செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தூரமும் அருகே… | சிறுகதை | விமல் பரம்

தூரமும் அருகே… | சிறுகதை | விமல் பரம்

11 minutes read

“மோதிரத்தைக் காணேல இவன்தான் எடுத்திருப்பான். கள்ளனை வீட்டில வைச்சிருக்காதே கலைச்சுவிடு. என்னைப் பார்க்க ஒருத்தனும் வேண்டாம்” அப்பா சொன்னதைக் கேட்டதும் திகைத்து விட்டேன்.

“அண்ணை, சத்தியமாய் நான் எடுக்கேல. ஐயாதான் கழட்டி மேசை லாச்சிக்குள்ள வைச்சிட்டு நான் எடுத்திட்டன் எண்டு என்னை ஏசுறார். மத்தியானம் குளிச்சு சாப்பிட்ட பிறகு குளிக்கேலை குளிக்க வாத்துவிடு எண்டு கேக்கிறார். குளிச்சாச்சு நாளைக்கு குளிக்கலாம் எண்டு சொல்ல கோவம் வருகுது. நீ வீட்டில நிக்கவேண்டாம் போடா என்ர பிள்ளை என்னைப் பார்க்கும் எண்டு ஏசிக்கொண்டே இருக்கிறார் கஷ்டமாயிருக்கு நான் போறன் அண்ணை” என்றான் அப்பாவுக்கு உதவியாய் இருக்கும் கோவிந்தன்.

அலுவலகத்தில் இருந்து களைத்து வந்த எனக்கு அப்பா மீது கோபம்தான் வந்தது. எத்தனை பேரை ஒழுங்கு செய்தாச்சு. ஏதாவது குற்றம் சொல்லி ஒருத்தரையும் இருக்க விடுறதில்லை.

“நாங்கள் வேலைக்கும், பிள்ளைகள் ஸ்கூலுக்கும் போக ஏலுமான நேரம் நீங்கள் வீட்டில தனிய இருந்தீங்கள். இப்ப வயதும் போய் வருத்தங்களும் அதோட மறதியும் வந்திட்டுது. எழுவத்தைஞ்சு வயசாச்சு இனி தனிய இருக்க மாட்டீங்களப்பா. பிறகு ஏன் வாறவையளை கலைக்கிறீங்கள்”

கோபத்தில் கத்திக்கொண்டே மேசை லாச்சியைத் திறந்து அங்கேயிருந்த மோதிரத்தை எடுத்துக் காட்டினேன்.

“கையில இருந்தது எப்பிடி அங்க போச்சு “ என்னிடமே கேட்டார்.

“நீங்கள்தான் கழட்டி வைச்சிட்டு மறந்திட்டீங்கள்”

“ஆக்கள் இல்லாமல் மாமாவைத் தனிய விடேலாது. மறதி வந்தநேரம் தனிய இருக்கேக்க சாப்பாடு எடுத்து மேசையில வைச்சிட்டுப் போறதுதானே. ஒருநாள் வேலையால வர காஸ் எரிஞ்சு கொண்டிருக்குது. சாப்பாடு தரேல சமைச்சனான் எண்டு சொல்லுறார். வைச்சிட்டுப் போன சாப்பாட்டைத் தேடினால் சுவாமித் தட்டில இருக்குது. சமைச்சிருக்கிறார் எண்டு நினைக்கவே பயமாயிருக்கு. கதவைப் பூட்டிக் கொண்டு வீட்டுக்குள்ள தனிய இருக்கிறவருக்கு நாங்கள் வேலையால வருமட்டும் என்ன நடந்தாலும் தெரியாது. அடுத்த ஆளை உடன தேடவேணும். எங்க போய் தேடுறது” என்றாள் ராகினி.

வெள்ளவத்தையில் சொந்தவீட்டில் இருந்தாலும், பிள்ளைகளின் படிப்புச் செலவு, மற்ற செலவுகளுக்கு இருவரும் வேலைக்குப் போவதால்தான் சமாளிக்க முடிகிறது. அப்பாவுக்கு இதெல்லாம் தெரியும். முன்பெல்லாம் எங்களுக்கு எவ்வளவு உதவியாய் இருந்தார்.

