செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் முரட்டுக்காளை | சிறுகதை | ஏ.கல்யாணசுந்தரம்

முரட்டுக்காளை | சிறுகதை | ஏ.கல்யாணசுந்தரம்

3 minutes read

“தாத்தா… தாத்தா… டோக்கன் வாங்கிட்டேன். நாளைக்கு பதினோரு மணிக்கு நாம அங்க இருக்கணும்.” என்று சந்தோஷமாக ஓடி வந்தான் கணேசன்.

“அப்படியா, சரிப்பா கணேசா, ஆனா காலைலயிருந்து மருது கத்திகிட்டே இருக்கான்.. என்னான்னே தெரியல.”

“தண்ணி வச்சீங்களா, தீனி போட்டீங்களா..?” என்றான் கணேசன்..

“எல்லாம் வைச்சாச்சு, ஆனாலும் கத்துறான். கண்ணு பக்கத்துல ஏதோ அடி பட்டிருக்கு.. டாக்டர வர சொல்லிருக்கேன்..” என்று தாத்தா சொன்னவுடன் பதறி அடித்து மருதுவிடம் ஓடினான் கணேசன்.

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் கணேசனும், அவன் தாத்தா ராமசாமியும் வளர்க்கும் சல்லிக்கட்டுக் காளை மருது. சற்று வறுமையில் இருந்தாலும் தங்கள் குடும்ப உறுப்பினராக நினைத்து மருதுவின் தீவனத்திற்கும் இதர செலவினங்களுக்கும் குறைவில்லாமல் செய்து வந்தனர்.

கால்நடை மருத்துவர் வந்து பார்த்துவிட்டு..

“ஐயா, கண்ணுக்கு பக்கத்துல ஏதோ குத்தியிருக்கு .. மருந்து போட்டிருக்கேன் சரியாயிடும்” என்றார்..

“சார், நாளைக்கு மேலூர்ல்ல ஜல்லிக்கட்டு.. போலாமா” என்றான் கணேசன்..

“இல்லப்பா வேண்டாம்.. மாடு அடிக்கடி இடது கண்ண கொஞ்சம் மூடுது… இடது பக்கத்துலயிருந்து யாராவது வந்தா அவனுக்கு சரியா தெரியாது.. இரண்டு மூணு நாள்ல சரியாயிடும் அப்பறம் போகலாம்..” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் மருத்துவர்.

“கணேசா, மருதுக்கு கண் சரியாகட்டும், அடுத்த வாரம் நல்லூர் ஜல்லிக்கட்டுக்கு போயிக்கலாம்” என்று தாத்தா சொல்லவும், வருத்தத்துடன் அமர்ந்தான் கணேசன்.

அடுத்த நாள் காலை 5:30 மணி..

தாத்தா எழுந்து, அருகில் கணேசன் இல்லாததைப் பார்த்து சிந்தனையுடன் வெளியே வந்தார். வாசலில் மருதுவும் இல்லை என்றவுடன் சற்றே பதற்றத்துடன் சுற்றும் முற்றும் தேடினார்..

சற்று துாரத்தில், மருதுவின் இடது புறத்திலிருந்து கணேசன் நடந்து வர மருது செல்லமாக தனது திமிலை அசைத்துக் கொண்டிருந்தது.

தாத்தாவை பார்த்து ஆனந்தமாய் ஓடி வந்த கணேசன், “தாத்தா, மருதுக்கு இடது பக்கத்துலயிருந்து வந்தாலும் நல்லா தெரியுது தாத்தா.. காலைல நாலு மணியிலிருந்து பழக்கிக்கிட்டுருக்கேன்..இன்னைக்கு போலாம் தாத்தா, நீங்க வேணா நின்னு பாருங்க..”

தாத்தா மருதுவின் பின்னிருந்து இடப்புறம் வர மீண்டும் செல்லமாக தனது திமிலை அசைத்தது மருது.

“போலாம் தாத்தா, மருது கண்டிப்பா ஜெயிப்பான்” என்றான் கணேசன் உறுதியுடன்..

தாத்தா அரை மனதுடன் தலையசைத்தார்..

மேலூர் சல்லிக்கட்டு திடல்.

காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அற்புதமாகப் பிடித்த வீரர்கள் மற்றும் யாருக்கும் அடங்காத காளைகள் என்று விளையாட்டுச் சிறப்பாக நடைபெற்றது.

கணேசன் தங்களது சுற்றுக்காக ஆவலுடன் காத்திருக்கும்போது..

அடுத்தது வண்டியூர் ராமசாமி காளை மருது என்று அறிவிக்கப்பட்டது..

மருது அவிழ்க்கபட்டு, கூட்டத்தின் ஆரவாரத்தின் நடுவே கம்பீரமாக நடந்து யாருக்கும் சிக்காமல் சுற்றி வந்தது..

அதிக காளைகளை அடக்கிய வீரர் ஒருவர் மருதுவின் இடப்புறமாக வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் திமிலைப் பிடித்து ஏற.. கணேசன் சற்றே இறுக்கமானான்..

ஆனால், மருது சுதாரித்துக்கொண்டு அந்த வீரனை அனாயாசமாகத் தூக்கி எறிந்தது. அடுத்த சில வினாடிகள் மருதுவை யாரும் நெருங்க முடியாததால்.. மருது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டது. மேலும், மருது அதிக நேரம் யாராலும் அடக்க முடியாமல் மற்றும் அதிக சுற்று சுற்றி வந்ததால் போட்டியில் முதல் இடம் பிடித்தாக மருதுக்கு 3 பவுன் தங்கச் சங்கிலியும் வழங்கப்பட்டது.

கணேசன் சந்தோஷமாக மருதுவை கட்டி அணைத்தபடி தாத்தாவிடம், “தாத்தா.. நீங்க மருத கூட்டிட்டு வீட்டுக்கு போங்க, நான் மதுரைக்கு போய் அக்கா கிட்ட இந்த செயின குடுத்துட்டு வர்றேன்.” என்றான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணமான அவன் சகோதரிக்கு அந்தச் சங்கிலியை வழங்க வேகமாக ஓடிய கணேசனை பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டே தாத்தா மருதுடன் நடந்தார்.

மருது எல்லாவற்றையும் உணர்ந்தது போல் கம்பீரமாக நடந்தது.

நிறைவு..

நன்றி : ஏ.கல்யாணசுந்தரம் | சிறுகதைகள்.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More