் பலவாறாக மக்கள் பட்ட துன்பத்தை புதிதாய் வந்தவன் சொல்லியிருந்தான்.
இரண்டு வருட ஒப்பந்தம் தான். எனினும் ஊருக்குப் போகும் நிலையில் மனம் ஒப்பவில்லை. இங்குவர செலவான காசை சம்பாதித்து விட வேண்டுமே என்கிற மன அழுத்தம்… தனிமைதான் நிறைய நாட்களை நகர்த்தியிருக்கிற சூழலில் அடுத்த வருடம் போகலாம் என்று நாட்களாகி விட இப்போதாவது போகலாம் என முடிவெடுத்த போது நண்பர்களும் அடுத்த வருடம் போகலாமே.. என்று வற்புறுத்தியும் போவதென்று முடிவாயிற்று.
ஒரு அறையில் பன்னிரண்டு பேர் தங்கக்கூடியவாறான அறையில் என்னைப் போலவே தனிமை, ஊர் நினைவு, தங்கைக்காக, அம்மாவிற்காக, மனைவிக்காக எனப் பல கனவுகளை மையப்படுத்தியே வாழ்வைக் கழிப்பதால் ஓரளவிற்கு ஒத்துப்போகும் மனநிலயில் ஒன்றாக வாழ்கின்ற நண்பர்களைப் பிரிவதென்பதும் கஷ்டமாக இருந்தது.
எனினும் முடிவாயிற்று. கம்பனித் தலைமை அலுவலகத்திற்கு மேற்பார்வையாளர் ஊடாகச் சொல்லியும் தாமதமாகவே பயண ஒழுங்கை மேற்கொண்டனர். வழமை போல நண்பர்களும் தங்கள் குடும்பத்திற்கென பரிசுப் பொருட்களை தருவதிலும் முனைப்புக் காட்டினார்கள். முன் அனுமதி பெற்றிருந்ததினால் மூன்று மாதங்கள் விடுமுறை கிடைத்தது.
குளித்துவிட்டு வந்ததும் நண்பன் சுடச்சுட தேநீர் தந்தான். இன்று எனது சமையல் முறையாதலால் வேலையால் மற்றவர்கள் வருமுன் சமைத்து விடவேண்டும் என மும்முரம் காட்டினேன். சமையல் செய்யும் இடம் பொதுவானது. இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் என பல நாட்டவர்கள் தங்கியிருந்ததால் அவர்களும் சமைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவது கொஞ்சம் விளங்கும்.
ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் பழகி விட்டது. பொதுவான பிரச்சினைகள் நமக்கிடையே இருந்தாலும் சமாளிக்க வேண்டியதுமுண்டு. அவர்களும் நம்மைப் போலவே வந்துள்ளதால் நட்பாயும், சிலர் சிறிய புன்னகையை வீசிக் கொண்டும் அலைந்தனர். சமைப்பதற்கான இடம் கிடைத்ததும் சமையல் ஆரம்பமானது. ஒரு அறையிலிருந்து லதா மங்கேஸ்கர் பாடல் போய்க் கொண்டிருந்தது.
இங்கு வந்து சமைக்கவும் பழகும்படியாயிற்று.
அந்த நாளும் வந்தது.
‘கவனமாய்ப் போய் வா! நாட்டில நிலைமை சரியில்லை.. கவனம்… வாய் பதனம்.. கை பதனம்…’ சோமசுந்தரம் காதில் மெதுவாகச் சொல்லி வைத்தான்.
நண்பர்கள் வழியனுப்பி வைத்தனர்.
கம்பனி வாகனம் என்னைச் சுமந்து செல்வதை நண்பர்கள் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ணாடிக்குள்ளிருந்து தெரிந்தது.
நெஞ்சு கனத்தது.
‘இவர்களுக்காகவாவது திரும்பி வரவேண்டும்’
‘ஆனால் வரும்போது யாரோ ஒருவர் மாற்றலாகியிருப்பர்.. அல்லது ஊருக்குப் போயிருப்பர். எதுவும் நிரந்தரமில்லை… இருக்கும் காலத்து உறவு நிலை மட்டும் நெஞ்சுக்கு நெருக்கமாகவே இருக்கும்..
ஒரு இடத்தை ஒருவாரம் பார்க்காமல் திரும்பவும் பார்க்கையில் மாற்றங்களாய் தெரியும். ஊரிலிருந்து நகரத்திற்கு வரும்போது சந்திக்கின்ற சூழல்கள் போல வெளிநாட்டிலிருந்து பல வருடங்களுக்குப் பின் வந்தவனுக்கு எல்லாமே வித்தியாசமாகத் தெரிந்தது. ஒவ்வொருவரும் வித்தியாசமாக பார்ப்பது போல தெரிந்தது.. வழமைக்கு மாறாக ஆங்காங்கே இராணுவம், காவலர்கள் அதிகமாகவே நிற்பதும் யாராவது கைது செய்யப்படலாம் என்பது போன்ற பரபரப்பாகவும் இருந்தது.