“நீங்கள் வேலைக்குப் போட்டு வாங்கோ. மற்ற வேலையளை நான் பார்க்கிறன்”

என்பார்.

இரண்டு வருடமாய் அவரின் குணங்கள் மாறி இந்த ஆறுமாதமாய் தாங்க முடியவில்லை. பிள்ளைகளோடும் பிரச்சனைதான். அன்று மூத்தமகன் பாடசாலைக்குப் போக ஆயத்தமாகி புத்தகப்பையை மேசையில் வைத்துவிட்டுப் போய் சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தால் வைத்த இடத்தில் பையைக் காணவில்லை. எங்கு தேடியும் இல்லை. எல்லோருக்கும் நேரமாகி விட்டது.

“அப்பப்பான்ர அறைக்குள்ள பாரடா” ராகினி சொன்னாள்.

“அங்க வைக்கேல மேசையிலதான் வைச்சனான்” என்றான் மகன்.

“வைச்ச இடத்தில காணேல எண்டால் எங்க போகும். அப்பா அவன்ர பையைக் கண்டனீங்களே” நான் அப்பாவிடம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ராகினி அப்பாவின் அறைக்குள் போய் புத்தகப்பையோடு வந்தாள்.

“கட்டில் மேசையில இல்லை எண்டு அலுமாரியைத் திறந்து பார்க்க அதுக்குள்ள இருக்குது”

“ஏன் அப்பப்பா எடுத்தனீங்கள்” மகன் கேட்டான்.

“அது என்ர பிள்ளையின்ர பை அதுதான் கவனமாய் எடுத்து வைச்சனான்” என்றார்.

“அதுக்கு அப்பான்ர பையை எடுங்கோ. என்ரை பையை எடுக்காதேங்கோ”

என்ன சொன்னாலும் பேசாமல் இருக்கமாட்டார். ஏதாவது செய்து கொண்டிருப்பார்.

“விடிய நாலுமணிக்கு எழும்பினாலும் நெடுகவும் பிந்திப் போய் மனேஜரிட்ட ஏச்சு வாங்கிறன்” முணுமுணுத்துக்கொண்டே வேலைக்குப் போவது பழக்கமாகி விட்டது ராகினிக்கு.

“வேலைக்கு ஓமெண்டு வாற ஆக்களை வேண்டாம் எண்டு துரத்தினால் என்ன செய்யிறது. நாங்கள் மாறி மாறி லீவு போட்டிட்டு கொஞ்ச நாள் பார்க்கலாம். பிறகு வேலைக்குப் போக வேணுமே. நான் சொல்லுறதைக் கேளுங்கோ. மாமாவை முதியோர் இல்லத்தில விடுவம்” இப்போதெல்லாம் ராகினி இதையே அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

“அம்மா இல்லாமல் சின்னவயசில இருந்து குறையில்லாமல் என்னை வளர்த்தவர். என்னெண்டு விடுறது எங்களை விட்டிட்டு அங்க இருப்பாரே”

“பகல் முழுவதும் கதைச்சுப்பேச ஒருத்தரும் இல்லாமல் தனிய இருக்கிறார். அங்க விட்டால் அவரைப்போல வயது போன ஆட்களோட கதைச்சுக் கொண்டிருப்பார். நாங்களும் பயமில்லாமல் வேலைக்குப் போகலாம். அடிக்கடி போய் பார்த்து வருவம். யோசிச்சுக் கொண்டிருக்காமல் விடுவம்”

எனக்கு மனசு கேட்கவில்லை. ஆனாலும் இனி துணையில்லாமல் தனிய வீட்டில் விட முடியாது. ஏதாவது முடிவு எடுக்கவேண்டும். நன்றாக யோசித்து ராகினி சொன்னமாதிரி விடலாம் என்று தீர்மானித்தேன்.

