இந்த வருடத்தின் குளிர்காலத்தை
அவர்கள் நெடுஞ்சாலைகளில் கழிக்கிறார்கள்
அது தேச வரலாற்றில்
நீண்ட ஒரு ட்ராபிக் ஜாம்
இரவின் பனியில் அவர்கள் நிலத்தின் மூக்கிலிருந்து வெப்ப ஆவி சீறுகிறது
கடுங்குளிரில் சில முதியவர்களின் இதயம் உறைந்து போயிருக்கின்றன
பதிலாக கந்தல் மற்றும் சுள்ளிகளில் நெருப்பு பற்றவைக்கப்படுகிறது
கார மிளகாய்களுக்கும் சுட்ட ரொட்டிக்கும் இடையில் முழங்குகிறார்கள்
தங்கள் நிலத்தில் வீசும் சூறாவளி
மழைக்காலநதியின் பேரோசை மேலும்
பள்ளத்தாக்குகளின் எதிரொலிகளால்
உருவான அக்குரல் வானைத் தொடுகிறது
விண்ணவர்கள் இறங்கும் அருள் காலம் வரப்போவதில்லை என்பதை அறிந்திருக்கிறார்கள்.
மாறாக நெடுஞ்சாலை விரிசல்களில் அவை வயலாகும்படி இப்போது அவர்கள் சிறுவிதைகளைப் பயிரிடுகிறார்கள்
வீறு கொண்ட இந்த மந்தைகளை
எப்பிடியும் தொழுவத்திற்கு விரட்டி விடலாம் என இடையர்கள் காத்திருக்க
தானியங்களின் மீது தங்கமுலாம்
பூசித்தருவதாக வாக்களிப்பவர்கள்
காணியிலுலகிற்கே கஞ்சாப் பயிரிடலாம் என உற்சாகிக்கிறார்கள்
அஹிம்சை துயருறுகிறது
முற்காலத்தில் இத்தேசத்தில் இடுப்புக்கச்சையணிந்து கைத்தடியுடன் திரிந்த ஒரு மனிதன்
சுட்டுக்கொல்லப்பட்டிருந்தான்
இனியொரு தோட்டா ஆயிரம் ஹெக்டேர்களைத் தாண்டி
சிறுதானியக் குதிர்களைத் துளைத்து
உங்கள் வங்கிகள் வாக்குச் சாவடிகள் பாலங்களின் மீதேறி ஒடுங்கிய ஒரு அடிவயிற்றில் பாயுமானால்
அண்டத்தில் என்ன அவதாரங்களே அகிலத்திலும் பெருவெடிப்புதான்.
யவானிகா ஸ்ரீராம்