இந்த அதிகாலைப் பொழுது இதமாக இருப்பினும் சூழல் பயத்தையே ஊட்டின.
வெளிநாட்டிலிருந்து வந்தவனிடம் ஆங்காங்கே கறந்து விடத் துடிக்கின்ற அதிகாரிகள்… வழிநெடுக புதிதாய் முளைத்த சோதனைச் சாவடிகள். அலைக்கழிப்புக்கள், அன்னியமாகியதான உணர்வுடனான பயணங்கள்.
ஏற்கனவே பணத்தை அக்காவின் பெயருக்கு அனுப்பிவிட்டு வந்ததால் பணம் பற்றிய பயம் இருக்கவில்லை. பணம் பிடுங்கிகளிடம் சமாளித்து வந்தாயிற்று. கொஞ்சம் பிசகினாலும் பிடித்துக் கொண்டு போய் விடுவார்களென்று நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். விசாரணை என்ற பேரில் சிறையில் காலவரையறையின்றி அடைத்து விட்டால் மீட்சியுமில்லை. விமானத்திலிருந்து இறங்கியதும் விமானநிலையத்தில் வாங்கிய இரண்டு ஜொனிவாக்கரையும் பிடுங்கி விட்டார்கள்.
சலிப்பாக இருந்தது.
ஆட்டோவில் வீட்டை நோக்கிய பயணத்தில் அடையாளமே தெரியாதபடி எல்லாம் மாறியிருந்தன. பனையோலையால் அடைத்திருந்த வேலி மதிலாகியிருந்தது. முற்றத்தில் நாவல் மரமில்லை. அக்கா பொருட்களை இறக்க உதவினாள். அம்மா சோகமாகப் புன்னகைத்து வரவேற்றாள்.
அக்காவின் குழந்தைகள் வெட்கத்தால் வெளியே வரவில்லை.
அப்பாவைக் காணவில்லை.
வெயில் கரைந்து மங்கிய ஒளிக்கீற்றாய் வானமிருந்தது. பனை ஓலைகள் காற்றில் சலசலத்தது.
கண்கள் தேடின.
அப்பா தேவையில்லாமல் அறைக்குள்ளேயே அடைந்திருப்பதை சூழல் சூசகமாகச் சொல்லியது.
அப்பா நான் வந்திருக்கிறேன் எனத் தெரிந்தும் வெளியே வராமல் உள்ளே அடைந்திருந்தது மனதைப் பிசைந்தது. அம்மா தேநீர் தந்தாள். அதன் சுவை சற்று வித்தியாசமாக இருந்தது. எங்கள் வீட்டு பசுவின் சத்தமுமில்லை. எல்லாம் மாறியிருந்தது..
‘மாட்டை வித்துப் போட்டம்.’
அக்கா சொன்னாள்.
‘ஏன்?’
‘பராமரிக்கக் கஷ்டம். அதுதான்..’
‘கஷ்டமோ? அதுக்குள்ள..’
‘இடம் பெயர வேண்டி வந்துட்டுது.. வந்து பார்க்கேக்கை ஆடுகள், நாய்கள் செத்துக் கிடந்தது. மாடு மெலிஞ்சு போய் பார்க்கப் பாவமாக இருந்தது. மனசளவில் களைச்சுப் போனோம்’
கொஞ்சம் நிறுத்தி விட்டுத் தொடர்ந்தாள் அக்கா.
சுந்தரமும் இறந்து விட்டதாகவும் அக்கா சொல்லியிருந்தாள். ‘இருந்திருந்தால் தோய்த்த உடுப்புக்களைக் கொண்டு வருகிற சாட்டில் வந்திருப்பான்’
‘சனம் கனக்க இடம்பெயர்ந்தும், வெளிநாட்டுக்கும் போட்டுதுகள்.. கிட்டினன் குடிச்சுக் குடிச்சு ஈரல் கருகிச் செத்துப் போட்டுது.. ஹாசிம் நானாவுமில்லை.’
மௌனமானாள்.
‘அவருக்கென்ன?’
‘சொல்ல தெரியேல்ல… எல்லாரையும் கட்டாயமாக போகச் சொல்ல அவரும் போட்டார்.. அவையளொருத்தரும் இங்கில்லை’
நண்பன் சொன்னது ஞாபகத்தில் வந்தது. எல்லாம் சொன்னாலும் வந்து பார்த்த பின்பு நிலையை ஊகித்துக் கொண்டேன்.
ஏதோ இழந்ததைப் போன்ற ஒரு உணர்வு.. அன்பாய் இருந்த உறவின் மாபெரும் இழப்பு…
யுத்தம், அலைக்கழிப்பு, அகதி வாழ்வு, இழப்பு, பட்டினி, உயிர் அச்சம் இவற்றுக்கப்பால் ஹாசி நானாவின் பிரிவு, ஊரில் யாருமற்றதான உணர்வு….