என்னோடு வேலை செய்யும் ராகவனும் தந்தையை முதியோர் இல்லத்தில் விட்டிருக்கிறான். அன்று சனிக்கிழமை லீவு நாள். விபரம் அறிய அவனிடம் சென்றேன்.

“அங்கிளைப் போய் பார்க்கிறனியே எப்பிடியிருக்கிறார்”

“அவருக்கென்ன எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அங்க சந்தோஷமாய் இருக்கிறார். நேரம் இருக்கேக்க போய் பார்த்திட்டு வாறனான்.வேலைக்குப் போற எங்களுக்கு இப்ப நிம்மதியாய் இருக்கு” என்றான்.

“அப்பாவையும் சேர்க்கவேணும் அவரை வீட்டில வைச்சு சமாளிக்க ஏலாமல் இருக்கு. தான் நினைச்சதுதான் செய்யிறது எங்கட சொல்லும் கேக்கிறதில்லை. தனிய விட்டிட்டு எங்களாலும் நிம்மதியாய் வேலைக்குப் போகேலாமல் இருக்குடா” தயங்கியபடி சொன்னேன்.

“அதுக்கென்ன அங்கிளையும் அப்பாவோட விடலாம். தனிய வீட்டில அடைச்சு வைக்காமல் அங்க நிறைய ஆட்களோட விட்டால் அவர்களுக்கும் சந்தோஷமாய் பொழுது போகும். நானும் வாறன் போய் சேர்த்து விடுவம்” அவன் சொன்னதைக் கேட்டதும் நிம்மதிப் பெருமூச்சோடு நிமிர்ந்தேன்.

எங்களுக்கு அருகிலுள்ள கதிரையில் வந்திருந்து எங்களையே கவனித்துக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். அவரைக் கண்டதும் ராகவன்

“ஊரிலயிருந்து மாமா வந்திருக்கிறார்” என்றான்.

அவர் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ராகவன் மாமாவிடம்

“இவனும் உங்கட ஊர்தான் மாமா. இவன்ர அப்பாவை உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் அவர் பெயர்…” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை படாரென்று எழுந்து என் அருகில் வந்தார்.

“நீ மாணிக்கத்தின்ர மகன் தானே” வியப்போடு கேட்டார்.

“ஓம் அங்கிள். உங்களுக்கு அப்பாவைத் தெரியுமா” நான் கேட்டதும் அவரின் பார்வையில் ஒரு கணம் வெறுப்புத் தோன்றி மறைந்ததை உணர்ந்தேன்.

“நல்லாய்த் தெரியும். நல்ல பிள்ளைகளடா நீங்கள். உங்களை இந்த நிலைமைக்கு வளர்த்து ஆளாக்க அவையள் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்திட்டீங்களே. வயது போய் வருத்தங்களும் வர உங்களோட வைச்சுப் பார்க்கிறதுக்கு கஷ்டமாய் இருக்கோ… வயது போனால் அவையளும் குழந்தைப் பிள்ளைகள்தானடா. உங்களுக்குப் பிறந்த பிள்ளையள் என்ன செய்தாலும் பொறுத்து இருப்பீங்கள். உங்களைப் பெத்ததுகளுக்கு வயது போனால் பார்க்கேலாது எண்ட உடன உங்களுக்கு எல்லாம் முதியோர் இல்லம் ஞாபகம் வந்திடும். இவன் பெத்த தகப்பனையே பார்க்கிறது கஷ்டம் எண்டு முதியோர் இல்லத்தில அநாதையாய் விட்டிருக்கிறான். மாணிக்கம் உன்னை வளர்த்தவன்தானே எண்டு தூக்கிப் போட வந்தியா” என்றார் கோபத்துடன்.

“என்ன சொல்லுறீங்கள். நான்…நான்” அவர் சொன்னதைக் கேட்டதும் தலையில் இடி விழுந்ததுபோல் உடல் நடுங்கியது. வார்த்தைகள் தடுமாறின.

“உனக்குத் தெரியாதா அப்பா சொல்லவேயில்லையா. போய் அப்பாட்ட கேளடா” என்றார்.

“அப்பாவை உங்களுக்குத் தெரியும் எண்டால் என்னைப் பற்றியும் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் அங்கிள். இவ்வளவு நாளும் இந்த விஷயத்தை சொல்லாத அப்பா இனிமேல் சொல்லுவாரா… பிளீஸ் அங்கிள் உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்கோ” கெஞ்சினேன்.

“அவன் சொல்லியிருக்க மாட்டான் எனக்குத் தெரியும். தன்ர வாரிசாய் உன்னை எடுத்து உயிராய் வளர்த்தவனுக்கு நீ வளர்ப்பு பிள்ளை எண்டதே ஞாபகத்தில இருக்காது”

சொன்னதைக் கேட்டதும் இதயம் வலித்தது.

“நான் சொந்த தாய் தகப்பனில்லாத அநாதையா.. என்னை அநாதை இல்லத்தில இருந்துதான் கொண்டு வந்தார்களா..” தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் படபடத்தேன்.

“அநாதை இல்லம் போக வேண்டியவனை தடுத்தவன். நாட்டில நடந்த சண்டையில எத்தனையோ குடும்பங்களோட உன்ர குடும்பமும் பலியான போது நீ மட்டும் தப்பி அநாதையாய் நிண்டாய். உன்ர சொந்தக்காரர் யாருமே பொறுப்பு எடுக்கேல. அநாதை இல்லத்தில விட நினைச்சபோதுதான் பிள்ளை இல்லாமல் ஏங்கிக் கொண்டிருந்த மாணிக்கம் உன்னை தன்ர பிள்ளையாய் சட்டப்படி உரிமையாக்கினான். விபரம் தெரியாத குழந்தையை வளர்க்கிறது கஷ்டமில்லை. மூன்று வயது குழந்தை நீ. உன்னோட எவ்வளவு கஷ்டப்பட்டான் தெரியுமா. வந்த புதிசில இவையளோட ஒட்டவே மாட்டாய். அம்மா அப்பா எண்டு நீ உன்னைப் பெத்தவையைத் தேடி அழுவாய். நான்தாண்டா உன்ர அப்பா. இவள்தான் உன்ர அம்மா எண்டு சொல்லிச் சொல்லி தோளிலையும் மார்பிலையும் உன்னை சுமந்து வளர்த்தவையள். முதல் முதல் நீ அவனை அப்பா எண்டு கூப்பிட்டாய் எண்டு என்னிடம் சொல்லி எவ்வளவு சந்தோஷப்பட்டான் தெரியுமா.

உனக்காகத்தானே சொந்த ஊரை விட்டு சொந்தங்களை விட்டு செய்த வேலையையும் விட்டு எல்லா சொத்துகளை வித்து உன்னோட இரண்டு பேரும் கொழும்புக்கு வந்தவை. இங்க வீடு வாங்கி வேலையையும் எடுத்துக் கொண்டு இருந்தவர்கள் பிறகு ஊருக்குப் போகவில்லை.ஏன் தெரியுமா உன்னைப் பற்றிய உண்மைகள் மற்றவர்கள் மூலம் உனக்குத் தெரியக் கூடாது எண்டு. கன காலத்துக்குப் பிறகு நான் இங்க வந்தபோது வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனான். என்ர பிள்ளை நல்லாய் வளர்ந்திட்டான் எண்டு உன்னைக் காட்டி சந்தோஷப்பட்டான். அப்ப பார்த்ததாலதான் இண்டைக்கு உன்னை அடையாளம் தெரிஞ்சுது. பிள்ளைக்காக ஏங்கி அநாதையாய் இருந்த உன்னை எடுத்து தங்கட பிள்ளையாய் வளர்த்ததற்கு இண்டைக்கு நீ அவனை அநாதையாக்கிறாய். உனக்குத் தெரியக் கூடாது எண்டு தன்ர பிள்ளையாய் வளர்த்தானே. இப்ப அவன் உனக்குப் பாரமாய் போயிட்டானா”

அவர் சொன்னதைக் கேட்டு துடித்துப் போனேன். எனக்குத் தெரியாமல் எவ்வளவு பெரிய கொடுமையைச் செய்ய இருந்தேன் கடவுளே…..