பசித்தது…
அம்மாதான் பரிமாறினாள்.
மூலையில் கடகத்துள் இலுப்பைக் கொட்டைகளைக் கொட்டி வைத்திருந்தார்கள். கிழக்குப் பக்கத்து மூலையில் அடைக்கோழி கத்தியது.
கிணற்றடிக்குப் போய்க் காலைக் கழுவி விட்டு துவாயால் முகத்தைத் துடைத்தபடி கிணற்றுள் எட்டிப் பார்த்தேன். பலாமரத்து இலைகள் கொட்டிக் கிடந்தன. தவளைகள் நீரில் நீச்சலடித்தன. இறங்கும் படிகள் பாசி படிந்தும், சிறியசெடிகளும் தெரிந்தன.. இறைத்துக் கனகாலமாயிருக்கும்.
வாசலில் காலைத் துடைத்து விட்டு அப்பாவின் அறைக்குள் நுழைந்தேன்.
ஹாசிம் நானாவின் நெருக்கமவர் அருகே இல்லையென்றதும் தாங்கிக் கொள்ளாதவாரய் தன்னைத் தானே சிறை வைத்துக் கொள்வது போல அடைந்து போயிருப்பது கஷ்டமாக இருந்தது. அப்பாவின் குணம், பிடிவாதம் தெரிந்ததால் எதுவும் சொல்லவில்லை.
அக்கா எப்பவாவது பேப்பர் எடுத்தால் அறைக்குள் வைத்து விட்டுப் போவாள். வளவுக் கோயிலுக்குப் பொங்கினால் பொங்கலை அறைக்குள் வந்து கொடுப்பாள்.
அறையின் ஜன்னலைத் திறந்து விட்டேன்.
சாய்மனைக் கட்டிலில் படுத்திருந்தபடியே நிமிர்ந்து பார்த்து விட்டு கண்ணை மூடிக் கொண்டார். அப்பாவை அறைக்குளிருந்து வெளிக் கொண்டு வந்து பழைய மாதிரி இருக்க உதவ வேண்டும்.. ஹாசிம் நானாவைத் தேட வேண்டும்… அவர் இருப்பாரா?
இங்கிருந்து போனவர்கள் ஓரிடத்திலேயே வாழ்வதாகவும் சொன்னார்கள். ஆனாலும் எங்கு தேடுவது? தன்னுடன் வேலை செய்யும் அபூபக்கரின் குடும்பத்தைக் கேட்டால் சொல்ல வாய்ப்பிருக்கிறது. நினைத்த மாத்திரத்தில் போய் விட முடியாது. பல இடங்களில் அனுமதி பெற வேண்டும். எல்லாம் இலகுவில் முடிகிற காரியமாகவும் தெரியவில்லை. பார்ப்போம் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன்.
இடம்பெயர்ந்த காலத்தில் அகதி முகாமிற்குத் தேடி வந்து விட்ட ஆசையாய் வளர்த்த நாயின் நன்றியை யார் தான் மறந்திருப்பர். மனிதர்களை அவர்களின் வேரடி மண்ணோடு பிடுங்கியபடி சென்று விட நேர்கையில் உயிர் அறுந்து போகும். ஹாசிம் நானாவிற்கும் நொந்திருக்கும். அழுதிருப்பார். உயிரற்ற உடலாய்த் தான் மக்களோடு மக்களாய், உறவோடு உறவாய் சென்றிருப்பார். அப்படியே இறந்துமிருக்கலாம். உயிரற்ற உடலாய் எங்கோ வாழ்ந்து கொண்டுமிருக்கலாம். அப்பாவை நினைக்கையில் பாவமாய் இருந்தது. தன் இறுதிக் காரியங்களை பொறுப்பெடுத்து செய்யச் சொல்லி அன்றொரு நாள் கெஞ்சியது ஞாபகம் வந்தது. பாவம் நானா… அப்பாவினுள் விதைக்கப்பட்ட நம்பிக்கையீனங்களை அவர் விட்டு விலகி வரவேண்டும். மீளவும் முன்னர் போல அப்பா வலம் வரவேண்டும்.
‘கடவுளே!’ கைகள் தானாவே கூப்பியது.. எங்களின் கடவுள் நம்பிக்கை மெய்யெனில் எல்லாம் சரியாக நடக்க வேண்டும்.
காகம் கத்தியது போலிருந்தது. சுவர்ப்பல்லி ஏனோ ‘ச்சு’ கொட்டியது.
நானாவைத் தேடிப் போகும் அந்த நாளில் அப்பா குளிர்ந்து விறைத்தபடி கட்டிலில் அசைவற்றுக் கிடந்தார்.
(யாவும் கற்பனை)
– முல்லைஅமுதன் – 06/09/2020