இன்று இங்கு வரும்போது இல்லத்தில் விடப்போகிறேன் என்று சொன்னதும் அப்பா என் கண்களைக் கூர்ந்து பார்த்தாரே தவிர ஒன்றும் சொல்லவில்லை. அந்த பார்வையில் எத்தனை வலி இருந்திருக்கும். நினைக்கும்போதே நெஞ்சு பதறியது. என் மனம் அவர் காலடியில் விழுந்து கதறியது. தாங்க முடியாத வேதனையோடு எழுந்தேன். வார்த்தையால் நன்றி சொல்ல முடியாமல் மாமாவின் கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டேன். தலை குனிந்தபடி அவ்விடத்தை விட்டு வெளியேறினேன்.

வீட்டுக்குப் போக பஸ்ஸில் ஏறி ஜன்னல் அருகிலுள்ள இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி கண்களை மூடினேன். அப்பாவின் நினைவு சூழ்ந்து கொண்டது. ஏன் அப்பா இதை என்னிடம் சொல்லவில்லை. ஒரு நாளாவது எனக்கு சந்தேகம் வரும்படி என் மனம் நோக நடந்திருப்பாரா… ஆசைப்பட்டதெல்லாம் தன்னால் முயன்ற அளவுக்கு நிறைவேற்றியிருக்கிறார். முடியாதபோது பொறுமையாய் எடுத்து சொல்லியிருக்கிறார். அவரின் அன்பில் ஏதாவது குறை கண்டேனா… யோசித்துப் பார்த்தேன். அப்பு.. ராசா… என்று அவர் அழைக்கும் பாசக்குரல்தான் காதில் ஒலித்தது. மறதி வந்த இந்த நேரங்களிலும் என் நினைவுகள் அவர் ஆழ் மனதில் பசுமையாய் பதிந்திருக்கிறது. என்ர பிள்ளை என்னைப் பார்ப்பான் என்ற நம்பிக்கையில்தானே மற்றவர்களை கிட்ட நெருங்கவிடாமல் துரத்திறார்.

பஸ்ஸின் குலுக்கலில் கண்விழித்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். காற்றோடு மழையும் லேசாக பெய்து கொண்டிருந்தது. சுழன்றடித்த குளிர்காற்று முகத்தில் பட்டபோது கொதிக்கும் மனதுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது.

“அண்ணை குளிருது ஜன்னலை மூடிறீங்களா பிளீஸ் குழந்தை அழுகிறான்” குரல்கேட்டு ஜன்னலை மூடி விட்டு திரும்பினேன். எதிர் இருக்கையில் ஒரு வயதுக் குழந்தையோடு தாயும் தந்தையும் அமர்ந்திருந்தார்கள். தாய் குழந்தையை தன் மடியில் வைத்து விளையாட்டுக் காட்டினாலும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தான். பக்கத்தில் இருந்த தந்தை,

“ஏன் இப்பிடி அழுகிறான். நான் வைச்சிருக்கிறன் தா. அப்பாட்ட வாடா கண்ணா” குழந்தையை வாங்கி தோளில் போட திமிறி திமிறி அழுது அடம் பிடித்துக்கொண்டிருந்தது. அவன் தட்டிக் கொண்டேயிருந்தான்.

அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து நித்திரைக்குப் போனது குழந்தை.

“தாங்கோ நான் மடியில வைச்சிருக்கிறன்” தாய் கேட்டபோது

“வேண்டாம் கை மாறினால் எழும்பிடுவான் நான் வைச்சிருக்கிறன் கொஞ்ச நேரம் இப்படியே படுக்கட்டும்” என்றான் குழந்தையின் தலையை கோதி அணைத்தபடி.

இப்படித்தானே நானும் அப்பாவின் மடியில் அடம் பிடித்து அழுது தூங்கி இருப்பேன்.

எங்களுக்கு குழந்தைகள் பிறந்து வளரும்போதுதான் அம்மா அப்பா எங்களோடு பட்ட கஷ்டங்கள் தெரியும் என்பார்கள். தெரிந்தும் எப்படி எல்லாவற்றையும் மறந்தேன்.

இறங்க வேண்டிய இடம் வந்ததும் எழுந்து கீழே இறங்க முயன்றேன். எனக்கு முன்னால் ஒரு வயோதிபரின் கையைப் பிடித்து அணைத்தபடி மெதுவாக கீழே இறங்க உதவி செய்து கொண்டிருந்தவனைப் பார்த்தேன். அவரின் மகனாய் இருக்கலாம். பக்கத்தின் மகன் இருக்கிறான் என்ற தைரியத்தில் நடந்து சென்றவரைப் பார்த்ததும் அப்பாவும் இதுக்குத்தானே ஆசைப்பட்டிருப்பார். தன்னைத் தாங்க மகன் இருக்கிறான் என்று கனவோடு இருந்திருப்பார். அதைச் சுக்குநூறாய் உடைக்கிற மாதிரி ஒரு முடிவை ஏன் எடுத்தேன். நினைத்து நினைத்து நொந்து போனேன்.

வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்ற என்னைக் கண்டதும் ராகினி அருகில் வந்தாள்.

“இடம் கிடைச்சுதா எல்லா ஒழுங்கும் செய்து முடிஞ்சுதா. எப்ப போகவேணும்”

கேள்வி கேட்டவளுக்கு பதில் சொல்லாது

“அப்பா எங்க” கேட்டேன்.

“உள்ள போய் பாருங்கோ. பிள்ளைகளை ரீவி பார்க்க விடாமல் தான் பார்க்கப் போறன் எண்டு பிள்ளைகளோட மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்” என்றாள்.

நேரம் பார்த்தேன் ஏழுமணி.

“படிக்கிற நேரத்தில இங்க என்ன வேலை. போய் படியுங்கோ” சத்தம் போட்டதும் எழுந்து உள்ளே போய்விட்டார்கள். என் குரலைக் கேட்டதும் ரீவியின் சத்தத்தை குறைத்து விட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார் அப்பா.

அருகில் போய் அமர்ந்து அவர் கையை எடுத்து என் கைக்குள் வைத்துக்கொண்டேன்.

“எனக்குத் தெரியக் கூடாது எண்டு எவ்வளவு பெரிய உண்மையை என்கிட்ட மறைச்சு வைச்சிருக்கிறீங்கள். இப்ப எனக்கு எல்லாம் தெரியுமப்பா. ஆனால் எனக்குத் தெரியும் எண்டு நானும் உங்களுக்கு சொல்லமாட்டேன். நான் எப்பவும் உங்கட பிள்ளைதானப்பா” மனதோடு சொல்லிக்கொண்டேன்.

என் முகத்தில் ஓடிய உணர்வுகளை புரிந்து கொண்டாரோ தெரியவில்லை. ஒரு முறை கண்களை மூடித் திறந்தார். பார்வையில் ஒரு சந்தோஷத்தைக் கண்டேன்.

பிடித்திருந்த என் கைகளை இறுகப் பிடித்தபடி அப்பா சொன்னதைக் கேட்டு நான் உடைந்தே போனேன்.

“என்னை விட்டிட்டு நீ இருக்கமாட்டாய் எண்டு எனக்குத் தெரியும் ராசா…”

.

நிறைவு…

.

.

.

விமல் பரம்

.

.நன்றி – தாய்வீடு இதழ் – ஐப்பசி 2020

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More